புதன், 16 டிசம்பர், 2015

ஜெயலலிதா: எந்தநேரத்திலும்,உங்களுடனேயே இருப்பேன்..கலங்காதீர்..எண்ணம் முழுவதும் உங்களை பற்றியே....

சென்னை :எந்த நேரத்திலும், உங்களுடனே இருப்பேன்; கலங்காதீர். என்னுடைய எண்ணம் முழுவதும், உங்களை பற்றியதாகவே இருக்கிறது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: வெள்ள சேதங்களில் இருந்து, மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிற பெரும் பணியில், அரசு முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறது. நிவாரணப் பணிகளில், எல்லாரும் பங்கேற்கும் வகையில், சமூகத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற பொருளுதவியையும், உடல் உழைப்பையும் வழங்கி வருகின்றனர். நிவாரணப் பணிகளில், தன்னலமின்றி ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.அ.தி.மு.க., தொண்டர்கள் ஒவ்வொருவரும், தங்களால் இயன்ற அளவுக்கு, மக்கள் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க., - எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை, நிவாரண நிதியாக வழங்குவர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


ஜெ., ஆடியோ பேச்சு 'வாட்ஸ் ஆப்'பில் வெளியீடு: முதல்வர் ஜெயலலிதாவின் ஆறுதல் பேச்சு, 'வாட்ஸ் ஆப்' - ஆடியோ மெசேஜாக வெளியிடப்பட்டுள்ளது.

வரலாறு காணாத வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. செம்பரம்பாக்கம் ஏரி நீரை முறையாக நிர்வகிக்காததே, இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், நிவாரண பொருட்களில், ஜெ., ஸ்டிக்கர் ஒட்ட, அ.தி.மு.க.,வினர் காட்டிய ஆர்வம், மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மிகப் பெரிய பேரிடர் நடந்த பின்னும், முதல்வர் மக்களை சந்திக்காமல் இருப்பது, கடும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது.இதற்கு பதில் அளிக்கவும், மக்களின் அதிருப்தியை போக்கவும், மக்களுக்கு ஆறுதல் கூறும் விதத்தில், முதல்வரின், 2.16 நிமிட பேச்சை, 'வாட்ஸ் ஆப்'பில், ஆடியோ மெசேஜாக, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: