ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

தேசியத்தை உண்மையாகவே நேசிப்பவள் என்பதால் மஹிந்தவின் ஆள்' என எனக்கு நாமம் சாத்திவிட்டார்கள்'' தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி
கேள்வி : இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கொள்கை என்ன?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - தமிழர் விடுதலைப் புலிகள் இரண்டும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு, தேசியம் என்ற இரண்டையுமே முன்வைத்து முதன்மைப்படுத்தி வந்துள்ளன. அது புலிகள் பலமாக இருந்தபோது வைத்த கொள்கை.
அதாவது எமக்குரிய சுயநிர்ணய உரிமை கிடைக்குமானால் அபிவிருத்தி என்பது பெரிய விடயமல்ல. ஓரிரு வருடத்தில் அபிவிருத்தி முடிந்துவிடும் என்று.
அது சரி. அந்த காலகட்டத்தில் இப்போ எமக்கென்று இருந்த பலம் போய் பலவீனமான கட்டத்தில் ஆட்சியில் இருப்பவர்களுடன் பேசித்தான் தீர்வு காண வேண்டும். அதேநேரம் மக்களுடைய தேவைகள் பல இருக்கின்றன.
30 வருடகாலமாக சீரழிக்கப்பட்டுக்கொண்டேபோய் இறுதிக்கட்ட சீரழிவும் ஏற்பட்ட பின்பு - இன்னும் மக்கள் மர நிழலில் வாழ முடியாது. அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - அப்போதுதான் காலவோட்டத்தில் ஏனையோருடன் சமமாக எதிர் நிற்க முடியும். அதை எமது தலைவர்கள் ஏன் உணர்கிறார்கள் இல்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.
கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் உரிமைகளுக்காகச் செயற்பட்டதா? உங்களை ஏன் ஒதுக்கினார்கள்?
தமிழ் மக்கள் சுயாட்சி கோரினர். அதற்குரிய பலமே போய்விட்ட நிலையில் பலனளிக்கக் கூடிய அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும். அதுவும் முன் வைத்ததாக இல்லை.
தீர்வுத் திட்டம் தயாரிக்கிறோம் தயாரிக்கிறோம் என கடந்த காலங்களை ஓட்டிவிட்டு, பின்னர் தயாரித்தோம் என ஓரிரு மாதங்களை கடத்திவிட்டது என்பதையும், தமிழர் பாரம்பரியம் பேணப்பட வேண்டும் என்பதையும் கூடவே என் எழுத்துத்துறை விடயங்களையும், படுவான்கரை - அதிலும் பெண் பிரதிநிதி என்ற பல விடயங்களையும் சுட்டிக்காட்டிவிட்டு உடன் ஊர் திரும்பிவிட்டேன்.
பின்பும் தொடர்ச்சியாக பரிசீலனைக் கூட்டம் நடைபெற்றதாம். அதாவது இறுதிவரை இழுத்தடித்துவிட்டு பின்னர் அறிவித்தால் என்னை மடக்கிவிடலாம் என நினைத்திருக்கலாம்.
என்னை முழுமையாக ஓரங்கட்டுவதும்தான் நோக்கம். ஆனால் கடைசிநாள் அதாவது 17ம் திகதி காலையில் கூட்டத்தில் அரியநேத்திரன் எம்.பி. நான் எஸ். எல். எப். பிக்கு போய் கையொப்பம் இட்டுவிட்டதாக கூறியதை அடுத்து எனது ஊர் அயல்வீட்டைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் புதிதாக போடப்பட்டுள்ளார். அவர் முழுக்க முழுக்க ஸ்ரீலங்கா கட்சியைச் சேர்ந்தவர். அதுமட்டுமல்ல சென்ற காலங்களில் ராஜன் செல்வநாயகத்தின் கையாள்.
எமக்கு தேர்தல் காலங்களில் கஷ்டங்கள் விளைவித்தவர். அவர் அதாவது என்னை முழுமையாக ஒதுக்க வேண்டும் என்று நன்றாக பிளான்பண்ணி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் அது தெய்வ அருளால் பிழைத்துவிட்டது.
கேள்வி : கூட்டமைப்பில் ஒரு சிலர் மாத்திரம் முடிவுகளை எடுப்பதாகச் சொல்கிறார்களே?
உண்மைதான்! எதற்கெடுத்தாலும் மாவை, சம்பந்தர், சுரேஷ் என்ற நிலைமையே இருந்தது. அண்மைக் காலமாக சம்பந்தர் எதற்கெடுத்தாலும் தம்பி சுரேஷிடம் கேளுங்கோ என அவரை முதன்மைப்படுத்து வதையும் காணக்கூடியதாக இருந்தது. இப்போது நடைபெற்ற வேட்பாளர் தெரிவிலும் கூட சுரேஷ் பிரேமச்சந்திரன்தான் தலைவராக நடந்துகொண்டதாக அக்கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர் கூறினார்.
ஒரு தமிழரசுக் கட்சி உறுப்பினரை வெளியே போகும்படி ஏசியதாகவும் ஈ. பி. ஆர். எல். எப். சுரேஷ் என்னை எப்படி ஏசுவார் எனக் கோபம் கொண்ட அவர் இன்னொரு அணியில் போட்டியிடுவதாகவும் அறிகிறேன்.
கேள்வி : சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் இருந்தீர்களா?
ஆம்! எதற்கெடுத்தாலும் யாருடனாவது அமைச்சர்களுடன் கதைத்தால் சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பார்கள். உண்மையில் எமது மக்களின் தேவைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்மாருடன் கதைத்துத்தானே செய்ய முடியும்? கதைத்தால் சந்தேகம் எழுப்புவர்.
எந்த ஒரு எம்.பியுடனோ சந்திப்பு இடம்பெற்றால் குறிப்பிட்ட மூவர் அல்லது நால்வர் தான் போவார்கள். அதுவும் ரகசியமாக. சரி போனபின்னராவது என்ன நடந்தது என்ற விடயத்தையாவது தெளிவுபடுத்துவதும் இல்லை.
இது ஒரு உதாரணம் மட்டுமே. கடந்த 2008 டிசம்பர் ஜெனீவாவில் பெண்கள் மகாநாடொன்று நடைபெற்றது. பாராளுமன்றில் பெண் உறுப்பினர் இருவர் பெயர் கேட்கப்பட்டதாம். இரு பெண் உறுப்பினர் பத்மினி சிதம்பரம் - நான். வடக்கு கிழக்கினையும் பிரதிநிதித்துவப்படுத்துவோர்.
ஆனால் மேற்படி மகாநாட்டுக்கு போன பெண் உறுப்பினர் சம்பந்தர் - கஜேந்திர குமார். பாராளுமன்றத்தின் ஏனைய கட்சி பெண் உறுப்பினர்கள் போய்வந்த பின்னர் எம்மிடம் வந்து ஏன் மாநாட்டுக்கு வரவில்லை என்று கேட்டார்கள்.
இப்படி விடயங்கள் ஏராளம். பாராளுமன்றம் முடிந்த கையோடு முப்பெரும் தலைவர்கள் இந்தியா போய்விடுவார்கள். Part Time Parlimentarians ஏதாகிலும் விடயம் தீர்மானிக்க வேண்டுமானால் காத்துக்கிடப்போம்.
வந்தவுடன் அங்க போனோம் இங்கே சந்தித்தோம் என்ற இவர்களது பல்லவிகளை நாம் நாள் முழுக்க இருந்து கேட்க வேண்டும். இப்படி எத்தனையோ அதிருப்திகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
கேள்வி : தலைவர்களின் செயற்பாடுகளை விமர்சிக்கின்aர்களே!
எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்? பொறுமைக்கும் அளவு இருக்கு தானே? மக்கள் பிரதிநிதிகள் என வருபவர்கள் மக்களின் தேவைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
பாராளுமன்றத்திற்கு வந்த நோக்கம் என்ன? போராட்டம் சுயநிர்ணயம் தேசியம் என்ற கொள்கைகள் எனக் கூறிக்கொண்டு மட்டும் இருந்தால் மற்ற தேவைகளுக்கு மக்கள் எங்கு போவார்கள்? கொள்கை கொள்கை என்பதைவிட கொள்கைகளை நிறைவேற்றும் வழிகளைத் தேடவேண்டாமா? ஓடவேண்டாமா? பத்திரிகை அறிக்கைகளும், பத்திரிகை மாநாடும் தேவைகளை தீர்த்து வைக்குமா? நோய்க்கு மருந்து போட வைத்தியரிடம் போய்த்தானே ஆகவேண்டும்! ஒரு தடவைக்கு பல தடவை தேடித்தானே போகவேண்டும்.
தீர்வு என்றாலும் ஈழம் என்றாலும் யாரும் கொண்டு வந்து கொட்டப் போகிறார்களா? காலத்திற்கு ஏற்றபடி மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வழிகளை தேட வேண்டும்.
பேசி என்ன தீர்க்கவா போகிறார் மஹிந்த என்று சொல்லிக்கொண்டிருந்தால் சரியா? ஆட்சியில் யாராக இருந்தாலும் பேசித்தானே தீர்க்கவேண்டும்! ஆட்சியில் இருக்கும் வினாதிபதிக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்காமல் கற்பனையில் இருக்கும் வேறு யாருக்குமா ஆதரவு கூறுவது?
கையில் இருக்கிற புறாவைப் பறக்கவிட்டு வேறு புறா தேடிப் பிடிப்பது போலத்தான் தமிழ் தேசிய கூட்டணியின் செயற்பாடுகள் இருக்கின்றன.
தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவர். ஐக்கிய நாடுகள் சபையில் முதன்முதல் தமிழில் உரையாற்றியவர். தமிழை படித்து பேசியும் வருகிறார்.
அவரிடம் ஒரு தடவைக்கு பல தடவை தமிழ் மக்கள் பிரச்சினை எடுத்துக்கூறி சில விடயங்களையாவது முன்னெடுப்போமே என்ற கோட்பாட்டை கூறியதற்கு இவ மஹிந்தவின் ஆள் என்ற கதைகட்டி நெற்றியிலும் நாமம் போட்டு விட்டார்கள் எமது முதுமையான தேசியத் தலைவர்கள்.
நான் தேசியத்தை நேசிக்கவில்லையாம். பகிடிதான். தேசியத்தை முழுமையாக நேசிப்பதாலே - அத்தேசியத்தின் மக்களின் தேவைகளை உணர்ந்துள்ளோர் அதனை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலே தான் பல புதியதாகத் தமிழ்த் தேசியத்தின் வரலாறுகளை ஆவணப்படுத்தி வருகிறேன்.
இது எமது முதுபெரும் தலைவர்கள் யாரும் செய்யாத வேலை இதற்கு கொடுத்த பட்டம் மஹிந்தவின் ஆள்.
கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் பழைய செல்வாக்கைப் பெற முடியுமா?
இது கேள்விக்குறிதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக பல சுயேச்சைக் குழுக்கள் முளைத்துள்ளன. பிரச்சினை என்பதைக் காட்டி இங்கு முகம் கொடுக்க முடியாமல் ஏதாகிலும் பொய்களைக் கூறி வெளிநாட்டுக்கு ஓடியவர் எல்லாம் அங்கு ஏசியில் வாழ்ந்துவிட்டு பணத்தையும் கட்டிக்கொண்டு வந்து இங்கு தேர்தலில் நிற்கிறார்கள்.
பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடியவர்கள் இன்று வந்து தேசியத்திற்கு அழுது வடிக்கிறார்களாம்.
எல்லாருக்கும் எம்.பி. பதவி தானாம் வேணுமாம். தமிழ் வாக்குகள் பிரிப்பது தானா தேசியப் பற்று? அதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போடுகின்ற வேட்பாளர்கள் பெரும்பாலோர் சென்ற தேர்தலில் தோல்வி கண்டவர்கள்.
இந்த நிலையில் எத்தனை ஆசனங்களை பெறும் என்பதனைப் பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
கேள்வி : இனப் பிரச்சினையின் தீர்வுக்கான சந்தர்ப்பங்களைக் கூட்டமைப்பு சரியான முறையில் பயன்படுத்தியதா?
இந்தியா நமது அயல்நாடு. அதன் அனுசரணையுடன் பல விடயங்களை சாதித்து இருக்கலாம். வரதராஜப் பெருமாள் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபையை ஏற்றதால் இந்தியாவின் உதவியுடன் சில விடயங்களையாவது நிறைவேற்றி இருக்கலாம்.
இப்போது கூட தமிழ் மக்களுக்கு என்ன சாதகமான நிலையா உள்ளது? இந்திய உறவை செம்மையாகப் பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்றால் வேறு என்ன செய்வது?
கேள்வி : அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்தது பற்றி ஏதாவது சொல்லுங்களேன்?
நாம் சந்தித்தபோது ஏதும் விசேடமாக இல்லை. அதாவது நான் புதிய கட்சியில் புகுந்தபோது சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள நேர்ந்தது. போராட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவற்றை விரைவில் தீர்க்கவேண்டும்.
இவற்றை மையப்படுத்தி பொதுவானதாகவும் எப்படி இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் என ஒரு நட்புறவுடன் கூடிய உரையாடலாக அமைந்தது.
இனி இந்த உறவை மேலும் நகர்த்தி காலத்திற்கு ஏற்ற வகையில் மக்கள் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகளைக் கையாளவேண்டும். இதற்கான பூரண ஒத்துழைப்பையும் எனது மக்கள் எனக்கு வழங்குவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
கேள்வி : உங்களை விலக்கியதற்கு என்ன காரணம் கூறினார்கள்?
காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவர்களாக அறிவிக்கமாட்டார்கள். இப்பவே மக்கள் நன்றாக அவர்களைப் புரிந்துகொண்டுவிட்டார்கள். முகமூடி கிழிந்து விட்டது. இந்த நிலையில் எம்மை விலக்கியதாக அறிவித்தால் எப்படி இருக்கும்? காரணம் இம்முறை தேர்தலில் நிற்க அனுமதி மறுக்கப்பட்டவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாக்கிற்கு மேல் எடுத்தவர்கள். மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள்.
இந்த தேர்தலில் எம்மை போட்டியிடாமல் செய்வதற்கான திட்டம் வெகு காலத்திற்கு முன்னரே தீட்டப்பட்டு விட்டது என்றுதான் கூறவேண்டும். காரணம் 09ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
அன்றிலிருந்து நாம் அனைவரும் தலைவர், செயலாளரின் அனுமதி வார்த்தைக்காக தவம் கிடந்தோம் என்று தான் கூறவேண்டும். என்னை பொறுத்த மட்டில் நான் 13ம் திகதி வரை காத்துக்கிடந்து அலுத்துத்தான் இறுதியில் தலைவரிடம் பின்னர் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவிடம் போய்க் கேட்டேன்.
அதுவரை தொலைபேசியில் கேட்ட போதெல்லாம் ஆனந்த சயனம் செய்தார்கள். இறுதியில் மாவை போட்டியிடப்போவதாக வேண்டுகோள் கடிதம் தரும்படியும், அது கட்சியின் முன்னாள் உறுப்பினர் பொன் செல்வராசா போன்றோரால் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
என்னைப் பரிசீலனை செய்யும் தகுதி இவருக்கு இல்லை. வேறு சில விடயங்களையும் நான் புட்டுக்காட்டி விட்டு வந்துவிட்டேன். எனது தந்தையார் தமிழரசுக் கட்சித் தூண் என போற்றப்பட்டவர்.
படுவான்கரையில் எந்தத் தமிழரசுக் கட்சிக் கூட்ட மானாலும் அவை அன்று எங்கள் வீட்டில் தான் நடைபெறும்.
அப்படிக் கட்சி வளர்த்த பாரம்பரியம் கொண்டவர்கள் நாம்.

கருத்துகள் இல்லை: