வெள்ளி, 14 மார்ச், 2025

தமிழக மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம் இலங்கை, மீனவர்கள்

BBC :  தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்னை வலுப் பெற்றுள்ள பின்னணியில், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை தரப்பு முன்னெடுத்துள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை(மார்ச் 14) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 15) நடைபெற உள்ளது.
இந்த நிலைமையில், இந்த முறை நடைபெறுகின்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தில் தாம் பங்கேற்க போவதில்லை என யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தை கண்டித்து இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நட்குணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.



இலங்கை கடற்படையின் பூரண ஒத்துழைப்புடன் இந்த உற்சவம் நடத்தப்படவுள்ளது.

இந்த விழாவுக்கு வரும் படகுகளுக்கு தற்காலிக இறங்கு துறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், சுகாதார வசதிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், மின்சார வசதிகள் அமைத்தல், மருத்துவ வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறுகின்றது.

மேலும், தீவு பகுதி மற்றும் கரையோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டும் பாதுகாப்பு கேமராக்களை பொருத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று இலங்கை கடற்படை கூறுகின்றது.

அத்துடன், பக்தர்களுக்கான தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் தொலைத்தொடர்பு கோபுரமொன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்தது.

இந்த ஆண்டு உற்சவத்திற்கு 9000 பக்தர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சார்பில் 4000 பக்தர்களும், இந்தியா சார்பில் 4000 பக்தர்களும் கலந்துக்கொள்ளவுள்ளதுடன், 1000 அதிகாரிகளும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து இதுவரை 3464 பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இராமேஸ்வரத்திலிருந்து வருகைத் தர இவர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ் அரசாங்க அதிபர் அலுவலக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கச்சத்தீவு கொடியேற்றம் மார்ச் 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு இடம்பெறும் அதேவேளை, 15-ஆம் தேதி காலை 7.30க்கு சிறப்பு திருப்பலி கூட்டு பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.

இந்திய மீனவர்களின் வருகை

இலங்கை கடற்பரப்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் வருகைத் தருவதாக இலங்கை மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.

2025ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் 145 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 19 இந்திய படகுகளை தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களின் உடமைகள், அரசுடமையாக்கப்படும் என்ற சட்டம் 2018ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டது.

இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட 2018ம் ஆண்டு முதல் இதுவரையான காலம் வரை, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட காலப் பகுதி முதல் இன்று வரையான காலம் வரை 150திற்கும் அதிகமான படகுகள் இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல்வளம் மற்றும் கடல்வள அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டட 124 படகுகள் அரசுடமையாக்கப்பபட்டுள்ளதுடன், 24 படகுகள் தொடர்பில் வழக்குகள் இடம்பெற்று வருவதாக கடற்றொழில், நீரியல்வள, கடல்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு

தமிழர்கள் என்ற உணர்வு இல்லாத நிலையில், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நட்குணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

”ஏற்கனவே இருந்த நிலைமையை விடவும் அதிகளவில் இந்திய மீனவர்கள் வருகின்றார்கள். அரசாங்கம் தன்னுடைய செயலை செய்துக்கொண்டிருக்கின்றது. இந்திய மீனவர்களை கைது செய்துக்கொண்டிருக்கின்றார்கள். எங்களை பொறுத்தவரை அது தற்காலிக தீர்வாகவே இருக்கின்றது. எங்களுக்கு தேவை எங்களுடைய மீனவர்கள் சுதந்திரமாக எங்களுடைய பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கான வசதிகளை எங்களுடைய அரசாங்கம் செய்து தர வேண்டும்”

தொடர்ந்து பேசிய செல்லத்துரை நட்குணம், “எங்களுடைய எல்லையை தாண்டி இந்திய இழுவை படகுகள் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எங்களுடைய அரசாங்கத்தின் வேலை. அதனை நிச்சயமாக செய்ய வேண்டும். தொப்புள் கொடி உறவு என்று சொல்லி சொல்லி இந்த நிலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். எங்களுடைய மீனவர்கள் கடலில் போடும் வலைகளை இந்திய படகுகள் சுக்கு நூறாக இல்லாது செய்கின்றன.

கடன்களை வாங்கி தான் இந்த தொழிலை செய்கின்றார்கள். இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டாம் என்று சொல்லி அங்கு போராட்டங்களை நடத்துகின்றனர். தமிழக மீனவர்கள், தமிழக மக்களுக்கு நாங்கள் ஆதரவு. எங்களுக்கு அவர்கள் மீது விருப்பம். இந்த செயலை பார்க்கும் போது அவர்கள் மீது வெறுப்பு வருகின்றது. தமிழன் என்ற உணர்வு இல்லாத நிலையில் அவர்கள் இந்த வேலையை செய்துக்கொண்டிருக்கின்றார்கள்” என தெரிவிக்கின்றார்.

கச்சத்தீவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவிற்கு விட்டு கொடுக்க போவதில்லை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சம்மேளனத்தின் உபத் தலைவர் அந்தோனிபிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார் தெரிவிக்கின்றார்.

”கச்சத்தீவு எங்களுடையது. நாங்கள் அதை சுற்றி மீன்பிடிக்கின்றோம். கச்சத்தீவு அந்தோனியார் கோவிலுக்கு இந்தியாவில் இருந்தும் வருவார்கள். இலங்கையில் இருந்தும் போவார்கள். முன்னாள் கடற்றொழில் அமைச்சர் இரண்டு கச்சத்தீவு உற்சவத்திற்கு அழைத்து சென்றார். அந்த மீனவர்களுடன் நீங்கள் பேச வேண்டும் என சொல்லி அழைத்து சென்றார்.

ஆனால் அது தோல்வி அடைந்தது. நாங்கள் இங்கு வருவது பிழை என்று சொல்லிவிட்டு, அடுத்த நாளே இங்கு வந்து விடுவார்கள். அதைபற்றி நாங்கள் நம்புவதற்கு தயார் இல்லை. அரசாங்கம் இந்திய இழுவை படகை நிறுத்த வேண்டும். இந்தியாவிற்கு எங்களுடைய கச்சத்தீவை நாங்கள் எந்த காரணத்திற்காகவும் விட்டு கொடுக்க மாட்டோம்.” என அந்தோனிபிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார் குறிப்பிட்டார்.
‘கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்கின்றோம்’

இந்திய மீனவர்களினால் தாம் எதிர்நோக்கும் அவல நிலைமையை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்காக இம்முறை கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தை தவிர்த்துக்கொள்வதாக யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நட்குணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

“இந்த பிரதேசத்தில் நாங்கள் சுதந்திரமாக தொழில் செய்ய வேண்டும் என்பதற்காகவும், நாங்கள் படுகின்ற அவல நிலைமையை தெரியப்படுத்துவதற்காக இந்த வருட புனித தலத்தின் விசேடத்தை யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனம் தவிர்த்துக்கொள்கின்றது. அரசாங்கத்திற்கு இந்த நிலைமையை தெரியப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எங்களுக்கு தேவை ஒரு நிரந்தர தீர்வு”, என்று செல்லத்துரை நட்குணம் குறிப்பிட்டார்.

சங்கம் என்ற வகையில் மாத்திரமே தாம் உற்சவத்தை புறக்கணிப்பதாக தெரிவித்த அவர், தனிப்பட்ட ரீதியில் பக்தர்களுக்கு செல்ல முடியும் எனவும் கூறினார்.

கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்கும் தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் பதில்

கச்சத்தீவு பிரச்னை என்பது வேறு, மீனவப் பிரச்னை என்பது வேறு என்ற அடிப்படையில், கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க வேண்டாம் என கடற்றொழில், நீரியல்வளம், கடல் வளம் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், மீனவ சங்கங்களிடம் கேட்டுக்கொண்டார்.

”எந்த சங்கங்கள் புறக்கணிக்கின்றார்கள் என்பது தொடர்பில் உண்மையில் எனக்கு தெரியாது. இருந்த போதிலும் நான் ஒரு விடயத்தை கூறுகின்றேன். இங்கிருக்கின்ற மீனவர்களுக்கும் சரி, இந்திய மீனவர்களுக்கும் சரி, இந்தியாவிலிருந்து வருகைத் தருகின்ற பக்தர்களும் சரி, இலங்கையிலுள்ள பக்தர்களும் சரி, இந்த கச்சத்தீவு பிரச்னையையும், இந்த மீன்பிடி பிரச்னையையும் ஒன்றாக இணைத்துக்கொள்ள வேண்டாம்.

அது வேறு இது வேறு. அந்த நிகழ்வுக்கு நானும் கூட போகலாம் என்று தீர்மானித்திருக்கின்றேன். அந்த ஆலயத்திற்கு சென்று ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்”, என்று அமைச்சர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “அரசாங்கத்தோடு கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டும் என்றால், நேரடியாக செய்யலாம். எங்களுடைய மீனவர்களுக்கு அன்பாக அழைக்கின்றோம். உங்களுக்கான கதவு 24 மணித்தியாலங்களும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்னையும் முன்னர் போன்று இல்லை. நேரடியாக வரலாம். பேசலாம். உரையாடலாம். இந்த பிரச்னை எங்களுக்குரிய பிரச்னை இல்லை. நமக்குள் பிரச்னை. நாங்கள் நீங்கள் என அனைவரும் சேர்ந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை. அதனால் நீங்கள் வேறு அல்ல. நான் வேறு அல்ல. இந்த நாட்டில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது, இதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தர வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்’ என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

கருத்துகள் இல்லை: