வியாழன், 19 செப்டம்பர், 2024

விசிகவின் அரைநிர்வாணப் போராட்டம்: திமுக அரசுக்குத் தொடரும் குடைச்சல்!

 minnambalam.com - Kavi :  ஆளுங்கட்சியான திமுகவுக்கும், கூட்டணிக் கட்சியான விசிகவுக்கும் இடையில் கடந்த சில வாரங்களாகவே இறுக்கமான போக்கு நிலவி வருகிறது.
அமெரிக்கா சென்று வந்த முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின் இறுக்கம் போய் இணக்கம் தழைத்துவிட்டதாக தலைவர்கள் சொன்னாலும்… ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள் அதற்கு முரணாகவே இருக்கின்றன.
உதாரணத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் வடக்கனந்தல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு சுவாமி வீதியுலா வரவேண்டும் என்று வலியுறுத்தி விசிகவும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தியும் இணைந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



வடக்கனந்தல் கிராமத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான உமா மகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய கும்பாபிஷேகத்தில் வடக்கனந்தல் சேரி வாழ் மக்களை புறக்கணித்தும் சேரிவாழ் மக்களின் வாழ்விடத்திற்கும் சுவாமி வீதி உலா வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அதற்கு எதிராக கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை செயல்படுவதாக கூறி, அரசின் இத்துறைகளை கண்டித்து விசிகவினர் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

15 ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம், 16 ஆம் தேதி  முகத்தில் கருப்பு துணி அணிந்து போராட்டம், 17 ஆம் தேதி அரை நிர்வாண தொடர் போராட்டம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் நடைபெற்று வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் ச அனிச்சமலரவன் மற்றும் லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சி.ஓவியர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வடக்கனந்தல் கிராமத்தில் விஜயநகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட அகிலாண்டேஸ்வரி சமேத உமாமகேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது.

வழக்கமாக கோயில் திருவிழா காலங்களில் நான்கு மாடவீதியில் மட்டுமே சாமி ஊர்வலம் வரும். தற்போது பட்டியலின வசிக்கும் பகுதிக்கும் ஊர்வலம் வரவேண்டும் என்று  போராட்டம் நடத்துகின்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கோயிலுக்குள் செல்லாத வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விசிக தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை, ஆர்டிஒ லூர்து சாமி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

“முடியாத விஷயத்தை இப்போதே செய்ய சொன்னால் எப்படிங்க… உங்கள் கட்சியினரிடம் பேசி போராட்டத்தை கைவிட சொல்லுங்கள்” என ஆர்டிஒ  கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து மதியழகனும், விசிகவினர் அரை நிர்வாணத்துடன் கோயிலுக்குள் செல்ல முயல்வதை நிறுத்த வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எனினும் விசிகவினர் இன்னும் போராட்டத்தை கைவிடவில்லை.

இந்த போராட்டம் குறித்து  வடக்கனந்தல் பகுதியில் வசிக்கும் மக்களிடம் கேட்டோம்.

“திமுக எம்எல்ஏ உதயசூரியன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோரின் சொந்த ஊர்தான் வடக்கனந்தல்.

இந்த ஊரில் 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அதில் 300 குடும்பத்தினர் தான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இங்குள்ள அகிலாண்டேஸ்வரி சமேத உமாமகேஸ்வரர் சிவன் கோயில் கருவறை வரையில் பட்டியலின மக்கள் எந்தவித தடையும் இன்றி சென்று வருவார்கள். அப்படி இருக்கும்போது திடீரென சாமி ஊர்வலத்தை தங்களது பகுதிக்குள் வரவேண்டும் என்று போராட்டம் செய்கின்றனர்.

இந்த கோயிலின் நாட்டாமை உள்நாட்டு மீனவர்கள் சமூதாயத்தைச் சார்ந்தவர். இக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இப்படி இருக்கும் போது கோயிலுக்குள் அரைநிர்வாணமாக செல்ல போகிறோம் என்றால் என்ன நியாயம்?” என கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசிகவினரிடம் கேட்டோம்…

“வெறும் ஆர்ப்பாட்டம் , போராட்டம் செய்தால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவிடுகின்றனர். இப்போதே தீர்வு வேண்டும் என்பதற்காகத்தான் அரைநிர்வாணமாக கோயிலுக்கு போகிறோம் என்று சொல்கிறோம். காலம் காலமாக மாடவீதியில் தான் சாமி ஊர்வலம் போகும் என்றால் என்ன அர்த்தம்… காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றனர்.

பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரிடம் விசாரித்தோம்…

“இரண்டு நாட்களுக்கு முன்பு சாமி ஊர்வலம் வரும்போது பட்டியலினத்தவர்கள் மேளம் தாளத்துடன் எதிரில் சென்றனர். அன்றே சாதுர்யமாக கையாண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுத்தோம், இன்று அரைநிர்வாணமாக கோயிலுக்குள் செல்வோம் என போராட்டம் செய்கின்றனர்.

மீறி போனால் இரு தரப்பினருக்கும் மோதல் போக்கு உருவாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும்.  ஆளுங்கட்சியோடு கூட்டணியில் இருக்கும் விசிகவினரே இப்படி செய்தால் காவல்துறையினர் என்ன செய்ய முடியும்” என்கின்றனர்.

திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விசிக இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

வணங்காமுடி

கருத்துகள் இல்லை: