மாலை மலர் : மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து தமிழ் திரை உலகில் பாலியல் புகார்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 6-ந்தேதி அன்று டாக்டர் காந்தராஜ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார். அதில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள டாக்டர் காந்தராஜ் நடிகைகள் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பழைய நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் வரையில் அனைவருமே பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்று கருத்து தெரிவித்துள்ள டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் ரிவு சைபர்கிரைம் போலீசார் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
296 (பொது வெளியில் ஆபாசமாக பேசுதல்), 75 (பாலியல் தொந்தரவு), 79 (பெண்களின் மாண்பை அவமதித்தல்), 352 (அவதூறாக பேசுதல்), 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து டாக்டர் காந்தராஜ் மீது கைது நடவடிக்கை பாய்கிறது. காந்தராஜ் பேசிய வீடியோ பேச்சின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் அவரை கைது செய்வது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக