மின்னம்பலம் Kavi : அமலாக்கத் துறை தன்மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்.
இவர் 2001 – 2006 ஆம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், “2006 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் 2020 டிசம்பரில் அமலாக்கத்துறை ECIR பதிவு செய்தது.
2005 ஜூலையில் பிஎம்எல்ஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது. 2001- 2006 வரையிலான காலகட்டத்தில் சொத்து சேர்த்ததாக என் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
பிஎம்எல்ஏ சட்டப்பிரிவு 13, 2009ல் தான் திட்டமிடப்பட்ட குற்ற வழக்குகளின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. அதனால் இந்த சட்டத்தை எனக்கு எதிராக பயன்படுத்த முடியாது” என்று கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வில் நேற்று (ஆகஸ்ட் 7) விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், மற்றும் அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
“இந்த வழக்கில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதனால் இவ்வழக்கை ரத்து செய்யக்கூடாது. அனிதா ராதாகிருஷ்ணன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரிக்கலாம்’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.
இதுதொடர்பான அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு அனிதா ராதாகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. ஆனால் இந்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த சூழலில் அமலாக்கத்துறை தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரிய அனிதா ராதாகிருஷ்ணனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக