மின்னம்பலம் -Selvam : அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததற்கு அருந்ததியினர் சமூகத்தின் சார்பில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் உள்ளிட்ட தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை இன்று (ஆகஸ்ட் 3) சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2009-ஆம் ஆண்டு பட்டியல், பழங்குடியினருக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்க அப்போதைய முதல்வர் கலைஞர் உத்தரவிட்டார். ஆனால், தமிழ்நாடு அரசு வழங்கிய அனுமதி செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டைப் போல பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூகநீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்திருப்பதற்கு அருந்ததியினர் சமூகத்தின் சார்பில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், எழுத்தாளர் மதிவண்ணன் உள்ளிட்டோர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், “தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த பெருமை கலைஞரையேச் சாரும். அந்த இட ஒதுக்கீட்டை பாதுகாத்தவர் முதல்வர் ஸ்டாலின்.
விரைவில் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்காக அவரிடம் தேதி கேட்டிருக்கிறோம். அவர் பரிசிலீப்பதாக சொல்லியிருக்கிறார். விரைவில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்படும். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கிரிமீலேயர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பட்டியலின சமூக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக