பி பி சி தமிழ் : ஐ.நா., சர்வதேச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகள், உலக நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு வகைகளில் களமிறங்கியிருக்கின்றன.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், உலக அரங்கில் இஸ்ரேல் மீதான அரசியல் அழுத்தம் வலுக்கத் தொடங்கியிருக்கிறது. ஐ.நா., சர்வதேச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகள், உலக நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு வகைகளில் களமிறங்கியிருக்கின்றன.
ஏழு மாதங்களாக நீடிக்கும் போர்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் ராணுவத்துக்கும் – பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையேயான போர் 230 நாள்களுக்கும் மேலாக நீடித்துவருகிறது. இந்தப் போரில் தற்போதுவரை சுமார் 37,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். குறிப்பாக, பாலஸ்தீன் – காஸாவில் மட்டும் ஹமாஸ் போராளிகள், குழந்தைகள், பெண்கள், பத்திரிகையாளர்கள் என 35,500-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவத்தின் கோரத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பாக, ஹமாஸ் அமைப்பு முழுவதுமாக அழித்தொழிக்கப்படும் என சூளுரைத்துக்கொண்டு தீவிரத் தாக்குதலை மேற்கொண்டுவரும் இஸ்ரேல் ராணுவம் காஸா மண்ணில் பல்வேறு மனித உரிமை மீறல்களை செய்துவருகிறது.
பாலஸ்தீனப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், நூலகங்களை குறிவைத்து தாக்குவது, உயிரிழந்த மக்களின் உடல் உறுப்புகளைத் திருடுவது,
ஐ.நா மற்றும் உலக நாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்களை இடைமறிப்பது என சர்வசாதாரணமாகப் போர்க்குற்றங்களை நடத்திவருகிறது என குற்றச்சாட்டுகள் வரிசை கட்டுகின்றன.
ஐ.நா தீர்மானம்: இஸ்ரேல் மீது விழுந்த முதல் அடி!
தொடக்கத்தில் பாலஸ்தீனம்(காஸா பகுதி) மீதான தாக்குதலை வேடிக்கைப் பார்த்து வந்த உலக நாடுகள், ஏழு மாதங்களுக்குப் பிறகு இப்போது தீடீரென விழித்துக்கொண்டிருக்கின்றன.
போர் நிறுத்தம் கோரி இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. இருப்பினும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், உலக நாடுகள் பலவும் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க முடிவெடுத்திருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, கடந்த மே 10-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்க வேண்டும் என அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன.
இஸ்ரேல்-ஹமாஸ் போரும்… அதிர்ச்சியளிக்கும் தரவுகளும்!
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் கூட்டப்பட்ட அவசரக்கூட்டத்தில் ஐநாவில் உறுப்பு நாடுகளாக இருக்கும் 193 நாடுகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 143 நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அதேசமயம், அமெரிக்கா, இஸ்ரேல், அர்ஜென்டினா உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக வாக்களித்தன.
மேலும், 25 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன. இறுதியில்,
தீர்மானத்துக்கு அதிக பெரும்பான்மை கிடைத்ததால், ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை
நிரந்தர உறுப்பு நாடாக்கும் வரைவு தீர்மானம் வெற்றிகரமாக
நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பிரதிநிதிகள்
தீர்மானத்தின் நகலை அவையிலேயே கிழித்தெறிந்து தங்களின் எதிர்ப்பை
வெளிக்காட்டினர்.
இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்!
அதைத்தொடர்ந்து அடுத்த அடியாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கான், இஸ்ரேல் – (காஸா)ஹமாஸ் போரில் தொடர்ந்து போர் குற்றங்களை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் கேட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக, ஐ.சி.சி தலைமை வழக்கறிஞர் கரீம் கான், “காஸா மீதான போர் மூலம் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை பட்டினி போட்டது, வேண்டுமென்றே அவர்கள்மீது தாக்குதல் நடத்தியது,
கொலை உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு இணங்க வேண்டிய கடமையிலிருந்து இஸ்ரேல் தப்ப முடியாது!” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
அதேபோல, “ஹமாஸ் அமைப்பின் தலைவர்களும் கொலை, பிணைக்கைதிகளை பிடித்தல், சித்ரவதை செய்தல் உள்ளிட்டப் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்” என இருதரப்பின் மீதும் கடுமையான குற்றங்களை சுமத்தி கைது வாரண்ட் கோரினார்.
இந்த முடிவுக்கு மனித உரிமைகள் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன.
அதேநேரம் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்ப்பு
தெரிவித்தன.
ஐரோப்பியா நாடுகள் மத்தியில் பாலஸ்தீன ஆதரவுக் குரல்!
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஒவ்வொன்றாக பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க முடிவெடித்திருப்பது இஸ்ரேலுக்கு அடி மீது அடியாக விழுந்திருக்கிறது. குறிப்பாக, நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட மூன்று நாடுகளும் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அதிரடியாக அறிவித்திருக்கின்றன.
இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே, “பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது. தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை பாலஸ்தீனத்துக்கு உள்ளது.
இஸ்ரேலுடன் சமாதானத்தை ஏற்படுத்த இது உதவும் என்ற நம்பிக்கையில், சுதந்திர பாலஸ்தீன அரசை எங்கள் நாடு அங்கீகரிக்கும்!” எனத் தெரிவித்தார்.
ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, ஐரோப்பா
அதேபோல, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “ஸ்பெயின் மக்களின் பெரும்பான்மை உணர்வை எதிரொலிக்கும் வகையில் பாலஸ்தீனத்தின் அரசு அங்கீகரிக்கப்படும். இந்த முயற்சி நீதி, சமாதானம், ஒத்திசைவு போன்ற வார்த்தைகளில் இருந்து செயலுக்கு நகர்ந்திருக்கிறது!” எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், “இரு நாடுகளின் தீர்வு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் மற்றும் அவர்களின் மக்களுக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான ஒரே நம்பகமான பாதை! இன்று அயர்லாந்து பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கிறது.
மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு இந்த அங்கீகாரம் பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்!” எனத் தெரித்திருக்கிறார்.
இந்த மூன்று நாடுகளும் வரும் மே 28-ம் தேதி அதிகாரப்பூர்வமாக
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இருக்கின்றன. இந்த நாடுகளைப் போலவே
ஸ்லோவேனியா. மால்டா என அடுத்தடுத்த ஐரோப்பிய நாடுகளும் பாலஸ்தீனத்தை
அங்கீகரிக்க முன்வந்திருக்கின்றன. இதற்கிடையில் கொலம்பியா நாடு இஸ்ரேல்
உடனான உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.
அடக்கமுடியாத ஆத்திரத்தில் இஸ்ரேல்!
எல்லா நாடுகளும் சுத்துப்போட்ட நிலையில் இஸ்ரேல் கடுமையான ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “நான் அயர்லாந்து, நார்வே நாடுகளுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறேன்!
இஸ்ரேலின் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கும், அதன் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கும் முன்பாக அமைதியாக இருக்காது. அயர்லாந்து –
நார்வேயின் முட்டாள்தனம் ஒருபோதும் எங்களைத் தடுக்காது; எங்கள் இலக்குகளை அடைவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! எங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பை மீட்டெடுப்பது,
ஹமாஸை அழித்தொழிப்பது, பணயக்கைதிகளை மீட்டெடுப்பது எங்களின் நியாயமான இலக்குகள். எங்களுக்கு எதிராக பாலஸ்தீனத்தை தனிநாடாக ஆதரிக்கும் இந்த நாடுகள் பயங்கரவாதத்துக்கு பலன் இருக்கிறது என்பதை உலகுக்கு சொல்ல வருகின்றன!
எனவே நார்வே, அயர்லாந்து நாடுகளுக்கான எங்கள் தூதர்களை திரும்பப் பெறுகிறோம். ஸ்பெயின் அரசும் இதே முடிவை எடுக்குமானால், ஸ்பெயினுக்கான இஸ்ரேல் தூதரையும் நாங்கள் திரும்பப் பெறுவோம்!” என ஆவேசமாகப் பதிலளித்திருக்கிறார்.
இஸ்ரேலுக்கு எதிராக உலகநாடுகள் பலவகையில் செக் வைத்திருப்பதால், வேறு வழியின்றி இஸ்ரேல் போர் நிறுத்த முடிவுக்கு வரும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக