புதன், 29 மே, 2024

கோவை: மருத்துவமனையில் 2 நாள் கட்டி வைத்து அடித்து கொலை!

 மின்னம்பல, -indhu : கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் திருட முயன்றதாக ராஜா என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இன்று (மே 29) 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ராஜா தனது குடும்பத்தினருடன் கோவை மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் தற்போது வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் (மே 27) ராஜா, கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச். என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் இருந்த இரும்பு கம்பிகளை ராஜா திருட முயன்றதாக மருத்துவமனை காவலர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.



இதனால் ராஜா மயக்கமடைந்ததால், அதே மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, ராஜாவின் மனைவி சுகன்யா பீளமேடு காவல்நிலையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மருத்துவமனை துணை தலைவர் நாராயணன் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் 15 பேரை கைது செய்துள்ளனர்.

இதுத்தொடர்பாக பேசிய சுகன்யா, “திங்கட்கிழமை வேலைக்குச் செல்வதாகதான் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து 8.30 மணிக்கு கிளம்பினார். 9 மணியளவில் ராஜாவின் அம்மா எண், எனது அம்மா எண் என அனைவருக்கும் அவரது கைப்பேசியில் இருந்தே அழைத்து, மனைவியின் கைப்பேசி எண்ணையும், வீட்டு முகவரியையும் அனுப்புமாறு கேட்டுள்ளனர்.

எங்களுக்கு எந்தவித தகவலும் சொல்லவில்லை. நேற்று (மே 28) காலை நாங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு சென்றபோதும் எங்களிடம் எந்தவித தகவலும் சொல்லவில்லை. மாலையே அவர் இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை காண்பித்தனர். அவரது உடல் முழுவதும் காயம் இருந்தது. அவரை அடித்தே கொலை செய்துள்ளனர்.

உடல் நலம் சரியில்லாதவர்களை காப்பாற்றும் மருத்துவமனையிலேயே என் கணவரை அடித்துக் கொலை செய்துள்ளனர்” என்று கதறி அழுதவாறே கூறினார்.

தற்போது, ராஜாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை மருத்துவமனையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்து

கருத்துகள் இல்லை: