புதன், 22 நவம்பர், 2023

துரைமுருகன் மீது பாய்ந்த குடியாத்தம் குமரன்; பின்னணி என்ன?

விகடன் - ந.பொன்குமரகுருபரன் : ``ரூ.60,000 கோடி சம்பாதித்திருக்கிறார்!"- துரைமுருகன் மீது பாய்ந்த குடியாத்தம் குமரன்; பின்னணி என்ன?

மின்னம்பலம்  - ara : திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தினால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று,
இன்று (நவம்பர் 22)  திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். minister duraimurugans 60000 crore scam
இந்த அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரங்களிலேயே திமுகவின் பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகன் மீதும்,
அவரது மகன் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் குடியாத்தம் குமரன்.
இதனால் இந்த விவகாரம் வேலூர் மாவட்ட எல்லையை தாண்டியும் திமுகவில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பேசு பொருளாகி இருக்கிறது.

திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருக்கிற குடியாத்தம் குமரன், ஏற்கனவே துரைமுருகன் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் போனில் வரம்பு மீறி பேசியதாக… சில வருடங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் பலத்த போராட்டம் நடத்தி தான் திமுகவுக்குள் வந்தார் குடியாத்தம் குமரன். இந்த நிலையில் தற்போது மீண்டும் துரைமுருகனை பகைத்துக் கொண்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

தான் நீக்கப்பட்ட சில மணி நேரங்களில் தனது பேஸ்புக் பக்கத்தில் குடியாத்தம் குமரன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ” என்னை செருப்பால் அடித்தாலும் எனது கட்சி திமுக தான். என்னுடைய தலைவர் ஸ்டாலின் தான். என்னுடைய வருங்கால தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான்.

எனக்கும் துரைமுருகனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவருடைய மகன் கதிர் ஆனந்த் தான் வேலூர் மாவட்டத்திலேயே பிரச்சனை. எம் பி கதிர் ஆனந்த் சமீபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வேலையை ஒருவரிடம் கொடுத்தார். சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு எதிராக பாமக கடுமையாக மோதியது. ஒரு சேர்மன் தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் திமுக மிகக் கடுமையாக போராடி சேர்மன் பதவியைக் கைப்பற்றியது. வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் இதற்காக கடுமையாக முயற்சி செய்தார். இந்த நிலையில் எம்பி கதிர் ஆனந்த் தனக்கு வந்த ஐந்து கோடி ரூபாய் வேலையை, அந்தத் தேர்தலில் நம்மை எதிர்த்த பாமகவுக்குக் கொடுத்தார். இப்படி ஒவ்வொரு வகையிலும் திமுக காரனுக்கு எதிராகவே கதிர் ஆனந்த் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இதை நான் எதிர்த்து கேட்டதால் என் மீது கோபமடைந்து என்னையும் எனது குடும்பத்தினரையும் கைது செய்ய போலீசுக்கு வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறார் கதிர் ஆனந்த். எனது தாயார் புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். எனது தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் எங்கள் வீட்டிற்கு வந்து யாரும் எங்களை சந்திக்கக் கூடாது என்றும் எங்களுக்கு நிதி உதவி செய்யக்கூடாது என்றும் கட்சியினருக்கு கதிர் ஆனந்த் கட்டளையிட்டு இருக்கிறார். நேற்று இரவு 1.15 மணிக்கு போலீஸ் எனக்கு போன் செய்து, ‘எம்பி உங்களை கைது செய்யச் சொல்லியிருக்காரு. குடும்பத்தோட எங்காவது போயிடுங்க’ என்று எச்சரித்தனர். நாங்கள் எங்கேயும் போக மாட்டோம்.

சில நாட்களுக்கு முன் எனக்கு போன் செய்த கதிர் ஆனந்த் எம்பி, ‘நீ இளைஞரணி மாநாட்ல பேச மாட்டே’ என்று எச்சரித்தார். அவர் சொன்னது போலவே இன்று நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டேன். அமைச்சர் உதயநிதி குறித்து எல்லாம் எவ்வளவு கேவலமாக கதிர் ஆனந்த் பேசி வருகிறார் தெரியுமா?

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உடல்நலம் இல்லாத நிலையில் கூட கடுமையாக கட்சி பணியும் மக்கள் பணியும் ஆற்றி வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைத்தால் தொடர்ந்து சினிமாவில் நடித்து சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அவர் கொள்கைக்காக தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார். தலைவர் குடும்பம் கட்சிக்காக இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இங்கே அமைச்சர் துரைமுருகன் குடும்பம் கொள்ளையடித்து கொண்டிருக்கிறது.

துரைமுருகனின் தம்பி சிங்காரம் ஒரு பக்கம் மகன் கதிர் ஆனந்த் ஒரு பக்கம் என்று குடும்பமே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சர் பி டி ஆர் குரலில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாக எவனோ ஒருவன் பொய்யான ஆடியோவை வெளியிட்டான். ஆனால் உண்மையில் மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் 60,000 கோடி சம்பாதித்து இருக்கிறார். இது பற்றிய உண்மைகளை விரைவில் நான் வெளியிடுவேன். துரைமுருகனின் பல வீடியோக்கள், தொலைபேசி உரையாடல்கள் பதிவுகள் என்னிடம் உள்ளன. அவற்றையெல்லாம் நான் வெளியிட்டால் பத்து நிமிடத்தில் துரைமுருகனுக்கு மந்திரி பதவி இருக்காது” என்று அந்த வீடியோவில் ஆவேசமாக பேசியிருக்கிறார் குடியாத்தம் குமரன்.

கடந்த சில நாட்களாக அமைச்சர் துரைமுருகனைச் சுற்றி அமலாக்கத் துறை சர்ச்சைகள் சூழ்ந்து வரும் நிலையில், திமுகவில் நேற்று வரை பதவியில் இருந்த நிர்வாகியே துரைமுருகன் பற்றி இவ்வாறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: