வெள்ளி, 24 நவம்பர், 2023

பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்னம்பலம் Selvam  :  பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
தங்கநகை சேமிப்பு திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட பிரணவ் ஜூவல்லர்ஸ் விளம்பர தூதுவரான பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு  சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளது.
தங்க நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை,
சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் அதிகளவில் போனஸ் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வந்தது.
இதனால் பொதுமக்கள் பலரும் பிரணவ் ஜூவல்லர்ஸ் கடையில் முதலீடு செய்தனர்.
தங்க நகை சேமிப்பு திட்டமான பொன்சி திட்டத்தில் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் பிரணவ் ஜூவல்லர்ஸ் மீது பொதுமக்கள் புகாரளித்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் தலைமறைவாக இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக நவம்பர் 20-ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள பதிவில், “சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் பிரணவ் ஜூவல்லர்ஸ் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் குற்ற ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.23.70 லட்சம் மற்றும் 11.60 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பிரணவ் ஜூவல்லர்ஸ் விளம்பர தூதுவரான நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து மத்திய பாஜக அரசை விமர்சித்து வரும் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.
செல்வம்

கருத்துகள் இல்லை: