வியாழன், 23 நவம்பர், 2023

சனாதனம் வழக்கு - உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா பதவிக்கு சிக்கலா? தீர்ப்பு ஒத்திவைப்பு!

tamil.oneindia.com  - Vignesh Selvaraj :  சென்னை: சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க கோரிய வழக்கு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில இந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், கிஷோர் குமார், ஜெயக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த கோ- வாரண்டோ வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
திமுக எம்.பி ஆ.ராசா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை, அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அதிகார பகிர்வு என்பது நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும்,
அதன்படி இந்த நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை அல்லது சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும் அரசியல் சாசன மதிப்புகளை ஊக்குவிக்கும் வகையில்தான் ஆ.ராசா பேசினாரே தவிர, அரசியல் சாசனத்திற்கு விரோதமாகப் பேசவில்லை என குறிப்பிட்டார்.

இந்து முன்னணியை சேர்ந்த ஒரு மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் பதிலளிக்கும்போது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும், சனாதனத்திற்கு எதிரான பேச்சை அவர்கள் மறுக்கவில்லை என்றும், ஓவ்வொரு நாளும் அதை நியாயப்படுத்தி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கவேண்டிய ஒரு அமைச்சர், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதன் மூலம் பதவிபிரமாணத்தை மீறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நான் எல்லோருக்கும் பொதுவானவர் என கூறும் முதல்வர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என ராஜகோபாலன் கூறியதற்கு, உதயநிதி மற்றும் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் ஜோதி ஆகியோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

பொங்கல் உள்ளிட்ட தமிழர் பண்டிகைகளுக்கும், சிறுபான்மையினரின் பண்டிகைகளுக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவிப்பதாகவும் விளக்கம் அளித்த இருவரும், இந்த வழக்குகளில் தொடர்பில்லாத முதல்வர் குறித்து பேசக்கூடாது என வலியுறுத்தினர். இதனை ஏற்ற நீதிபதி அனிதா சுமந்த், இந்த வழக்கில் அரசியலை இழுக்க வேண்டாம் என மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் இந்து முன்னணியின் மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், வர்ணாசிரமம் பிறப்பில் இல்லை என்றும், சாதி, தீண்டமை ஆகியவை இருக்கிறது என வைத்துக்கொண்டால் அதற்கு சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென கூறமுடியாது என்றும், கண்ணில் புரை இருந்தால் அதற்கு அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என தெரிவித்தார். சனாதனம் குறித்து ஒரு தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்றும், சனாதனம் நாத்திகத்தையும் பேசுவதாக குறிப்பிட்டார். இந்து முன்னணி ஓர் அரசியல் கட்சி அல்ல என்றும், எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம், எதிர் மனுதாரர் யாரும் தங்கள் பேச்சை மறுக்கவில்லை என்றும், அரசியல் சாசனம் வெறுப்புப் பேச்சை அங்கீகரிக்கவில்லை என்றும், பேச்சு சுதந்திரம் என்பது வெறுப்புப் பேச்சாக இருக்கக் கூடாது என்றும் கூறி, இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்ததுதான் என வாதத்தை நிறைவு செய்தார்.

அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், திமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான், அவர்கள்தான் திமுக-வை ஆட்சி அமைக்க தேர்ந்தெடுத்துள்ளார்கள் என தெரிவித்தார். இதுபோன்ற அரசியல் மற்றும் கொள்கை பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும், எம்.பி. எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது நாடாளுமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்திற்குட்பட்டது என்பதால், அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என விளக்கம் அளித்தார். அற்ப காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை அதீத அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சனாதன தர்மத்தை ஒழிப்பது ராஜஸ்தான் கலாச்சாரத்தையே அழிப்பது.. தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அட்டாக்!சனாதன தர்மத்தை ஒழிப்பது ராஜஸ்தான் கலாச்சாரத்தையே அழிப்பது.. தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அட்டாக்!

அமைச்சர் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, கோவில் சொத்துகளை அபகரித்தவர்களிடமிருந்து மீட்டதற்காக உள்நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் இந்த வழக்குகளை இந்து முன்னணியினர் தாக்கல் செய்திருப்பதாக குறிப்பிட்டார். 1902ஆம் ஆண்டில் பனாரஸ் பல்கலைகழகம் வெளியிட்ட சனாதனம் குறித்த புத்தகத்தில் சனாதன கொள்கைகள் என்பது ஆரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அனிதா சுமந்த், இந்து முன்னணியினர் தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

கருத்துகள் இல்லை: