tamil.oneindia.com - Kadar Karay : சென்னை: மதுரை மாநகருக்கும் மேலும் ஒரு புதிய அடையாளம் கிடைத்திருக்கிறது. தமிழ் வளர்த்த மதுரையில் இனிமேல், கலைஞர் நூற்றாண்டு நூலகமும் தமிழ் வளர்க்கப் போகிறது. அதை உணர்ந்துதான் முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை; கலைநகரம் மதுரை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நூலகத்தைப் பற்றி சிலரிடம் கேட்டோம். அவர்கள் தனித்தனியாகப் பல தகவல்களைச் சொன்னார்கள். அவை, புதிய புதிய தகவல்களாக இருந்தன. அப்படி என்ன சொன்னார்கள்?
அமைச்சர் எ.வ.வேலு
"இந்த நூலகம் இவ்வளவு பிரம்மாண்டமாக அமைந்திருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம். எதைச் செய்தாலும் அதைப் பெரிதாகச் செய்யவேண்டும். மக்கள் அதைப் பார்த்து வியக்கும் அளவுக்கு நம் வேலைகள் இருக்கவேண்டும் என்று நினைக்கக் கூடியவர் அவர். வெறும் பிரம்மாண்டம் மட்டுமல்ல; அது மக்களுக்குப் பயன் உள்ளதாகச் செய்ய வேண்டும் என்ற கோணத்திலும் சிந்திக்கக் கூடியவர்.
அதன்படிதான் 2022 ஜனவரி மாதம் சட்டமன்றத்தில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவைக் கொண்டாடும் வகையில் மதுரையில் இந்த நூலகம் கட்டுவதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார். மு.கருணாநிதி ஒரு எழுத்தாளர், படைப்பாளி, கதாசிரியர், அரசியல் சிற்பி எனப் பன்முகம் கொண்டவர். அவரையும் புத்தகத்தையும் பிரித்துப் பார்க்கமுடியாது. அவரையும் அறிவையும் பிரித்துப் பார்க்க முடியாது.
comments made by political leaders on Kalaignar centenary library in madurai
திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் ஆசான் அண்ணா. அண்ணாவின் நூற்றாண்டு முடிக்கின்றபோது அவருக்குச் சென்னையில் ஒரு பிரம்மாண்டமான நூலகத்தை, அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி கட்டினார்.
திமுக ஆட்சியைவிட்டு இறங்கிய பிறகான காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு அன்றைய அமெரிக்க அதிபர் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் தமிழ்நாட்டுக்கு வந்தார். வந்த அவர் வேறு எங்கும் செல்லவில்லை, நேராக அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்க்கச் சென்றார்.
சுற்றிப் பார்த்த அவர், "நான் உலகத்தில் எவ்வளவோ இடங்களைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். இப்படி ஒரு நூலகத்தைப் பார்த்ததே இல்லை" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அண்ணா, மு.கருணாநிதி வழி வந்தவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைச் சென்னையிலேயே வேறு ஒரு பகுதியில் கட்டி இருக்கலாம்.
comments made by political leaders on Kalaignar centenary library in madurai
ஆனால், வரலாற்றிலும் சரி, இதிகாசங்களிலும் சரி, எங்கே தமிழ் வளர்ந்தது என ஆராய்ந்து பார்த்தால், அது சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மாமதுரை தான் என்றே சொல்லும். நமக்குக் கிடைத்த சான்றுகள் சொல்வது இதுதான். அதனால், மதுரையில்தான் இந்த நூலகத்தை நிறுவவேண்டும் என முடிவு செய்தார் ஸ்டாலின்.
இங்கே கட்டியதால், இப்பகுதியைச் சுற்றி உள்ள ஏறக்குறைய 12 மாவட்டங்களில் உள்ள மக்கள் இதனால் பயனடைய உள்ளனர். அதுதான் மாபெரும் சிறப்பு.
இந்த நூலகத்தைக் கட்டவேண்டும் என்று ஸ்டாலின் திட்டமிட்டபோது ஆரம்பத்தில் 134 கோடி ரூபாய்தான் செலவழிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தார். இங்கே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த காலத்தில் அவர் மதுரை வந்தபோது எல்லாம் அடிக்கடி வந்து கட்டுமான வேலைகளைப் பார்வையிட்டுச் சென்றார். அவருக்கு அடிக்கடி பல யோசனைகள் வந்தன. அதை எல்லாம் சேர்க்கச் சொல்லி ஆணையிட்டார்.''
comments made by political leaders on Kalaignar centenary library in madurai
நாஞ்சில் சம்பத், பேச்சாளர்
"சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ஒரு மிகப் பெரிய நூலகத்தைக் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவாக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்திருக்கிறார். இது மதுரையையும் அதைச் சுற்றி உள்ள ஊர்களுக்கு மாபெரும் கொடை.
இதில் துறை சார்ந்த நூல்களும் அதை உட்கார்ந்து படிப்பதற்கான சூழலும் செய்து தரப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் இதனால் மிக அதிக அளவில் பலன்பெற உள்ளனர். இதனால் நமக்குப் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதைப்போன்று ஆய்வு செய்வதற்கான அரிய புத்தகங்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆராய்ச்சி அதிகரிக்கும்.
அறிவார்ந்த தளத்தில் தமிழ்ச் சமூகத்தை ஏற்று நிறுத்துவதற்கு ஒரு ஏணிப்படியாகவே இந்தக் கலைஞர் நூலகம் இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்."
comments made by political leaders on Kalaignar centenary library in madurai
திருமாவளவன், விசிக தலைவர்.
"பேரறிஞர் அண்ணா என்ற ஆளுமை தமிழ்நாட்டில் உருவாவதற்கு அவர் கற்ற நூல்கள்தான் காரணமாக இருந்தன. அதை யாராலும் மறுக்க முடியாது. கன்னிமரா நூலகத்தில் பெரும் பொழுதுகளை அவர் கழித்தார். அங்கே இருந்த ஏராளமான நூல்களை அவர் படித்தார்.
இன்றைக்கு உலகமே பேரறிவாளராக அம்பேத்கரைக் கருதுவதற்கு அவர் கற்ற நூல்கள்தான் காரணம். ஆகவே நூலகம் மனித வாழ்க்கையில் இன்றியமையாதது. ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் நூலகம் அளித்துள்ள பங்களிப்பு மகத்தானது. ஒரு தேசத்தில் நூலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன என்றால், அங்கே கல்வியின் நாட்டம் அதிகரித்திருக்கிறது என்பது பொருள். அறிவுத் தாகம், வேட்கை அதிகரித்துள்ளது என்று பொருள்.
எழுத்தாளர்கள், படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் பயன்பெறும் வகையில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டுள்ளது. அதற்காக முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்."
ம. ராஜேந்திரன், முன்னாள் துணை வேந்தர்:
"மதுரை சங்க காலத்திற்குப் பிறகு காஞ்சியாகவும் ஆகியுள்ளது. காஞ்சி என்றால் அண்ணாவைக் குறிக்கும். படிப்பு என்றால் அவரைச் சொல்வோம். அறிவு என்றால் அவரைச் சொல்வோம். தூங்கா நகராக இருந்த இந்த மதுரையைப் படிக்கும் மாநகராக நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி இருக்கிறார். மதுரைக்கே மகுடம் சூட்டுகின்ற அளவில், இந்த நூலகம் அமைந்திருக்கிறது."
comments made by political leaders on Kalaignar centenary library in madurai
கோவி செழியன், திமுக கொரடா
"முதல்வர் ஸ்டாலின், தமிழ்க் கடலாக ஒரு நூலகத்தை மதுரைக்கு அர்ப்பணித்திருக்கிறார். சென்னையில் அண்ணாவின் பெயரில் ஒரு நூற்றாண்டு நூலகம் இருப்பதைப் போன்று மதுரையில் கலைஞர் பெயரில் ஒரு நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றுப் பெருமை. இது வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது."
comments made by political leaders on Kalaignar centenary library in madurai
தமிழச்சி தங்கப் பாண்டியன், எம்.பி
'அரசனாகவும் புலவனாகவும் இருந்த அரசர்கள் மிகக் குறைவு. வாழ்கின்ற காலத்தில் அரசராகவும் புலவராகவும் திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது நூற்றாண்டு விழாவை ஒட்டி, 5வது தமிழ்ச் சங்கமாகச் சொல்லும் அளவுக்கு மக்களின் அறிவு பசியைப் போக்குகின்ற வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூலகத்தை மதுரையில் நிறுவியிருக்கின்றார்.
தென் தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் என அறிவுத்தாகம் கொண்ட அத்தனைப் பேரும் மிகப் பெரிய வரமாக இந்தநூலகம் இங்கே உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு எழுத்தாளராக, பேச்சாளராக, இலக்கியவாதியாக, எழுத்தையும் பேச்சையும் தன்னுடைய அரசியல் வாழ்வில் மிகப் பெரும் ஆயுதமாகக் கையாண்ட எங்களது தலைவர் மு.கருணாநிதியின் பெயரில் இது அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இதைவிட அவரை வேறு எப்படியும் சிறப்பிக்க முடியாது. "
comments made by political leaders on Kalaignar centenary library in madurai
ஸ்டாலின் ராஜாங்கம், தலித் ஆய்வாளர்
"மதுரையில் கலைஞர் நூற்றாண்டு திறக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. நூலகங்கள், அவை தொடர்பான வாசிப்பு பழக்கங்கள் என யோசிக்கும்போது மதுரைக்கும் அதற்குமான தொடர்பு நீண்டதாக உள்ளது. ஆனால், அப்படியான தொடர்புகள் எல்லாம் மிகப் பழமையானதாக இருக்கிறதோ? என்று என்னைப் போன்றவர்கள் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில்தான் இந்தக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் புதியதான ஒரு நவீன நூலகத்தைத் தமிழக அரசு மதுரையில் தொடங்கியுள்ளது.
மதுரை என்பது தென் தமிழ்நாட்டின் மையப் பகுதி. வாசிப்பு வளர வேண்டும் என்றால், அதை வாசிப்பதற்கான நல்ல சூழலை நாம் உருவாக்கித் தர வேண்டும். அதைச் செய்தால்தான் வாசிப்பு பழக்கமானது வளரும். அதை மிகச் சிறப்பாக நவீன வசதிகளோடு செய்து தந்துள்ளது.
இந்தத் தமிழ்ச் சமுகம் ஒரு ஊக்கம் பெற்ற சமூகமாகத் தானாகவே உயர்ந்து வளர்வதற்கு அடி உரமாகக் கலைஞர் நூலகம் அமைய இருக்கிறது. அது மிக மிக முக்கியமான விசயம். அறிவுச் சமூகத்திற்கு அது தேவையான ஒன்று. அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியையும் வாழ்த்தையும் சொல்லிக் கொள்கிறோம்."
comments made by political leaders on Kalaignar centenary library in madurai
எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித்
"நூலகம் என்றால் அது அறிவின் அடையாளம். கலாசாரத்தின் அடையாளம். ஒருநாட்டின் சேமிப்பு என்பது நூலகத்தில்தான் இருக்கின்றது. ஆகவே, மதுரையைச் சுற்றியுள்ள புத்தக ஆர்வலர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் ஏன் எழுத்தாளர்களுக்குக்கூடப் பயன்தரக் கூடியதாக இந்தக் கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளது.
இதில் குழந்தைகளுக்கு எனத் தனியான பகுதி, ஐஏஎஸ் போன்ற போட்டித் தேர்வு மாணவர்களுக்கு எனத் தனியான பகுதி, ஆராய்ச்சியாளர்களுக்கு எனத் தனிப் பகுதி என வியப்பை அளிக்கக்கூடிய அளவுக்கு மிகச் சிறப்பாக இந்நூலகம் கட்டப்பட்டுள்ளது.
மதுரைக்கும் தமிழுக்கும் நீண்ட உறவு உள்ளது. சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரைக் காஞ்சி மதுரையைப் பற்றிக் கூறுகிறது. மதுரை என்ற பெயர் தமிழ் தோன்றிய காலத்திலிருந்தே குறிப்பிடப்பட்டு வருகிறது. அவ்வளவு பழமையான ஊர் இந்த மதுரை. அந்த வரலாற்று நகரத்தில் இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைவிடச் சிறப்பு இந்த மதுரைக்கு வேறு இல்லை. "
ஒரு நூலகம் திறக்கப்பட்டால், அங்கே ஆயிரம் பேர் அறிவொளி பெறுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக