புதன், 5 ஏப்ரல், 2023

டொனால்டு ட்ராம்ப் கைது செய்யப்பட்டார் அமெரிக்க முன்னாள் அதிபர் ..

BBC Tamil :  அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார்.
முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டனில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார். கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார்.
இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் ட்ரம்ப், பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும், அதன் பின்னர் அவர் தன்னுடைய மரலாகோ (Mar-a-Lago) இல்லத்திற்கு சென்றுவிடுவார் என்றும் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட பின் அடுத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

மேலும் தன்னுடைய ஆதரவாளர்களை அமெரிக்க நேரத்தின் படி, செவ்வாயன்று மாலை 8.15 மணிக்கு சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம், நியூயார்க் நகரத்தின் நடுவர் மன்றம் டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம்சாட்டி வாக்கினை அளித்தது. அதாவது ட்ரம்புக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நடுவர் மன்றம் நம்பியது.

அதேசமயம் விசாரணையின்போது ட்ரம்பின் வழக்கறிஞர்கள் என்ன மாதிரியான வாதங்களை முன்வைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ட்ரம்ப் குற்றமற்றவர் என்று அவரது வழக்கறிஞர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக, இந்த விவகாரம் குறித்து நடுவர் மன்றம் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகிறது. தன்னுடன் தொடர்பு இருந்தது குறித்து, வெளியே சொல்லக்கூடாது என ஸ்டார்மி டேனியல்ஸ் என்னும் அபாச பட நடிகைக்கு ட்ரம்ப் பணம் கொடுத்தாரா என்பது தொடர்பாக பல ஆதாரங்களை அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

2016ஆம் ஆண்டு தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக அதிபர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் ட்ரம்ப். அப்போது அவருக்கு வயது 76. அந்த தேர்தல் நடப்பதற்கு சில காலத்திற்கு முன்னர்தான் ட்ரம்ப் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது.

ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்ன?

2006ஆம் ஆண்டில் தனக்கும், ட்ரம்புக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறுகிறார் ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். ஆனால் இதனை ட்ரம்ப் எப்போதுமே மறுத்து வந்திருக்கிறார்.

2016ஆம் அண்டு, தனக்கும் ட்ரம்புக்கும் இடையே இருந்த உறவு குறித்து, ஊடகங்களிடம் தெரிவிக்கப்போவதாக கூறியிருக்கிறார் ஸ்டார்மி டேனியல்ஸ்.

அப்போது ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோச்சன் என்பவர், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு சுமார் 1,30,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 1.07 கோடி ரூபாய்) வழங்கி, இதுகுறித்து வெளியே பேசக்கூடாது என சமரசம் செய்துள்ளார். இப்படி அளிக்கப்படும் பணத்தை ஹஷ் மணி( hush money) என குறிப்பிடுகின்றனர்.

இதுபோன்று பணம் வழங்கப்படுவது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. ஆனால் சிக்கல் எங்கே ஆரம்பித்தது என்றால், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து, ட்ரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோச்சனின் ’செலவுகளுக்கான பணத்தை திருப்பி செலுத்துதல் கணக்கில்’ பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சட்டக் கட்டணங்களுக்காக பணம் செலுத்துவதாகக் கூறி தனது வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அப்போது தேர்தல் நடைபெறுவதற்கு சற்று முந்தைய காலகட்டத்தில் இந்த விவகாரங்கள் நடைபெற்றுள்ளன.

எனவே தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய பண பரிமாற்றத்தில் விதிகள் மீறப்பட்டதாகவும் இந்த விவகாரம் கையாளப்படலாம்.

ஸ்டோர்மி டேனியல்ஸ் யார்?

ஸ்டோர்மி டேனியல்ஸின் இயற் பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட்.

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகி வந்த டொனால்ட் ட்ரம்ப் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

2006-ம் ஆண்டு ஜூலையில் கோல்ப் காட்சிப் போட்டி ஒன்றில் ட்ரம்பை அவர் சந்தித்தாக ஊடக நேர்காணல்களில் அவர் கூறினார்.

கலிபோர்னியா – நெவேடா மாகாணங்களுககு இடையே லேக் டாஹோவில் உள்ள தனது ஓட்டல் அறையில் இருவரும் உடலுறவு கொண்டதாக அவர் கூறினார். அந்த வேளையில் அவரது குற்றச்சாட்டுகளை ட்ரம்பின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார்.

தனது குற்றச்சாட்டுகள் குறித்து மவுனம் காக்குமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டாரா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “இதற்காக ட்ரம்ப் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவர் கர்வமிக்கவர்” என்று ஸ்டோர்மி டேனியல்ஸ் பதிலளித்தார்.

ட்ரம்ப் – ஸ்டோர்மி டேனியல்ஸ் பாலுறவு நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் குழந்தையை பெற்றெடுத்திருந்தார்.

2024 அதிபர் தேர்தலில் போட்டியிடலாமா?

தற்போதைய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, தண்டனையே விதிக்கப்பட்டாலும், அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடர்வதைத் தடுக்க முடியாது.

என்ன நடந்தாலும், தான் பின் வாங்கப்போவதில்ல என்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்பே கொடுத்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில், அமெரிக்க சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை பிரசாரம் செய்வதில் இருந்தும், அதிபராகப் பணியாற்றுவதில் இருந்தும், ஏன் கைதாவதில் இருந்தும் கூட தடுக்க முடியாது.

1920இல் யூஜின் டெப்ஸ் என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு 9 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சிறை தண்டனை பெற்றாலும் அவர் போட்டியிட முடியும்.

எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டால், அதிபர் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் ஏற்கெனவே உள்ள அப்பட்டமான பிளவுகளை இது ஆழமாக்கும்.

கருத்துகள் இல்லை: