திங்கள், 3 ஏப்ரல், 2023

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை: ஸ்டாலின் தலைமையில் நாளை சமூக நீதி மாநாடு!

 மின்னம்பலம் - Selvam  :  எதிர்க்கட்சிகள் ஒற்றுமை: ஸ்டாலின் தலைமையில் நாளை சமூக நீதி மாநாடு!
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நாளை (ஏப்ரல் 3) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கி நாடு முழுவதும் பாஜக அல்லாத 37 மாநில மற்றும் தேசிய கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இந்தநிலையில், சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நாளை காணொலி காட்சி வாயிலாக மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது.


இந்த மாநாட்டில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் தேசிய கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக உரையாற்றுகிறார்.

சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்திற்கான தேசிய கூட்டு திட்டத்தையும் முன்னெடுத்து செல்வது தொடர்பாக இம்மாநாடு நடத்தப்படுகிறது என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அவர் பேசும்போது,”பாஜகவை வீழ்த்த ஒற்றைக் குறிக்கோளாக கொண்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

இந்தநிலையில் திமுக சார்பில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமாக நிகழ்வாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. திமுகவின் இந்த முன்னெடுப்பு தேசிய அரசியலில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

கருத்துகள் இல்லை: