வியாழன், 10 பிப்ரவரி, 2022

பாஜகவினரை ஓட ஓட விரட்டிய தெலுங்கானா TRS !. மோடியை எதிர்த்து ஹைதராபாத் ...

 Shyamsundar -   Oneindia Tamil  :  ஹைதராபாத்: தெலுங்கானாவில் பிரதமர் மோடியை எதிர்த்து பல இடங்களில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகிறார். பிரதமர் மோடியை தொலைநோக்கு பார்வை இல்லாதவர் என்றும், பாஜகவை கடலில் தூக்கி வீச வேண்டும் என்றும் சந்திசேகர ராவ் சமீபத்தில் குறிப்பிட்டார்.
அதேபோல் பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். மேலும் தெலுங்கானாவிற்கு சமீபத்தில் ராமானுஜர் சிலையையே திறக்க வந்த பிரதமர் மோடியை சந்திசேகர ராவ் விமான நிலையத்தில் வரவேற்காமல் தவிர்த்தார்.


இந்த நிலையில்தான் தெலுங்கானா மாநிலம் உருவானது பற்றி பிரதமர் மோடி பேசிய கருத்துக்கள் சந்திசேகர ராவ் மற்றும் அவரின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் இடையே கோபத்தை உண்டாக்கி உள்ளது. ராஜ்ய சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதாவில் பேசிய பிரதமர் மோடி, தெலுங்கானா மாநிலம் உருவானதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் தெலுங்கானா மாநிலம் முறையாக உருவாக்கப்படவில்லை.

2014ல் இந்த மசோதா எந்த விதமான விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்களின் மைக் ஆப் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை. முறையான விவாதம் நடந்து இருந்தால் நன்றாக இருக்கும். இதனால் இப்போதும் கூட ஆந்திரா, தெலுங்கானா இடையே மோதல், கசப்பு நிலவி வருகிறது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு டிஆர்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகே கருத்து தெரிவித்த முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடி தெலுங்கானா மக்களை அவமதித்து விட்டார். எங்களின் போராட்டத்தை அவர் அவமதித்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி பேசியாவது அவமானகரமான ஒன்று. எங்களின் பல ஆண்டு கஷ்டத்தை, தியாகத்தை அவர் கொச்சைப்படுத்திவிட்டார். அவரின் பேச்சுக்கு கண்டனம் என்று சந்திரசேகர ராவின் மகன் கேடி ராமா ராவ் விமர்சனம்செய்துள்ளார் .

இந்த நிலையில்தான் நேற்று தெலுங்கானா முழுக்க பிரதமர் மோடிக்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்று வந்தது. நேற்று தெலுங்கானா முழுக்க பிரதமர் மோடியை எதிர்த்து பல இடங்களில் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் நடந்தது. அதேபோல் இன்னும் சில இடங்களில் வித்தியாசமான சில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோல் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடியை பறக்க விட்டு டிஆர்எஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர் .

காங்கிரஸ் கட்சியும் இந்த போராட்டத்தை மேற்கொண்டது. முக்கியமாக தெலுங்கானா எல்லை பகுதிகளில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. பல இடங்களில் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் தீவிரமாக நடந்தது. தெலுங்கானா மக்களின் போராட்டத்தை பிரதமர் மோடி அவமதித்து விட்டார். அவர் எங்களை மதிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்தின.

இந்த நிலையில் வாரங்கல் பகுதியில் டிஆர்எஸ் கட்சியினர் கொடும்பாவி எரிக்கும் போராட்டத்தை நடத்திய போது அங்கு வந்த பாஜகவினர் டிஆர்எஸ் கட்சியினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். காவி துண்டு, பாஜக கொடியோடு வந்த பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். இதை பார்த்ததும் ஒன்று திரண்ட டிஆர்எஸ் கட்சியினர் குச்சிகளை வைத்து பாஜகவினர் அடித்தனர்.

பாஜகவினரை தொடர்ந்து குச்சியால் தாக்கி ஓட ஓட அவர்களை விரட்டி அடித்தனர். இதில் பாஜகவினர் சிலரின் கைகள் முறிந்ததாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இன்னும் பல இடங்களில் பாஜகவினர் இதேபோன்ற தாக்குதல்களுக்கு உள்ளானார்கள் . இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை: