ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

அம்பானியை மிஞ்சிய அதானி.. டாப் 10ல் கூட அம்பானிக்கு இடமில்லை..!

  Prasanna Venkatesh  -  GoodReturns Tamil : இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அப்படி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்திலேயே இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
இது மட்டும் அல்லாமல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத மாற்றமும் தற்போது நடந்துள்ளது.
ஒட்டுமொத்த ஆசியச் சந்தையிலும் மிகப்பெரிய பணக்காரர் என உச்ச நிலையை நீண்ட காலம் முகேஷ் அம்பானி வைத்திருந்தார். இவருடைய இடத்திற்குச் சீனாவின் அலிபாபா மற்றும் டெக் நிறுவனத் தலைவர்கள் போட்டிப்போட்ட நிலையில் சீனா அரசின் கட்டுப்பாடுகளும், விதிமுறைகளைச் சீன பணக்காரர்களின் சொத்து மதிப்பை பெரிய அளவில் குறைத்தது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முகேஷ் அம்பானிக்குப் போட்டியாக ஒரு இந்தியரே போட்டியாக வந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், முகேஷ் அம்பானியின் வீழ்ச்சி பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் கௌதம் அதானி கடந்த 3 வருடத்தில் பல துறையில் வர்த்தகத்தைத் துவங்கிய நிலையில் பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் தாறுமாறாக உயர துவங்கியுள்ளது, குறிப்பாக அதானி கிரீன் போன்ற நிறுவனங்களின் பங்கு வளர்ச்சி முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்லாமல் கௌதம் அதானிக்கும் பெரிய அளவில் உதவியுள்ளது.

இதேவேளையில் முகேஷ் அம்பானி B2B வர்த்தகத்தில் B2C வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வரும் காரணத்தால் சீனா பணக்காரர்களைக் காட்டிலும் முகேஷ் அம்பானியின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது.

இதனால் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக மட்டும் அல்லாமல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து டாப் 10 பட்டியலுக்குள்ளேயே இருந்தார். இந்நிலையில் முகேஷ் அம்பானி கௌதம் அதானிக்கு மத்தியிலான போட்டி அதிகரித்த கௌதம் அதானி ஒருபடி முன்னேறியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 290 மில்லியன் டாலர் சரிந்தாலும் 90.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக மட்டும் அல்லாமல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தையும் பெற்றுள்ளார்.

கௌதம் அதானியின் ராக்கெட் வேக வளர்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 89.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறி 11வது இடத்தை எட்டியுள்ளார் எனப் போர்ப்ஸ் தரவுகள் கூறுகிறது.

ஆனால் கடந்த ஒரு மாதத்தில் கூகுள் குழுமத்தின் நிறுவனர்களான லேரி பேஜ், செர்கி பிரின், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் ஸ்டீவ் பால்மர் ஆகியோரின் சொத்து மதிப்பு பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அனைத்தும் சுந்தர் பிச்சை மற்றும் சத்ய நாடெல்லா செய்யும் மேஜிக் தான்.

லேரி பேஜ், செர்கி பிரின், ஸ்டீவ் பால்மர் ஆகியோரின் வளர்ச்சி காரணமாக முகேஷ் அம்பானிக்கு டாப் 10 பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை: