சனி, 26 செப்டம்பர், 2020

மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சந்திப்பு

   dhinakaran :சென்னை: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர், திமுக கூட்டணியை வெற்றியடையச் செய்து மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று கூறினார்.
 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது குறித்தும், சட்டமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.



 இந்நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தினேஷ் குண்டு ராவ் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய பாஜ அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ம்தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.  இந்த போராட்டம் குறித்தும், வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

 இந்த சந்திப்புக்கு பின்பு தினேஷ் குண்டு ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. திமுகவும், காங்கிரசும் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் கடுமையாக பாடுபடும். கட்சியை பலப்படுத்துவதுடன், கூட்டணியையும் பலப்படுத்துவோம்.  திமுக கூட்டணியை வெற்றியடையச் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம். வரும் 28ம்தேதி திமுக கூட்டணி நடத்த உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலினுடன் விவாதித்தோம். மற்ற விஷயங்கள் குறித்து தேர்தல் நெருங்கும் நிலையில் பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: