திங்கள், 21 செப்டம்பர், 2020

விவசாய சட்டங்கள்: கார்ப்பரேட் தேசியத்தின் காலம்!

minnambalam.com/ :ராஜன் குறை : இப்போதைய நாடாளுமன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்த நம் மனத்தில் ஏராளமான கேள்விகள். தேசத்தின் நலன் என்பதே கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனாக எப்படி மாறுகிறது? எதனால் பெருவாரிசிறப்புக் கட்டுரை: விவசாய சட்டங்கள்: கார்ப்பரேட் தேசியத்தின் காலம்!யான மக்களின் ஓட்டுகளைப் பெற்று ஆட்சியில் அமரும் கட்சிகள், பாஜக போல தேசம், தேசப்பற்று என்று மூச்சுக்கு மூச்சு பேசும் கட்சிகள் நாட்டின் பெருவாரியான விவசாயிகளின் நலன்களை கார்ப்பரேட் நலன்களுக்கு காவு கொடுக்க முன்வருகின்றன? அ.இ.அ.தி.மு.க போன்ற மத்திய அரசு அடிமைக் கட்சிகள் எப்படி துணிந்து நாளை மக்களிடம் ஓட்டுக் கேட்பார்கள்? ஏன் அரசும், அரசியல் கட்சிகளும் முதலீட்டிய நலனே மக்கள் நலன் அதுவே தேசத்தின் நலன் என்று நினைக்கின்றன? 

உலகின் பெரும்பாலான நாடுகள் இப்படித்தான் இருக்கின்றன. ஒருவகையில் உலகமே கார்ப்பரேட்களின் கையில்தான் இருக்கிறது. மல்டி நேஷனல் கார்ப்பரேஷன் என்ற வார்த்தை பிரபலமானது. தமிழில் பன்னாட்டு நிறுவனங்கள் என்று சொல்கிறோம். இவை ஏன் தேசிய அரசுகளை விட சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன? ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீட்டை குவிக்க மைக்ரோசாஃப்டிலிருந்து பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் ஏன் முனைந்து நிற்கின்றன? இவர்கள் நலனுக்காகத்தானே விவசாயம் குறித்த மசோதாக்களை தடாலடியாக நாடாளுமன்றம் நிறைவேற்றி சட்டமாக்குகிறது? மாநிலங்களவையில் நாடாளுமன்ற நடைமுறைகளை மீறி ஓட்டெடுப்பையே அனுமதிக்காமல் சட்ட த்தை நிறைவேற்றுமளவு என்ன அவசரம்?

இதற்கெல்லாம் பதிலை தேடிப்போகும்போது அதிகாரம் அல்லது செயலாற்றல் என்பது எந்த விதமான வடிவத்தை எடுக்கிறது என்பதே அடிப்படையாக இருக்கிறது. கல்வியா, செல்வமா, வீரமா என்று சரஸ்வதி சபதம் படத்தில் ஒரு பாட்டு வரும். கல்வி எனப்படும் தகவல் சேகரம் அதிகாரத்தின் ஒரு வடிவமாக இருப்பது உண்மைதான். அதேபோல உலகில் பலகாலம் பெரும்படைகளை திரட்டி போர் செய்ய வல்லவர்களிடம் அதிகாரம் குவிந்தது. பேரரசுகளும், பேரரசர்களும் படைபலத்தால் உருவானார்கள். இன்றும் அணு ஆயுத ஆற்றல், ஏவுகணைகள், ரஃபேல் போர் விமானம் என்று போர் சார்ந்த ஆயுதக்குவிப்பும் அதிகாரத்தின் ஒரு வடிவமாக இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து முதலீட்டிய குவிப்பு என்பது அதிகாரத்தின் மிக முக்கிய வடிவமாக இன்று இருக்கிறது. முதலீட்டிய சக்தி இருந்தால் அறிவு, படைபலம் எதைவேண்டுமானால் உடனே பெற்றுவிடலாம் என்பதே நடைமுறையாக இருக்கிறது. எனவேதான் கார்ப்பரேட் எனப்படும் முதலீட்டிய திரட்டுப் பெருநிறுவனங்கள் தேசிய அரசுகளைவிட ஆற்றல் மிக்கவையாக உள்ளன. அவையே மக்களின் வாழ்வை நிர்ணயிக்கின்றன. பிரமாண்டமான உற்பத்தி, நுகர்வு வலைப்பின்னல்களை உருவாக்குகின்றன. அதனால்தான் கார்ப்பரேட்களுக்கு எது நல்லதோ அதுவே தேசத்துக்கும், மக்களுக்கும் நல்லது என்று நம்பவைக்க முயற்சி செய்யப்படுகிறது. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களும் அதன் முதலீட்டிய குவிப்பு வலுப்பெற அனைவரையும் சுரண்டி, கட்டுப்படுத்தி சர்வாதிகாரம் கொண்டவையாக மாறுகின்றன. தேசிய அரசுகள் அவற்றை நம்பித்தான் இருக்கின்றன என்பதால் அரசும், அரசியல் கட்சிகளும் மக்களிடம் கார்ப்பரேட் நலன்களே உங்கள் நலன் என்று கூறுகின்றன. விவசாயத்தை நாடு தழுவிய அளவில் ஒப்பந்தமுறை விவசாயமாக மாற்றினால்தான் விவசாய விளைப்பொருட்களை கார்ப்பரேட் வர்த்தகத்தின் கைப்பிடிக்குள் கொண்டுவர முடியும். துவக்கத்தில் அரசு கொள்முதல், அது சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லாமல் யாரிடம் வேண்டுமானால் சந்தையில் விளைப்பொருட்களை விற்கலாம் என்பது விவசாயிகளுக்கு நன்மை செய்வதுபோல தோன்றினாலும், சந்தையை கார்ப்பரேட் சக்திகள் கட்டுப்படுத்தும்போது விவசாயிகள் அவர்களை நம்பித்தான் இருக்க வேண்டும். மெள்ள மெள்ள விவசாயிகள் கார்ப்பரேட்களின் ஒப்பந்தக் கூலிகளாக மாறிவிடுவார்கள் என்பதே இந்தச் சட்டங்கள் உருவாக்கும் எதிர்காலம்.

இதையெல்லாம் செய்ய இயல்வதற்கு காரணம் பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று பொதுவாக பேசப்படுவதுதான். அந்த வளர்ச்சி கார்ப்பரேட் நிறுவன ங்களின் வளர்ச்சியா, மக்களின் வளர்ச்சியா என்று கேட்கும்போதுதான் நாட்டின் வளர்ச்சி என்ற மாய்மாலம் அம்பலமாகும். விவசாயிகள், இடைத்தரகர்கள், வியாபாரிகள் என பல்முனைகளில் இயங்கும் பொருளாதாரம் கார்ப்பரேட் நிறுவனங்களின் குடைநிழலில் வரும்போது அனைவரும் அதன் கூலிகளாக மாறுவார்கள். இந்த மாற்றம் ஏற்கனவே நிகழ்ந்து வருவதுதான்; அது மெள்ள மெள்ள பெருகும். சியோ ஹோட்டலில், சியோ சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, சியோ பீடா போட்டுவிட்டு, சியோ தியேட்டரில், சியோ புரொடக்‌ஷன் சினிமா பார்த்துவிட்டு, சியோ பல்பொருள் அங்காடியில் தேவையானவற்றை வாங்கிகொண்டு, சியோ அடுக்கு மாடி குடியிருப்பில் நம் வீட்டுக்கு திரும்புவோம். ஓ சியோ டண்டனாடன்; சியோ,சியோ,சியோ டண்டனாடன். அப்போது சியோ நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கினால் நாமும் அதன் வளர்ச்சியிலும், லாபத்திலும் பங்குபெறலாம் என்பதும் சாத்தியம்தான். பிறகென்ன பிரச்சினை என்று கேட்டால் அதற்கான விடையை அறிய ஜோசஃப் ஹெல்லர் என்பவர் எழுதிய காட்ச்-22 என்ற நாவலை வாசிக்க வேண்டும். அதில் ஒரு கதாபாத்திரம் வரும் மிலோ மைண்டர்பைண்டர் என்று பெயர்.

மிலோ மைண்டர்பைண்டர்

காட்ச் 22 நாவலின் கதைக்களம் இரண்டாம் உலகப்போரில் சிசிலியில் நிலைகொண்ட ஒரு விமானப்படை பிரிவு. அவர்கள் பணி இத்தாலியைத் தாக்கி ஊடுருவுவது. அந்த நிலையில் போரின் அபத்தத்தை, வன்முறையை அவல/அபத்த நகைச்சுவையாக விவரிக்கும் நாவல் அது. அதில் அந்த பிரிவினருக்கான உணவு தயாரிக்கும் மெஸ்ஸுக்குப் பொறுப்பாளிதான் மிலோ. உணவுப்பொருட்கள் வாங்க ஒரு விமானத்தை மிலோ பயன்படுத்துவான். அப்போது மிலோ அனைவரிடமும் சொல்வான்: “நான் எம் & எம் கார்ப்பரேஷன் என்று ஒன்றை தொடங்குகிறேன். நீங்கள் அனைவரும் அதில் பங்குதாரர்கள்”. மற்ற விமானிகளுக்கு என்னவென்று புரியாவிட்டாலும் சரி ஏதோ செய்யட்டும் என்று நினைப்பார்கள். மிலோ அவர்களது மெஸ்ஸுக்கு பொருட்கள் வாங்கும்போது பிற நேச நாடுகளின் ராணுவ அணிகளின் மெஸ்ஸுக்கும் சேர்த்து வாங்கத் துவங்குவான். கேட்டால் அதில் எம் & எம் கார்ப்பரேஷனுக்கு நல்ல வருவாய் என்பான். பின்னர் எதிரிகளின் ராணுவ மெஸ்ஸுக்கும் சேர்த்து உணவுப் பொருட்கள் வாங்கி கொடுப்பான். எல்லோரும் அதிர்ச்சியடைவார்கள். அதை எப்படி செய்யலாம் என்று கேட்டால் அவர்கள் அதிக பணம் தருகிறார்கள்; நம் கார்ப்பரேஷனுக்குத்தானே நல்லது என்பான். அவனுடைய விமானத்துக்கு வித்தியாசமான வண்ணமடிப்பான். விமான தளத்தில் உள்ள தளவாடங்களை பிற ராணுவங்கள் கேட்டால் விற்றுவிடுவான். ஒருமுறை போர் விமானத்தில் சென்ற இரு விமானிகளைத் தரையிலிருந்து சுடுவார்கள். குண்டு ஒரு விமானியை தாக்கி விடும். சக விமானி சிகிச்சை செய்ய முயற்சி செய்வான். முதலுதவி பெட்டியில் பஞ்சோ, கட்டுப்போடும் துணியோ இருக்காது. அதற்குப்பதில் ‘எம்&எம் கார்ப்பரேஷனுக்காக அகற்றப்பட்டுவிட்டது’ என்ற துண்டுச்சீட்டு மட்டும் இருக்கும்.

இதற்கெல்லாம் மேலாக ஒரு முறை விமானிகள் அணிவகுப்பு பயிற்சிகள் செய்து கொண்டிருக்கும்போது மிலோ அவனுடைய விமானத்தில் தாழ்வாக பறந்து வருவான். சில குண்டுகளை வீசுவான். எல்லோரும் அதிர்ச்சியடைந்து ஓடுவார்கள். பின்னர் அவன் விமானத்தை தரை இறக்கியபின் கோபமாக அவனை நோக்கி செல்வார்கள். மிலோவோ மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவான். அனைவரிடமும் கார்ப்பரேஷனுக்கு பெருத்த லாபம் கிடைத்திருக்கிறது என்பான். என்னவென்றால் அவனுடைய படைத்தளத்தின் மீதே குண்டுகள் வீசினால் பெருமளவு பணம் கொடுப்பதாக எதிரி ராணுவம் கூறியது என்பான். உங்கள் பங்குகளின் மதிப்பு கடுமையாக உயர்கிறது கவலைப்படாதீர்கள் என்பான். மற்றவர்களுக்கு அதிர்ச்சியில் பேச்சே வராது.

இந்த அபத்த நகைச்சுவையில் ஒரு பெரிய உண்மை இருக்கிறது. எல்லோரும் எம் & எம் கார்ப்பரேஷனில் பங்குதாரர்கள்தான். அதற்காக தங்கள் மீதே குண்டுவீச உடன்பட முடியுமா என்ன? ஆனால், மிலோவுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. தொடர்ந்து அனைவருக்கும் பங்கு, லாபம் என்று சொல்வானே தவிர அவனால் அனைவருக்கும் இழப்புகள்தான் நேரும். அதைப்போலத்தான் கார்ப்பரேட் வளர்ச்சியை தேச வளர்ச்சி என்று சொல்லி அதற்காக மக்களை சுரண்டுவதும், அவர்கள் வாழ்வாதாரங்களை பாழ்செய்வதும்.

யாருடைய வளர்ச்சி? யாருடைய இழப்பு?

வளர்ச்சியின் பெயரால் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூழலை நாசம் செய்கின்றன. வேதாந்தா தூத்துக்குடியில் நிலத்தடி நீரை, காற்றை ஸ்டெர்லைட் ஆலை மூலமாக பாழாக்குகிறது என்றால், ஒடிசாவில் காடுகளை அழிக்கிறது. பிரேசிலில் கார்ப்பரேட் விவசாயத்துக்காக மழைக்காடுகளை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம் அழிப்பதாகவும், அதே நிறுவனம் அதிபர் போல்சனோராவுக்கு தேர்தல் நிதி தருவதாகவும் கூறப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல்வாதிகள், அரசாங்கங்கள் துணையுடன் துரித லாபத்திற்காக இயற்கை வளங்களை சூறையாடுகின்றன. இவையனைத்தும் “வளர்ச்சி” என்ற பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆரோக்கியமான இயற்கை சூழலையும், வாழ்வாதாரங்களையும் இழக்கும் மக்கள் இந்த வளர்ச்சியினால் எதையும் பெறுவதில்லை.

இந்த போக்கின் தொடர்ச்சியாகத்தான் நாட்டின் எந்த பகுதியில் விளையும் விவசாய விளைப்பொருட்களையும், நாட்டின் எந்தப் பகுதியில் இருப்பவரும் வாங்கலாம் என்ற சட்டம் இயற்றப்படுகிறது. ஏனெனில் அப்போதுதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடு முழுவதும் ஒப்பந்தங்கள் போட்டு கொள்முதல் செய்ய முடியும். கார்ப்பரேட்களின் லாபத்திற்காக, வளர்ச்சிக்காக விவசாயிகளும். விவசாய நிலங்களும் பலியாவதற்குத்தான் இந்த சட்டங்கள் வகை செய்கின்றன. எங்கும் மிலோ மைண்டர்பைண்டர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரம் பறிபோவது அவர்கள் நன்மைக்குத்தான் என்று சொல்கிறார்கள். தேசத்தின் வளர்ச்சி என்பது கார்ப்பரேட் வளர்ச்சியா, மக்கள் வளர்ச்சியா என்ற கேள்வியே முக்கியமானது.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

கருத்துகள் இல்லை: