வெள்ளி, 24 ஜனவரி, 2020

சிஏஏ: தொடங்கியது இரவு பகல் தொடர் போராட்டம்!

சிஏஏ: தொடங்கியது இரவு பகல் தொடர் போராட்டம்! மின்னம்பலம் : சென்னையில் ஒரு ஷாஹீன் பாக்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட நிலையில், மத்திய அரசு இந்த சட்டத்தில் இருந்து ஒரு இன்ச் அளவு கூட பின்வாங்காது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துவிட்ட நிலையிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்பாட்டம், முற்றுகை, மாநாடு என்று பல்வேறு வடிவங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்... டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் நடப்பது போல ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக தொடர் போராட்டம் இன்னும் தமிழகத்தில் நடக்கவில்லை.
இந்த நிலையில்தான் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஷாஹீன் பாக் போல தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்து அதை இன்று (ஜனவரி 24) தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு வண்ணாரப்பேட்டை அனைத்து மஸ்ஜித்கள் மற்றும் ஜமாத்தார்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. பேசின் பிரிட்ஜ் அருகே இருக்கும் லாலாகுன்டா பகுதியில் இந்த தொடர் போராட்டம் தொடங்கியிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் இப்போது வரை 24 மணி நேரமும் ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. பெண்கள் முன்னெடுப்பில் தொடங்கிய இந்தப் போராட்டத்துக்கு யாரும் தலைமையேற்கவில்லை. 41 நாட்களாக நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பெண்கள், போராட்டக்காரர்கள் வந்து அமைதியாக போராடிவிட்டுச் செல்கிறார்கள். ஆங்காங்கே போராடுவதவிட ஒரே இடத்தில் தொடர் போராட்டம் நடத்தினால் அரசுக்கு அழுத்தம் அதிகமாகும் என்பதன் அடிப்படையிலேயே இந்த ஷாஹீன் பாக் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாலை 6 மணிக்கு வெள்ளிக்கிழமை தொழுகை சாலையிலேயே நடைபெற்றது. ஆண்களும், பெண்களுமாக திரண்டு நின்று சாலையிலேயே தொழுகையை முடித்துவிட்டு மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
முன்னாள் வக்ஃப் வாரிய தலைவர் ஹைதர் அலி, மஜக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ரத்தினம் அண்ணாச்சி என்று பலரும் வந்து போராட்டத்தில் பேசினார்கள். அந்தி சரிந்த பின்னும் இன்னும் போராட்டம் தொடர்கிறது. நூற்றுக்கணக்கான போலீஸாரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
போராட்டத்தில் கலந்துகொண்ட சிலரிடம் பேசியபோது,
“தமிழ்நாடு முழுதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எத்தனை ஆயிரம் பேரைத் திரட்டினாலும் ஒரு நாளில் போராட்டம் முடிந்துவிடுகிறது. அரசுக்கு தொடர் அழுத்தம் தர வேண்டுமென்றால் 24 மணி நேரமும் தொடர் போராட்டம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், டெல்லியில் நடக்கும் ஷாஹீன் பாக் போராட்டம் போல சென்னை வண்ணாரப்பேட்டையில் இது தொடங்கப்பட்டுள்ளது. இதை எந்தக் கட்சியும் ஒருங்கிணைக்கவில்லை. வண்ணாரப்பேட்டை அனைத்து மஸ்ஜித்கள், ஜமாத் கூட்டமைப்புதான் இதை ஒருங்கிணைக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல இந்த போராட்டம் தொடரும். மாவட்டம் தோறும் இப்படியான ஒரு தொடர் போராட்டம் நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எந்தப் போராட்டத்துக்கும் அனுமதி அளிக்காத காவல்துறையினர் இந்தப் போராட்டத்தையும் தடுத்து நிறுத்தக் கடுமையாக முயற்சிக்கிறார்கள். ஆனால் இன்று தொடங்கிய போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை இரவு பகலாக எத்தனை நாட்களானாலும் தொடரும்” என்கிறார்கள்.
வடசென்னை வண்ணாரப்பேட்டையை நோக்கி தமிழகத்தின் கவனம் குவிந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: