வெள்ளி, 30 நவம்பர், 2018

சோறு போடாத மகனின் சொத்து பத்திர பதிவை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர் .. திருவண்ணாமலை

கலெக்டர் கந்தசாமி
Mahalaxmi : சொத்தை வாங்கி விட்டு சோறு போடாத மகன்கள் ; பத்திர பதிவை
ரத்து செய்து உத்தரவிட்ட கலெக்டர்.!
இது ஒரு நல்ல தொடக்கம் தானே..!
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(75). விவசாயி. அவரது மனைவி பூங்காவனம்(63). இவர்களது மகன்கள் பழனி(40), அரசு பஸ் கண்டக்டர். செல்வம்(37), கட்டிட தொழிலாளி. இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயி கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன்களுக்கும் தலா 2.5 ஏக்கர் வீதம் தான செட்டில்மென்ட் பத்திரப் பதிவு மூலம் எழுதி வைத்தார். அதன்பிறகு, மகன்களின் நடவடிக்கைகள் மாறி, பெற்றோருக்கு சோறு போடாமல் தவிக்கவிட்டனர். இளைய மகன் செல்வம், தந்தையை அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். உணவுக்கும் வழியின்றி மனைவியுடன் தவித்த கண்ணன், இருவரும் தலா 60 சென்ட் நிலத்தையாவது ெகாடுங்கள், விவசாயம் செய்து சாப்பிடுகிறோம் என கேட்டும், மகன்கள் மறுத்துவிட்டனர். இதனால் கண்ணன், அவரது மனைவி பூங்காவனம் ஆகியோர், கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கலெக்டர் கந்தசாமியிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.

அவரது உத்தரவின்பேரில், ஆர்டிஓ(பொறுப்பு) உமாமகேஸ்வரி, அவரது மகன்களை அழைத்து விசாரித்தார். அப்போது, மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாகவும், 60 சென்ட் நிலத்தை தருவதாகவும் தெரிவித்தார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தர மறுத்துவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை கலெக்டரிடம், ஆர்டிஓ ஓப்படைத்தார். இதை தொடர்ந்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ், மகன்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இளைய மகன் செல்வம் வேறொருவருக்கு விற்ற நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலமும் விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து கண்ணன், அவரது மனைவி பூங்காவனத்தை நேற்று அழைத்து, நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். முதியவர்கள் இருவரும், அவருக்கு நன்றி தெரிவித்தனர்....
சபாஷ் கலெக்டர்.!

கருத்துகள் இல்லை: