புதன், 28 நவம்பர், 2018

தி வயர் பத்திரிக்கை மீது அணில் அம்பானி 6,000 கோடி அவதூறு வழக்கு.. ரபேல் ஊழல் பற்றி ...

‘தி வயர்’ மீது 6,000 கோடி அவதூறு வழக்கு!
மின்னம்பலம் : ரஃபேல் ஊழலில் அனில்
அம்பானியைத் தொடர்புபடுத்தி அவதூறான செய்திகள் வெளியிட்டதாகக் கூறி ‘தி வயர்’ இணைய இதழ் மீது 6,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி அவருடைய கம்பெனி நேற்று (நவம்பர் 27) அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
‘தி வயர்’ இணைய இதழ் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று ‘ரஃபேல் ஊழல்: இந்தச் சர்ச்சையை எப்படி புரிந்து கொள்வது?’ என்ற தலைப்பில் வீடியோ விவாதம் ஒன்றை நடத்தி அதை வெளியிட்டிருந்தது. அந்த விவாதத்தில் பாதுகாப்புத் துறை தொடர்பாக எழுதிவரும் பத்திரிகையாளர் அஜய் சுக்லா என்பவரும், தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் ஹேப்பிமேன் ஜேக்கப்பும் தி வயரின் சார்பாக எம்.கே.வேணுவும் கலந்து கொண்டனர்.

அந்த விவாதத்தில், கடைசி நேரத்தில் ரிலையன்ஸ் கம்பெனியின் வரலாறு தெரியாமல் எப்படி ஒப்பந்தத்தில் எடுத்து்க் கொள்ளப்பட்டது என்றும் அந்தப் பேரத்தில் வெளிப்படைத்தன்மை இருந்ததா என்பது குறித்தும் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால், இந்த விவாதம் அவதூறான செய்திகளைக் கூறியுள்ளது என்றும் தனது கம்பெனியான ரிலையன்ஸின் பெருமையையும் கௌரவத்தையும் குலைத்து விட்டது என்றும் அனில் அம்பானி தெரிவித்துள்ளார். அதனால் மானநஷ்டஈடாக 6,000 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று கோரி வழக்கு ஒன்றை அனில் அம்பானி அகமதாபாத் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையானது நேற்று அகமதாபாத்தில் நீதிமன்றத்தில் தொடங்கியது.
இது தொடர்பாக தி வயரின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் கூறுகையில், ஊடகத்தை அச்சுறுத்தி மௌனமாக்கிட இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது, இதுபோன்ற தந்திரங்களினால் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
தி வயர் இதழின் மீது ஏற்கனவே அதானி குழுமம் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று கிரிமினல் வழக்குகளையும் மூன்று சிவில் வழக்குகளையும் தொடர்ந்துள்ளது. பாஜக தலைவர் அமித் ஷாவின் மகனின் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பாஜக எம்.பி ராஜீவ் சந்திரசேகரினால் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவி சங்கரினால் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: