எந்த மாநிலமும் எதிர்க்காத நீட் தேர்வை
தமிழ்நாடு மட்டும் எதிர்ப்பதும்-விலக்கு கோருவதும் ஏன்? என்ற முதல் கேள்வியில் தொடங்கி, அரியலூர் மாணவி அனிதா ‘நீட்’ கொடுமையால் (தற்)கொலையானதைக் கொச்சைப்படுத்தும் வகையில் பல கேள்விகளை எழுப்பி, தமிழ்நாட்டுக்கு மட்டும் தனிச் சட்டமா எனக் கேட்கிறார்கள் நேரடி-மறைமுக பா.ஜ.க.வினர்.
பிரிட்டிஷ் அதிகாரத்திற்குட்பட்ட இரட்டையாட்சி முறையில் 1928ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னை மாகாணத்தில் இடஒதுக்கீட்டுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. வகுப்புவாரி உரிமைச் சட்டம் (கம்யூனல் ஜி.ஓ). இதன் வாயிலாகக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிமை கிடைத்தது.
சுதந்திர இந்தியாவில் அந்த இடஒதுக்கீட்டிற்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து பெரியாரும் அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகக் களம் கண்டதால் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிரதமர் நேருவிடம் வலியுறுத்த, தமிழ்நாட்டின் நலன் காக்கும் வகையில் 1951ல் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது.
1989-91 கலைஞர் ஆட்சியில் இடஒதுக்கீட்டின் அளவு 69% என்ற அளவை எட்டிய நிலையில்,1991-96 ஜெ ஆட்சிக்காலத்தில் மீண்டும் உச்சநீதிமன்றத்தால் அந்த இடஒதுக்குட்டிற்கு நெருக்கடி உருவானது. அப்போது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முயற்சியால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 31(சி) பிரிவின் அடிப்படையில் புதிய சட்ட மசோதவை செல்வி.ஜெயலலிதா அரசு நிறைவேற்றி அதனை இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்தது. இதன்காரணமாக 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.
2006-11 கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்விகளுக்கான நுழைவுத்தேர்வினை ரத்து செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, உரிய ஒப்புதல்கள் பெற்று தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் வெளிப்படையான முறையில் அட்மிஷன்கள் நடைபெற வழி செய்யப்பட்டது.
தேவதாசி முறை ஒழிப்பு, கோவில் இந்து அறநிலையப் பாதுகாப்பு சட்டம், இருமொழிக்கொள்கை, சீர்திருத்த திருமண சட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம், சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு இடஒதுக்கீட்டுச் சட்டம் உள்ளிட்ட பலவற்றிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு தனித்தே செயல்பட்டு வந்துள்ளது என்பது மட்டுமல்ல, சமூக நீதி-சமூக நலத் திட்டங்களில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும் தமிழகம் திகழ்கிறது.
அனிதாவின் உயிர்ப் பறித்த நீட் தேர்வு தமிழகத்தின் சமூக நீதிக்கு அடிக்கப்படும் சாவுமணி. நாளை, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இதே சாவுமணி வெவ்வேறு வகையில் ஒலிக்கும் ஆபத்து உள்ளது.
தி.பி.2048 ஆவணி 18
‘நீட்’டமான வரலாற்றைப் படிக்க விரும்புவோருக்கு http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=197895
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக