திங்கள், 20 ஜூலை, 2015

பார்ஸிகள் குழந்தை பெற நிதி உதவி செய்யும் மத்திய அரசு


அதிகரித்துவரும் தனது சனத்தொகையை கட்டுப்படுத்த பெருந்தொகைப் பணத்தை செலவு செய்துவரும் இந்திய அரசாங்கம், தனது நாட்டில் வாழுகின்ற பார்ஸிகள் என்னும் இனக்குழுவைப் பொறுத்தவரை, அவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு உதவும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துகிறது. பார்ஸிகள் இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அதிகரிக்கும் சனத்தொகை. ஆனால், எண்ணிக்கையில் குறைந்து வருகின்ற பார்ஸிகள் குழந்தைகளை பெறுவதை ஊக்குவிக்க இந்திய அரசு, ஒரு கோடியே ஐம்பது லட்சம் டாலர்களை செலவு செய்கிறது. குழந்தைகள் அற்ற பார்ஸி தம்பதிகள் சோதனைக் குளாய் மூலமாக குழந்தையை பெற்றுக்கொள்ள இந்திய அரசு அவர்களுக்கு பண உதவியை செய்கிறது.

200 புதிய குழந்தைகள்
அடுத்து வரும் 5 வருடங்களில் புதிய 200 குழந்தைகளை பார்ஸிகள் சோதனைக்குளாய் மூலம் பெறச்செய்யும் இலக்கு ஒன்றை இந்திய அரசு அமல்படுத்துகிறது.
இந்தியாவில் பெரும்பாலும் மும்பாயில் அறுபதினாயிரம் பார்ஸிகள் வாழுகிறார்கள். இது 1940இல் இருந்த அவர்களது சனத்தொகையில் அரைவாசியாகும்.
தாமதமான திருமணம், திருமணமே செய்துகொள்ளாமை, பார்ஸிகள் அல்லாதோருடனான கலப்புத் திருமணங்கள் ஆகியவையே இவர்களது சனத்தொகை குறைவதற்கான காரணமாக கூறப்படுகின்றது.




இந்தியாவுக்கு கல்வி, வணிகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் கணிசமான பங்களிப்பை செய்த அந்த சமூகம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களது சனத்தொகையை அதிகரிக்க தாம் நிதி உதவி செய்வதாக இந்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சரான நஜ்மா ஹெப்துல்லா கூறுகின்றார்.
மும்பை நகரில் வணிகர்களாக, கப்பல் கட்டுபவர்களாக, நிர்வாகிகளாக, சிறந்த அரசியல் அறிஞர்களாக பெருமையுடன் திகழ்ந்த, அந்த பார்ஸி சமூகத்தை சேர்ந்தவர்களே டாட்டா, கோத்ரேஜ் போன்ற பெருவணிகர்கள்.
இரானில் இருந்து வந்தவர்கள்
8 ஆம் நூற்றாண்டில் இரானில் மத ரீதியான தாக்குதல்களுக்கு பயந்து இந்தியாவின் மேற்கு கரைக்கு வந்து சேர்ந்த ஷோரஸ்டிரியன் குழுவினரே இந்த பார்ஸிகள்.
குஜராத்தில் தங்கிய அவர்கள், 17ஆம் நூற்றாண்டியில் மும்பாயில் குடியேறி அங்கு தமக்கான ‘’அக்னி பகவான்’’ கோயிலையும் கட்டிக்கொண்டனர். பிரிட்டிஷாருடன் கூட்டாளிகளாகவும் இருந்தனர். பாரசீகர்கள் என்பதே பார்ஸிகள் என்பதன் அர்த்தமாகும்.
பார்ஸிக்கள் மேலைத்தேய கலாச்சாரத்தை வரித்துக்கொண்டது, அவர்களின் எண்ணிக்கை குறைய ஒரு காரணமாக கூறப்படுகின்றது. நிறையச் சொத்து சேர்ப்பதற்காக திருமணத்தை தள்ளிப்போட்டதுடன், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க பணத்தை சேர்ப்பதற்காக குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை ஏனைய சமூகங்களுக்கு முன்னதாகவே உள்வாங்கி, குழந்தைப் பேற்றையும் அவர்கள் தள்ளிப்போட்டு வந்தனர்.
இதை விட 30 வீதமான பார்ஸிகள் திருமணமே செய்வதில்லை.
பார்ஸிகளில் ஆண்கள் வேற்று இனத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால், அவர்களது குழந்தைகள் பார்ஸிகளாக கருதப்படுவர். ஆனால், பார்ஸி இனப்பெண்கள் வேற்று இன ஆணை திருமணம் செய்தால் அவர்களது குழந்தைகள் பார்ஸிகளாக கருதப்படமாட்டார்கள். அந்த பெண்ணுக்கு தீ கோயிலுக்கு வருவதற்கான வாய்ப்பும் மறுக்கப்படும். இதுவும் அவர்களது சமூகத்தின் எண்ணிக்கைத் தேய்வுக்கு காரணமாகிவிட்டது.  bbc.com/tamil/

கருத்துகள் இல்லை: