வியாழன், 25 ஜூன், 2015

கிராமங்களில் மூன்றில் ஒரு பங்கு வீடுகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் ....தேசிய சமூக பொருளாதார சாதி சர்வே!


30poverty5முதன்முறையாக எடுக்கப்பட்ட தேசிய சமூக பொருளாதார சாதி சர்வேயின் படி இந்தியவின் கிராமங்களில் மூன்றில் ஒரு பங்கு வீடுகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாக தெரிய வந்திருக்கிறது.
1931-ம் ஆண்டிற்கு பிறகு சமூகவியல் அடிப்படையில் இத்தலைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த சர்வே பணி நாடெங்கும் உள்ள கிராமங்களின் 24.39 கோடி வீடுகளின் நிலையை நமக்கு அறியத் தருகிறது.
இந்த சர்வே மொத்தம் 17.9 கோடி ஊரக வீடுகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 31.26% வறுமையாக வாழ்கிறார்கள். 13.25% வீடுகள் ஓரறை கொண்ட குடிசை வீடுகளாக இருக்கின்றன. 3.64% வீடுகளில் 16 – 59 வயதுக்குட்பட்ட வயதில் குடும்ப உறுப்பினர்கள் இல்லை.
3.85 வீடுகளில் பெண்கள் தலைமை தாங்கினாலும் அங்கேயும் மேற்கண்ட வயதில் குடும்ப உறுப்பினர்கள் இல்லை. 21.53% வீடுகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு சொந்தமானவை. 23.52% வீடுகளில் கல்வியறிவு கொண்ட குடும்ப உறுப்பினர்கள் இல்லை. 29.97% வீடுகளில் நிலமற்றவர்களே வாழ்கின்றனர்.
அவர்கள் அன்றாட தினக்கூலி வேலை செய்பவர்களாக இருக்கின்றனர்.

facebook 1குடிசை வீடுகளைத் தாண்டி இச்சர்வேயின் படி ரூ.5000-த்திற்கும் குறைவாக சம்பாதிக்கும் வீடுகளின் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வருகின்றன. இதில் பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம்தான், 24% ஏழைகளைக் கொண்டு முதலிலும், அதே பா.ஜ.க ஆளும் சட்டீஸ்கர் மாநிலம் 21%த்துடன் இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் 19%த்துடன் பீகாரும் வருகின்றன.
இந்த சர்வேயின் தகவல்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரங்கராஜன் கமிட்டி தெரிவித்த தகவல்களோடு பொருந்திப் போவதாக ஊடகங்கள் கூறுகின்றன. அந்த கமிட்டியின்படி ஊரக பகுதியில் 30.95%மும், நகரப் பகுதிகளில் 26.4%மும் வறுமை நிலவுவதாக தெரிவித்தார்கள். அதிலும் ஒரு நாளைக்கு ஒருவர் 32 ரூபாய்க்கு கீழே செலழித்தால் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாக நிர்ணயித்தார்கள்.
இதையே ஊரகப் பகுதிகளில் 25.7% வீடுகளும், நகரப் பகுதிகளில் 13.7% பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாக டெண்டுல்கர் கமிட்டி தெரிவித்து மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது. இக்கமிட்டியின் படி கிராமங்களில் 27 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்போர் ஏழைகள் என்று நிர்ணயிக்கப்பட்டது கடுமையான விமரிசனங்களை எதிர் கொண்டது.
குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து சம்பாதித்தாலும் இச்சர்வேயின் படி மாதம் ரூ.5000த்தை அடைவது கடினம். மேலும் ஐந்து முதல் பத்து பேர் கொண்ட குடும்பங்களில் இந்த வருமானம் 5001 ஆக இருந்தாலும் அங்கே வறுமை இல்லை என்று இச்சர்வே முடிவு செய்வதும் தவறுதான்.
நில உச்சவரம்பு சட்டத்தை விலக்கி நில அபகரிப்பு சட்டம் கொண்டு வந்த மோடி அரசின் விளைவால் இனி நிலமற்ற கூலி விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அடுக்கு மாடிகளும், மெட்ரோ திட்டங்களையும் மட்டுமே வளர்ச்சி என சித்தரிக்கும் இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு ஊரக வீடுகள் குடிசை வீடுகளே என்றால் எது வளர்ச்சி என்ற கேள்வி வருகிறது.
Global-povertyகுடும்ப உறுப்பினர்களின் கூட்டு வருமானமோ இல்லை ஒரு நபரின் ரூ.32க்கும் கீழே உள்ள வருமானத்தையோ வைத்து மட்டும் வறுமை உருவாவதில்லை. கல்வி, சுகாதாரம், இதர வசதிகளை பெறுவதற்கு ஒரு மனிதன் குறைந்த பட்சமாக செலவழிக்கும் தொகையும் சேர்ந்தே இவ்வறுமைக் கோட்டை தீர்மானிக்கிறது.
எப்படிப் பார்த்தாலும் இக்கணிப்பை விடவும் இந்தியாவின் ஏழைகள் அதிகமிருப்பர். இவர்களை ஏதாவது சில குறியீடுகளை வைத்து ஏழைகள் இல்லை என்று காட்டுவதையே முந்தைய காங்கிரசு மற்றும் இன்றைய பா.ஜ.க அரசுகள் செய்து வருகின்றன. எனினும் உண்மை அவர்களையே ஓரளவுக்கு மேல் மறைக்க முடியாமல் வெளிப்பட வைத்திருக்கிறது.
இந்தி மாநிலங்களில் இந்த ஏழ்மை அதிகம் என்றால் அந்த ஏழ்மையை ஒடுக்கும் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பே இந்து மதவெறியர்களின் சமூக அடிப்படையாக உள்ளன. அதனால் வறுமைக்கான முதல் இரண்டு இடங்கள் மூன்று முறைக்கும் மேல் ஆட்சி புரியம் பா.ஜ.க மாநிலங்கள் வசம் இருக்கின்றன.
அடுத்து ஆண்ட பரம்பரை பெருமை பேசும் ஆதிக்க சாதிகள் அதாவது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களில் கணிசமானோர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதை இக்கருத்துக் கணிப்பு தெரவிக்கின்றது. அவ்வகையில் சாதிப் பெருமை பேசுவதற்கு மட்டமல்ல நினைப்பதற்கும் கூட தகுதியற்றது என்பதை இந்த ஏழ்மை நிலைமை தெரிவிக்கின்றது.
எது வறுமைக் கோடு, யார் ஏழை என்பதைக் காட்டிலும் ஏழ்மைக்கு காரணமான சமூகத்தை தண்டிப்பதும் மாற்றுவதும் முதன்மையானது. அந்த பணிக்கு இருக்கும் தேவையை இக்கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. vinavu.com

கருத்துகள் இல்லை: