துக்ளக் சோ தலித் மாணவர்களை தரக்குறைவாக நடத்தி, மனரீதியாக சிதைத்து தற்கொலைக்கு தள்ளிய இவர்களால் பிற்படுத்தோர் இடஒதுக்கீட்டின் தாக்குதலை சமாளிக்கமுடியவில்லை
மீபகாலமாக மெக்காலே கல்விமுறை ஏற்படுத்தியுள்ள சீரழிவுக்கு மாற்றாக குருகுலக்கல்வியை முன்வைத்து பார்ப்பனக்கும்பல் செய்து வரும் பிரச்சாரம் அதிகரித்து வருகிறது. அதுபோலவே காலனிய ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரை இந்திய அரசின் அனைத்து உயர் பதவிகளிலும் இருந்து கொண்டு திட்டமிட்டே அரசுப் பள்ளிக்கூடங்களையும் உயர் கல்வி நிறுவனங்களையும் சீரழித்த இந்த பார்ப்பன ஆளும் வர்க்கம், இட ஒதுக்கீட்டில் வந்த தரமற்ற மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் தான் இந்தியக் கல்வித் துறை அழுகி நாறுவதாகவும், எனவே கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து விட்டால், திறமையான (பார்ப்பன) மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு இந்த சீரழிவை சரி செய்து விடலாம் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.
‘அரசு பள்ளி என்றால் சீரழிவு’ – துக்ளக் சோ
இந்திய அரசாங்கம் கல்வித் துறையைத் பன்னாட்டு-தரகுக் கும்பலிடம் ஒப்படைக்கும் பொருட்டு கொண்டு வரும் கட்டுமான மற்றும் கொள்கைச் சீர்த்திருத்தங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில் இவர்களின், இந்த இரண்டு பிரச்சாரங்களும் சூடு பிடித்துள்ளது கவனிக்கத்தக்கது. இதற்கு, கல்வி தனியார் மயமாக்கலைத் துரிதப்படுத்துவதிலும் அதை நியாயப்படுத்தி அதையே ஒரு ஒழுக்கமாக்கி மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதிலும், பார்ப்பனக் கும்பலான – அறிவுஜீவிகளும், பத்திரிகையாளர்களும், சாமியார்களும், கார்ப்பொரேட் சி ஈ ஓ க்களும், எழுத்தாளர்களும், அறிஞர்களும், கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் – என்ற எல்லாத் தரப்பும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை இங்கு தொகுக்கின்றோம்.
பார்ப்பன ஊடகங்கள்
பார்ப்பன ஊடகங்களான தினமணி, தினமலர், துக்ளக் முதலானவை தொடர்ச்சியாக அரசு கல்வி நிறுவனங்களுக்கு எதிரான தலையங்கங்களையும், கட்டுரைகளையும் செய்திகளையும் திட்டமிட்டே கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வருகின்றன.
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சேதுராமன், கல்வி தனியார் மயமாக்கலையும், அதில் இந்தியக் கல்விமுதலாளிகள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு வைத்து அடையப் போகும் ஆதாயத்தைப் பற்றியும், இந்திய அறிவுத் துறையையே தனது பிடிக்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை நியாயப்படுத்தியும் துக்ளக்கில் தொடர் எழுதி வருகிறார். அதுபோல, அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்குவோம் என்ற முழக்கத்துடன் பள்ளிக் கல்வி அலுவலகத்தை புமாஇமு முற்றுகையிட்டதை நக்கலடிக்கும் துக்ளக், இப்படி போராட்டம் நடத்தி ஒழுங்காகக் கல்வி வழங்கும் ஒரு சில நல்ல தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசிடம் ஒப்படைப்பதன் மூலம் கல்வியை சீரழிப்பதே இவர்களின் நோக்கம் என்றும் எழுதுகிறது.
தினமணியின் தலையங்கங்களை தொடர்ச்சியாக கவனித்தால், திட்டமிட்டே அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர்களை தரக்குறைவாக சித்தரிப்பது தெரியும். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வு முடிவுகள் குறித்து தலையங்கம் எழுதிய தினமணி (13.08.2012), ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் தரம் பற்றி விமர்சித்ததோடு, இந்த தேர்வில் வெற்றி பெறாததாலே ஆசிரியர் பயிற்சி முடித்த அனைத்து பட்டதாரிகளும் தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில், அதுவரை அரசு அல்லது அரசு நிதியுதவி பெற்று இயங்கிய ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளால் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சிப் படிப்பை, தனியார் லெட்டர் பேடு கல்லூரிகள் கூட ஏதாவது மாட்டுக் கொட்டகையில் வைத்தோ, தொலை தூரத்திலோ, கண்ணில் படாமலே கூடவோ நடத்தலாம் என்று ஒரே ஒரு அரசு ஆணை மூலம் பிஎட், எம்எட், டிடிஇ போன்ற படிப்புகளை சீரழிவின் படுபாதாளத்துக்குத் தள்ளியதை தினமணி வைத்தியநாதன் இன்று சௌகரியமாக மறைத்து விட்டார்.
ஆனால் தினமணி வைத்தியநாதனுக்கு பொது அறிவுகூடவா மட்டம்? தமிழ் நாட்டில் எந்த தனியார் பள்ளிக்கூடத்திலோ அல்லது சுயநிதிக் கல்லூரியிலோ முறையான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லை என்பதோடு, குறைந்தபட்ச தகுதிகூட இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு அடிமாட்டு விலைக்கே இவர்களின் உழைப்பு பிழியப்படுகிறது; மாறாக எந்த அரசு கல்வி நிலையங்களும் தகுதியில்லாத ஆசிரியர்களை இன்றுவரை நியமித்ததில்லை. ஆனால் இதைப்பற்றி இவர்களுக்கு எப்பவுமே செலக்டீவ் அம்னீஷியா; ஏனென்றால், தினமலர், டிவிஸ் ஐயங்கார், சோ ராமசாமி போன்றோர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஆசிரியராக, ஜெயலலிதா நடத்தும் இந்த தகுதித்தேர்வை எழுதி ஜெயிக்க வேண்டுமென்றோ அல்லது குறைந்த பட்சம் அரசுப் பள்ளிக்கூடங்கள் போல ஆசிரியப் பயிற்சி முடித்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டுமென்றோ எந்த அரசும் சட்டம் கொண்டு வராதது மட்டுமின்றி இதை சட்டை செய்வதே இல்லை என்பது தான்.
பார்ப்பன முதலாளிகளும், பேராசிரியர்களும
2011 அக்டோபரில் அமெரிக்காவில் நடைபெற்ற பான் ஐஐடி (PAN IIT Summit) என்ற இந்திய மக்களின் வரிப்பணதை உறிஞ்சிக்கொழுத்து கல்விகற்று இன்று மேற்குலகின் கார்ப்பொரேட்டுகளில் முக்கிய பதவிவகிக்கும் ஐஐடி முன்னாள் மாணவர்களின் உச்சிமாநாட்டில் பேசிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி தனது பார்ப்பனீய வெறியை  இவ்வாறு வெளிப்படுத்துகிறார் :
பான் ஐஐடி
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலிருந்து தேச சேவை செய்யும் பான் ஐஐடி சங்கம்.
“ஐஐடி அதன் உலக தரத்தை இழந்துள்ளது. அதற்கு காரணம் ஐஐடியில் ஒவ்வொரு ஆண்டும் நுழையும் மாணவர்களில் வெறும் இருபது சதவீதம் மட்டுமே பிறவி புத்திசாலிகள், மற்றவர்களெல்லாம் பயிற்சி வகுப்புகள் மூலம் ஐஐடிக்குள் நுழைபவர்களாக இருப்பது தான். இப்படிப்பட்ட ஆங்கிலம் நுனி நாக்கில் பேச வராத, நிர்வாகத் திறமையற்ற ஒரு கூட்டமான ஐஐடி ப்ராடக்ட்டுகளால் கார்ப்பரேட்டுகளின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? இதற்கெல்லாம் காரணம் இந்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் (இடஒதுக்கீடு) தான்.
எனவே இந்திய அரசை ஐஐடி நிர்வாகத்தில் தலையிடுவதிலிருந்து தடுக்கவேண்டும். அதற்கு ஐஐடி நிர்வாகக் குழுவில் (Board of Governance) இந்திய அரசு முன்மொழியும் பிரதிநிதிகளுக்கு பதிலாக இனிமேல் ஐஐடி முன்னாள் மாணவர்களான கார்ப்பொரேட் ’சி.ஈ.ஓ’ க்களே இருக்க வேண்டும். இதன் மூலம் கடந்த சில வருடங்களில் ஐஐடி இழந்த அதன் உலக தரத்தை திரும்பக் கைப்பற்ற உலகம் முழுவதுமுள்ள முன்னாள் ஐஐடி மாணவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்”.
உயர்கல்வியில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு பல பத்தாண்டுகளான நிலையில், ஐஐடி எயிம்ஸ் மற்றும் ஐஐம்களின் பேராசிரியர்களாகப் பணிபுரியும் சாதியாதிக்க வெறிபிடித்த பரசுராமன்களாலும், துரோணர்களாலும் கொல்லப்படும் அனில் மீனா, பால் முகுந்த் பாரதி, முரளி பிரசாத் போன்ற தலித் மாணவர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு கூட ஹார்வர்டிலும் ஆக்ஸ்போர்டிலும் உள்ள கறுப்பின மாணவர்கள் நிறவெறியால் கொல்லப்படுவதில்லை. இப்படி கேள்விக்கிடமற்ற வகையில் பார்ப்பன கும்பல் உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் பேரரசை நிறுவியுள்ளனர்.
மத்திய அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஐஐடிக்களில் அமுல்படுத்தத்தொடங்கி ஓரிரு வருடங்களேயாகியுள்ள நிலையில், ஐம்பதாண்டுகளாக தக்க வைத்த பார்ப்பன அறிவுஜீவி மற்றும் அதிகாரக் கோட்டையான ஐஐடிக்குள் ஒரு குறிப்பிட்ட அளவு மற்ற சாதிஇந்துக்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் நுழைந்துள்ளனர்; அதுகூட இளநிலை பாடப்பிரிவுகளில் ஐஐடி-ஜேஇஇ மூலம் வருபவர்கள் மட்டுமே; மற்றபடி முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளுக்கோ அல்லது பேராசிரியர் நியமனங்களுக்கோ அரசின் இட ஒதுக்கீடு இங்கு மயிரளவுக்குக் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
நாராயண மூர்த்தி
இட ஒதுக்கீட்டை எதிர்த்த நச்சு பிரச்சாரம் – நாராயணமூர்த்தி.
இதுவரை தலித் மாணவர்களை தரக்குறைவாக நடத்தி, மனரீதியாக சிதைத்து தற்கொலைக்கு தள்ளிய இவர்களால் பிற்படுத்தோர் இடஒதுக்கீட்டின் தாக்குதலை சமாளிக்கமுடியவில்லை. இது பார்ப்பனக் கோட்டையை ஆட்டங்காண வைத்துள்ளது. அதனால் தான் ஐஐடிக்குள் கிராமப்புற தலித் – பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களோ, நடுத்தர வர்க்க தலித் மாணவர்களோ இனி எந்த ஜன்மத்திலும் நுழைய முடியாத அளவுக்கு கடந்த ஆண்டிலிருந்து ஜேஇஇ தேர்வின் மாதிரி கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பார்ப்பனக் கும்பல் சத்தமே இல்லாமல் பொதுமக்களின் சொத்தான ஐஐடியை தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்த்து தங்கள் கோட்டையை தக்கவைப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது.
இதற்காகவே உருவாக்கப்பட்ட கடோட்கர் கமிட்டி ஐஐடியை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான முன்வரைவை உருவாக்கியிருப்பதோடு, அதற்கு தோதாக சட்டத் திருத்தங்களையும் கொண்டு வரும் பொருட்டு இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மசோதா (Institute of Technology Bill 1961) 1961 – ல் திருத்தத்தைக் கொண்டு வந்து பாரளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா மூலம் ஐஐடி பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்புகளிடமும், தரகு முதலாளிகளின் கூட்டமைப்புகளிடமும் ஒப்படைக்கப்படுவதோடு, இவர்களால் நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு ஐஐடியும் அந்தந்த பிராந்தியத்தில் (Zonal level) உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்கியுள்ளது.
மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட போதும், ஐஐடி-ஜேஇஇ-க்கு பதிலாக பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும் தெருவில் இறங்கி போராடிய ஐஐடி பேராசிரியப் பெருமக்களோ, ஐஐடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படும் போது அதை தாரை தப்பட்டையுடன் வரவேற்கின்றனர்.
பார்ப்பனிய ‘அறத்தை’ ஆதரிக்கும் எழுத்தாளன்
சமீபகாலமாக அறம் வரிசை கதைகளுக்கு பெயர்போன எழுத்தாளன் ஜெயமோகன், அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் தற்கொலை செய்ததையொட்டி அவரது அறச்சீற்றத்தை வார்த்தைகளாகக் கொட்டி கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்த தற்கொலையை வைத்து தொடங்கிய அவரது சீற்றம் எங்கே போகிறதென்று பாருங்கள்:
“இந்தப் புல்லர்களை (அரசுப்பள்ளி ஆசிரியர்கள்) நம்பித்தான் இங்கே ’சமச்சீர் கல்வி’ என்றெல்லாம் பெரிய பேச்சுக்கள் பேசப்படுகின்றன. இன்று நம் கல்விமுறையின் மிகப் பெரிய பிரச்சினையே இந்த மாஃபியாதான். இவர்களை நெறிப்படுத்த ஓர் அமைப்பு இங்கே இல்லை.  அதைச் செய்ய மனம்  இல்லை. கண் துடைப்புக்காக சமச்சீர் கல்வி என்கிறார்கள். இன்று சமச்சீர் கல்விக்காகப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஆசிரியப் புல்லுருவிகள்தான்.
ஜெயமோகன்
தனியார் கல்விக்காக ஜெயமோகனின் அறச்சீற்றம்.
தனியார் பள்ளிகளில் இதே சம்பளத்தில் பாதியைப்பெற்றுக்கொண்டு இரட்டிப்பு நேரம் கற்பிக்கிறார்கள். அங்கே சென்று புகார் செய்ய ஓர் இடம் இருக்கிறது. பிடிக்கா விட்டால் மாற்றிக் கொள்ள முடிகிறது. விளைவைக் காட்டிப் போட்டியில் நின்றாக வேண்டிய வணிகக் கட்டாயமாவது அவர்களுக்கு உள்ளது. சமச்சீர் கல்வி என்ற பேரில் அதற்கும் வேட்டு வைக்க நினைக்கிறார்கள்.”
பல தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் ஆடுமாடுகளை விடக் கேவலமாக நடத்தப்பட்டு பல மனித உரிமை மீறல்கள் நடக்கும் போதெல்லாம் அது பற்றி வாய் திறக்காத இவருக்கு அரசுபள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட்ட அறச்சீற்றத்தின் மூலத்தைக் கண்டுபிடிக்க இந்த கூற்றிற்கு முந்தைய பாராவைப் படித்தால் புரிந்துகொள்ளலாம் :
“சற்றுமுன் காலை நடை சென்றபோது ஓர் ஆசிரிய அற்பனிடம் பேசிவிட்டு வந்தேன். ‘ஏலே, துணிக்கும் சாராயத்துக்கும் காசு குடுக்குதேல்ல? காசு குடுத்துப் படிலே..ஏன் கெவர்மென்டு பள்ளிக்கு வாறே? ’ என  இறந்த மாணவனை வசை பாடினார். ‘வாத்தியரையா மாட்டி விடுதே? அரெஸ்ட் பண்ணினானுகளாம். அரெஸ்ட் பண்ணி என்ன செய்வே? ஒரு மண்ணும் செய்யமாட்டே. நாட்டிலே இருக்க பெரிய யூனியன் எங்களுக்காக்கும்.  ஜெயலலிதாவுக்கு அதுக்க ருசி தெரியும்’ என்றான், அவர்  ஒரு செந்தோழர்.”
கன்னியாகுமரியில் நாயர்-நம்பூதிரி சாதி ஆதிக்கத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த நாடார்களில் பலரும் மிஷனரிகள் மூலம் கல்வி கற்று சாதிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களானார்கள். ஒருகாலத்தில், சாதி இந்துக்களால் கல்வி மறுக்கப்பட்ட இவர்கள் இன்று பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பது ஜெயமோகனால் சகிக்க முடியவில்லை. இதற்கு அவர் வைக்கும் தீர்வு ”கல்வி தனியார்மயம்”.
பார்ப்பன கார்பொரேட் சாமியார் வாழும்கலை ரவிசங்கர் சில மாதங்களுக்கு முன் மத்திய அமைச்சர் கபில் சிபிலே எதிர்ப்பு தெரிவிக்குமளவிற்கு கூறிய ’அறிவார்ந்த’ பேச்சு:
“இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கங்கள் இதில் சம்பந்தப்படக் கூடாது என்றும் நினைக்கிறேன். காரணம் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் தான் முதன்மையாக நக்சல்களாக உருவாகிறார்கள் என்ற முடிவிற்கு நான் வந்துள்ளேன்” என்றது தான். இதற்கு அவர் சொல்லும் காரணம் வாழும்கலை (art of living) 185 ப்ரி-ஸ்கூல் (pre-school) களை நக்சல் இயக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்துவதாகவும், அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு எப்போதும் இப்படிப்பட்ட தீவரவாதம் போதிக்கப்படுவதில்லை என்றும் கூறுகிறார்.
ஆன்மீகம் என்ற பெயரில், மத்திய இந்தியாவில் மட்டுமே 185 ஆரம்பப் பள்ளிகளை நடத்தும் இந்த கார்ப்பரேட் சாமியாரின் நோக்கம் இலாபம் மட்டும் இல்லை என்பது திண்ணம். ஆனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிரான மறுகாலனியாக்கத்திற்கும் அதற்கு சேவை செய்யும் பார்ப்பனியத்திற்கும் எதிராக அவர்கள் திரண்டெழுந்து நக்சல்பாரிகளாய் அணிதிரண்டால், இரண்டாயிரம் ஆண்டாய் கட்டிக் காத்த சாம்ராச்சியத்திலிருந்து தூக்கியெறியப் படுவோம் என்ற பீதி தான் இன்று ‘கல்வியை தனியாரிடம் ஒப்படை’ என்று அரசை நிர்ப்பந்திக்க இந்த கார்ப்பொரேட் சாமியாரை தூண்டியுள்ளது.
பார்ப்பனக் கல்வியாளர்கள்
ஒய் ஜி பார்த்தசாரதி
பத்ம சேஷாத்ரியின் பார்ப்பன கல்வியாளர் திருமதி ஒய் ஜி பார்த்தசாரதி.
சமச்சீர் கல்வி மற்றும் தனியார் பள்ளிக் கூடங்களில் ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு முதலியவை அமுல்படுத்தப்பட்ட பின் கல்வி முதலாளிகளாகவும், கல்வியாளர்களாகவும் திகழும் பார்ப்பனர்களின் போர்க் குணமிக்க எதிர்வினையின் அரசியல் சாதியாதிக்கம் அன்றி வேறேன்னவாக இருக்க முடியும். சமச்சீர் கல்வித்திட்டம் அமுல்படுத்தப்பட்டபோது அதை எப்படியாவது தடுக்க பத்மாசேஷாத்ரி மற்றும் டிவிஏ பள்ளி முதலாளிகள் முயற்சி செய்தது நாம் எல்லோரும் அறிந்ததே. அதுபோல 25% இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டதையொட்டி ஏழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசிரியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளியின் தலைமையாசிரியை சுபலா அனந்தனாராயணன் கூறியுள்ளதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்குமான கல்வி மசோதாவை எதிர்த்துப் போராடும் படியும் சுற்றறிக்கை விட்டுள்ளார். 25% இடஒதுக்கீட்டில் வந்த மாணவர்களின் முடியை வெட்டி அவமானப்படுத்தி தீண்டாமையைக் கடைபிடித்த பங்களூர் ஆக்ஸ்போர்ட் பள்ளியின் செயலை ஒத்ததே இது.
பார்ப்பன ஆட்சியாளர்கள்
பார்ப்பன பாசிச ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஒரு சில நாட்களிலே மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்காக சமச்சீர் பாடத்திட்டத்தை இரத்து செய்தார். பொதுமக்களின் பணத்தையெடுத்து இந்த கல்வி முதலாளிகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பல கோடிகளை வாரியிறைத்து வாதாடியும் இவ்வழக்கில் தோல்வியைத் தழுவியது ஜெயா அரசு. ஆனால் அத்துடன் பாடம் கற்றுக் கொண்டால் அப்புறம் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவாக இருக்க முடியுமா?
இம்முறை மக்கள் பணத்தில் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரி முதலாளிகளுக்காக களம் இறங்கியுள்ளது. கடந்தாண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தை அணுகி எந்த வித கட்டுமான வசதிகளோ தகுதியான ஆசிரியர்களோ இல்லாத இந்த பொறியியல் கல்லூரிகளில் சேர எந்த மாணவர்களும் விரும்பாத நிலையில், காலியாகக் கிடக்கும் இடங்களை நிரப்பி கல்வி முதலாளிகளுக்கு சேவை செய்யும் பொருட்டு, ஏஐசிடிஇ யின் விதிப்படி தலித்துகளுக்கு 40% ஆக உள்ள குறைந்த பட்ச மதிப்பெண்ணை 35% ஆகக் குறைக்க வேண்டி உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தது.
ஜெயலலிதா
தனியார் கல்வி முதலாளிகளுக்காக போராடும் பார்ப்பன-பாசிச ஜெயலலிதா
அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்: ”தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாகக் கிடப்பதால் அக்கல்லூரிகளில் ஏழை தலித் மாணவர்களுக்கு கல்வி வழங்கி சமூக நீதியை நிலைநாட்டும் பொருட்டு ஏஐசிடிஇ விதிமுறைகளை தளர்த்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கில் நீதிபதி சந்துருவின் தீர்ப்பு தமிழக அரசின் மக்கள் விரோதச் செயலை தோலுரித்தது.
“தமிழக அரசு இந்த மாதிரியான ஒரு பொதுநல வழக்கை கூடுதல் தலைமைச் செயலர் (உயர்கல்வித்துறை) வழியாக தாக்கல் செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது…. ஏனென்றால் தமிழகத்தில் பிறந்த அனைவரும் இஞ்சினியர்கள் ஆக வேண்டுமென்ற கட்டாயமொன்றுமில்லை. தமிழக அரசு யாருடைய நலனுக்காக பிரச்சாரம் செய்கிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களை போட்டி அதிகமாக உள்ள (கட் ஆப் 95-97%) அண்ணா பல்கலைக் கழகத்திலோ அல்லது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளிலோ சேர்க்க வேண்டுமென்று அரசு விரும்பவில்லை. மாறாக தரமில்லாததால் இடங்கள் நிரப்பப்படாத சுயநிதிக்கல்லூரிகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கவே அரசு இப்போது முயல்கிறது. இதற்காக எந்த தனியார் கல்லூரிகளும் நீதிமன்றத்தை அணுகவில்லை… மாறாக இந்த பொதுநல வழக்கு மூலம் அவர்களை ஆதரித்து தமிழக அரசு தான் நீதிமன்றத்தை அணுகி உள்ளது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் நலனுக்காக மட்டுமே. அரசு செலவிலே தலித் மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது. அப்படி இருக்கையில், இவர்களை எந்த கட்டுமான வசதியுமற்ற தனியார் சுயநிதிக் கல்லூரிகளை நோக்கி விரட்டும் இந்த நடவடிக்கையின் நோக்கம் அக்கல்லூரிகள் அரசு செலவில் காலி இடங்களை நிரப்புவதேயாகும்… காலியிடங்களை நிரப்புவதற்காகவே ஏஐசிடிஇ விதிமுறைகளை தளர்த்துமாறு நீதிமன்றங்களை அணுக இந்த அரசிற்கு சட்ட அதிகாரமோ, அரசியலமைப்பு அதிகாரமோ இல்லை” என்று 23.07.2012 அன்றுகூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
நீதிமன்றத்தால் இவ்வளவு தூரம் மூக்குடைக்கப்பட்டும், வழக்கம் போல எந்த பாடத்தையும் ஜெ அரசாங்கம் கற்கவில்லை. தீர்ப்பு வந்து பதினைந்தே நாட்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் 06.08.2012 அன்று சண்டே எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு இந்த வழக்கில் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப் போவதாகக் அறிவித்தார். தனியார் கல்விக் கொள்ளையர்களின் நலனுக்காக பொதுமக்களின் பணத்தையே வாரி இறைத்ததன் மூலம், தனியார்மயத்தை பாதுகாக்க பார்ப்பன-பாசிச ஜெயலலிதா அரசாங்கம் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழிறங்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
பார்ப்பன லாபி
ஒட்டு மொத்தக் கல்வியையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு கல்வி உரிமைச்சட்டம் எனும் பல்லில்லாத காகிதச் சட்டத்தைக் கொண்டு வந்த அரசு, அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அம்மசோதாவில் கடந்த வருடம் ஒரு சட்டத் திருத்ததையும் கொண்டு வந்துள்ளது. அரசியல் சாசனத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின் படி மத நிறுவனங்களால் நடத்தப்படும் மதரசாக்களுக்கும் வேத பாடசாலைகளுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்றது அந்த சட்டத் திருத்தம். அரசியல் சாசனத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவானது, மொழி, கலாச்சார மற்றும் மத சிறுபான்மையினருக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சிறப்பு சலுகைகள் அந்தந்த மாநிலங்களில் அவர்கள் 50% த்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே பொருந்தும் என்று டி.எம்.ஏ. பை ஃபவுண்டேஷன் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈஷா சம்ஸ்க்ருதி பள்ளி
சமஸ்கிருதம் சொல்லித் தருவதால் ஈஷா சம்ஸ்க்ருதி சிறுபான்மையினரின் பள்ளி.
ஆனால் ’யார் இந்து?’ என்பதை வரையறுத்தது போல, ’யார் சிறுபான்மையினர்?’ என்பதற்கும் தளர்வான வரையறைகளே அரசியல் சாசனம் கொடுத்துள்ளது. இப்படியான வரையறை காரணமாக சிறுபான்மை நிறுவனங்கள் என இதுவரை தங்களை பதிவு செய்துக் கொண்ட பல நிறுவனங்களும், சிறுபான்மையிருக்கான சிறப்பு சலுகைகளை நீதிமன்ற தலையீட்டின் மூலமே பெற்றுவந்துள்ளன. அரசியல் சாசனத்தின் இந்த ஓட்டையை பார்ப்பனர்கள் தங்களையும் சிறுபான்மையினராக முன்னிறுத்த பல முறை உபயோகித்துள்ளனர்.
சிதம்பரம் தீட்சிதர்கள், தங்கள் வழிபாட்டு முறைகள் வேறுபட்டதாக இருப்பதால் தாங்கள் இந்துக்களே அல்ல என்றும், எனவே மத சிறுபான்மையினருக்கான சிறப்பு சலுகைகளின் பாகமாக தங்கள் வழிபாட்டு தலமான நடராசர் கோயிலை பராமரிக்கும் பொறுப்பு தமக்கு மட்டுமே உள்ளதென்றும் அதில் அரசு எந்த காரணத்தைக் கொண்டும் தலையிடக் கூடாது என்றும் வாதிட்டனர். அப்படியிருக்கையில் ’இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?’ என்ற தலைப்பில் வந்த இந்து முன்னணி வெளியீட்டில், கல்வி நிறுவனங்கள் தொடங்குவதில் மதம் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கொடுக்கப்படும் சலுகைகளை ’எங்களுக்கும் தாருங்கள்’ என்று கேட்கின்ற நிலைக்கு இந்துக்கள் தள்ளி விடப்பட்டுள்ளதாக புலம்புகிறார்கள்.
இது வெறும் வெற்றுப் புலம்பல் தானே என்று ஒதுக்கிவிடமுடியாதபடி ”மத சிறுபான்மை நிறுவனங்களுக்கென” அரசியல் சாசனம் வழங்கிய சலுகையை ”மத நிறுவனங்களுக்கான சலுகை” யென ஒரு சிறு திருத்தம் செய்ததன் மூலம் இன்று பார்ப்பன லாபி சத்தமே இல்லாமல் வேத பாடசாலைகளின் செயல்பாட்டில் அரசு தலையிட முடியாதென்று சட்டத்தையே கொண்டுவந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் அடுத்த வரி இன்னும் ஆபத்துக்குரியதாக உள்ளது. இந்த மத நிறுவனங்கள் எந்த வகையான கல்வியை (ஆங்கில வழியோ அல்லது குருகுலக் கல்வியோ) மாணவர்களுக்கு வழங்கினாலும் அவை மத நிறுவனங்களின் கீழ் நடத்தப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டாலே, இந்த கல்வி உரிமைச் சட்டம் அதற்கு பொருந்தாது என்கிறது.
ஏதோ முஸ்லீம் அமைப்புகளின் நிர்பந்தத்தால் தான் இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக கபில் சிபில் வரிக்கு வரி பேட்டியளித்தாலும், அரசியல் சாசனத்தின் பிரிவு 29 & 30 –இன் படி இந்துக்கள் எப்படி சிறுபான்மையினராக முடியும் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. வேத பாடசாலைகள் அரசியல் சாசனத்தின் 29 & 30 பிரிவுகள் சிறுபான்மை மத நிறுவனங்களுக்கு வழங்கும் சிறப்பு சலுகைகளுக்கு கீழ் வருமென்றால் அதில் பெரும்பான்மையான இந்துக்களுக்கு பிரவேசனம் இருக்குமா என்றும் யாரும் கேள்வியெழுப்பவில்லை.
பஜ்ரங்தள்
பயங்கரவாதிகளை உருவாக்கும் பஜ்ரங்தள் பயிற்சி பட்டறை.
இந்த இரண்டு கேள்விகளும் ஒரே பதிலைத் தான் கொடுக்க முடியும். பிரிவு 29 & 30 இன் வரையறைப்படி மொழி, மத அல்லது கலாச்சார ரீதியாக சிறுபான்மையினருக்கான சிறப்புச் சலுகைகளை அனுபவிக்க வேத பாடசாலைகள் தகுதியாயிருப்பதற்கு காரணம், பெரும்பான்மை இந்துக்களுக்கு இல்லாத பார்ப்பனர்களுக்கென்று மட்டுமே உள்ள தனி மொழி (சமஸ்கிருதம்), வழிபாட்டு முறை, கலாச்சாரம் போன்றவை அவர்களை இந்தியாவில் சிறுபான்மையினராக வகைப்படுத்த தகுதியுடையதாக்கிறது.
ஒருபக்கம் தங்களை இந்தியாவின் பெரும்பான்மையினராக சித்தரித்துக் கொண்டு சிறுபான்மை கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு அவர்களை ஏதோ அன்னிய ஆக்கிரமிப்பு சக்திகள் போல் சித்தரிக்கும் இக்கும்பல், தனது நலன்களுக்காக தங்களையே இந்நாட்டின் சிறுபான்மையினராக முன்னுறுத்தி தேவையான சலுகைகளை சத்தமேயில்லாமல் சுருட்டியுள்ளது.
சுருங்கச் சொன்னால் பார்ப்பனர்களால் விதவிதமாகத் தொடங்கப் பட்டுவரும் வேதிக் பாட்சாலா, வித்யாஸ்ரம், வித்யாமந்திர் தொடங்கி வாழும் கலை, அமிர்தா, சங்கரா, சாயிபாபா, டிவிஎஸ், சோ, லதா ரஜனிகாந்த், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஆஸ்ராம் பாபுவின் பால சன்ஸ்கார் கேந்திரா, ஈஷா வின் ஈஷா சம்ஸ்க்ருதி () போன்றவை கல்வி நிலையங்கள் என்ற பெயரில் நடத்தும் இந்துத்துவ பயங்கரவாத மையங்களின் செயல் பாட்டில் இனி அரசு தலையிட முடியாது. அதாவது இவ்வகைப்பட்ட கல்வி நிறுவனங்களில் என்ன வகையான பாடத் திட்டதை எந்த வகையான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பது இந்த சாமியார்களும், பார்ப்பன தொழில் முனைவோரும் தான். ஏறத்தாழ ஆர் எஸ் எஸ் இன் அஜண்டாவுக்கு ஏற்ப இளம் இந்து பயங்கரவாதிகளை உருவாக்கும் பட்டறைகளாக இப்பள்ளிகளை உருவாக்கும் திட்டத்திற்கு இவர்கள் அச்சாரமிட்டுள்ளனர்.
இப்பொழுது மீண்டும் வாழும் கலை ரவிசங்கரின் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் நக்ஸல் பகுதிகளில் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுவதை நினைவுபடுத்திப் பாருங்கள்.
பார்ப்பன லாபியின் வலிமை கார்ப்பரேட் லாபிக்கு சற்றும் சளைத்தது அல்ல.
- ராஜன் vinavu.com