செவ்வாய், 5 நவம்பர், 2013

லாலு பிரசாத் யாதவுக்கு சிறையில் தோட்டக்காரர் வேலை: தினமும் ரூ.14 சம்பளம்

ரூ.950 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்– மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவரது ஜாமீன் மனுவை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு கடந்த மாதம் 30–ந் தேதி தள்ளுபடி செய்தது.
லாலுபிரசாத் தற்போது ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு படுக்கை, மின்விசிறி, நாளிதழ், டி.வி. என எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
லாலுவுக்கு ஜெயிலில் என்ன வேலை கொடுக்கலாம் என்று சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். அவர் உள்ள ஜெயிலில் 30 சதவீத கைதிகள் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் என்பதால் மற்றவர்கள் நெருங்காதபடி வேலை கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
நீண்ட ஆய்வுக்குப் பிறகு லாலு பிரசாத்துக்கு தோட்டக்காரர் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அடைக்கப்பட்டுள்ள 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறையின் பெரும் பகுதியில் காய்கறி, பூஞ்செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.

காய்கறி தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்சி பாதுகாக்கவும், மலர் தோட்டங்களில் தினமும் பூ பறித்து பராமரிக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அந்த பணியாளர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு லாலுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
லாலு பிரசாத் அந்த வேலையை மிகவும் குஷியாக செய்து வருகிறார். அடிக்கடி அவர் மலர் தோட்டங்களுக்குள் புகுந்து எப்படி வேலை செய்ய வேண்டும் என்று மற்ற கைதிகளுக்கு சொல்லி கொடுக்கவும் செய்கிறார்.
இந்த வேலைக்காக லாலு பிரசாத் யாதவுக்கு தினமும் ரூ.14 சம்பளம் கொடுக்கப்படுகிறது. முன்னதாக லாலுவுக்கு ஜெயிலில் உள்ள பள்ளியில் ஆசிரியர் வேலை கொடுக்கலாமா? என்று பரிசிலிக்கப்பட்டது.
ஆனால், லாலு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை கூறியதைத் தொடர்ந்து அவருக்கு ஆசிரியர் வேலை கொடுக்கபடவில்லை.
அரசியல் கலையில் பட்டம் பெற்றுள்ள லாலு ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், ஆமதாபாத் ஐ.ஐ.எம்.மிலும் நிர்வாகம் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது malaimurasu,com

கருத்துகள் இல்லை: