வெள்ளி, 8 நவம்பர், 2013

அணுக்குண்டு ஆயுத சந்தைக்கு வந்து விட்டதா ? சவுதி பணம் கொடுத்த அணுகுண்டு பாகிஸ்தானில் ரெடி! BBC Newsnight

சவுதி அரேபியாவுக்காக அணு ஆயுதம் ஒன்றை பாகிஸ்தான் தயாரித்து விட்டது. தற்போது அணு ஆயுதம், சவுதிக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளது” BBC Newsnight-ல் வெளியான இந்த செய்திதான் இன்றைய ஹாட் டாபிக்.
இந்த அதிரடிச் செய்தியை வெளியிட்ட பிரிட்டனின் BBC Newsnight, தமக்கு பல தரப்புகளில் இருந்து இந்த தகவல் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளது. தகவலின் மூலத்தை அவர்கள் குறிப்பிடவில்லை என்றபோதிலும், பி.பி.சி.யின் நம்பகத்தன்மை காரணமாக இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டங்களுக்கு நிதியுதவி அளித்துவருகிறது. அத்துடன் சவுதி, கடந்த 20 ஆண்டுகளாகவே தமது ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வாங்கி குவிக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வந்துள்ளது.
1999-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சவுதி அரேபிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இளவரசர் சுல்தான்பின் அப்துல்லாஸிஸ் அல் சவுத், பாகிஸ்தானின் அணு ஆயுத தி்ட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

அந்த வகையில் பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்துக்கு தேவையான நிதியுதவிகளை அளித்தது அவர்தான் எனவும், BBC Newsnight தெரிவித்துள்ளது.
பி.பி.சி. வெளியிட்ட இந்த தகவல், வேறு சில சம்பவங்களுடன் பொருந்தி வருவதை காணலாம்.
ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்து அமெரிக்கா எதிர்ப்பு குரல் எழுப்பிய அளவுக்கு, சவுதியும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அரபு உலகில் சவுதியும், ஈரானும் எதிரிகள் என்பது இதற்கு முக்கிய காரணம். பணத்தில் புரளும் சவுதி, எதிர்ப்பு குரல் எழுப்புவதுடன் நின்றுவிடுமா?
ஈரான் தாம் சொந்தமாகவே அணு ஆயுத தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருக்க, அவர்களிடம் அணு ஆயுதம் ரெடியாவதற்கு முன், தமது கையில் அணு ஆயுதத்தை பெற்றுக்கொள்ள தேவையான பணம் நிச்சயம் சவுதியிடம் உள்ளது. அந்த பணத்துக்கான தேவை, பாகிஸ்தானுக்கும் உள்ளது.
கடந்த மாதம், சுவீடனில் நடைபெற்ற ராணுவ மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறை தலைவர் அமோஸ் யாட்லின், கிட்டத்தட்ட இதுபோன்ற தகவல் ஒன்றை தமது பேச்சின்போது தெரிவித்திருந்தார். ஆனால், அப்போது அதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இப்போது, பி.பி.சி. சொன்னவுடன், இந்த விவகாரம் ஹாட்-ஹாட் நிலையை அடைந்து, ஒரே பரபரப்பாகி விட்டது.
சுவீடனில் நடைபெற்ற ராணுவ மாநாட்டில் இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறை தலைவர் அமோஸ் யாட்லின் என்ன சொன்னார்?
“ஒருவேளை ஈரான் அணு ஆயுதத்தை தயாரித்து விட்டால், சவுதி அணு ஆயுதம் ஒன்றை பெற்றுக்கொள்ள ஒரு மாதம்கூட தாமதிக்க வேண்டியதில்லை. அவர்களுக்கான அணு ஆயுதம், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு, அதற்காக பணமும் கொடுக்கப்பட்டு விட்டது. பாகிஸ்தானுக்கு போய், அங்கு தயாராக உள்ள அணு ஆயுதத்தை எடுத்து வரவேண்டியதுதான், சவுதி செய்ய வேண்டிய சுலபமான காரியம்” என்றார் அவர்.
கிட்டத்தட்ட இதைத்தான் பி.பி.சி. இப்போது சொல்லியிருக்கிறது. அடுத்த சில தினங்களில் இந்த விவகாரம் பரபரப்பாக அடிபடப் போகிறது
viruvirupu.com

கருத்துகள் இல்லை: