யாருடைய ஆதரவுமில்லாமல் சென்னைக்கு வந்தேன். இன்று நிறைய மனிதர்களைச் சம்பாதித்துவிட்டேன். எனக்கு பணம் சம்பாதிப்பது நோக்கமல்ல, புதிய இயக்குநர்களை உருவாக்குவதே குறிக்கோள், என்றார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.
ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து எங்கேயும் எப்போதும் என்ற படத்தை தயாரிக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.
ஜெய்-அஞ்சலி, அனன்யா - சர்வானந்த் ஜோடிகளாக நடிக்கும் இந்தப் படத்தை முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்குகிறார். சி சத்யா இசையமைத்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் சினிமாஸில் நடந்தது. நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
இந்த விழாவுக்கு வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த நடிகர் சங்கத் தலைவர் ஆர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் இருவருமே வரவில்லை. எனவே மிகத் தாமதமாகவே தொடங்கியது நிகழ்ச்சி.
விழாவில் பேசிய இயக்குநர் முருகதாஸ், "நான் சென்னைக்கு வந்தபோது என்னைத் தவிர யாரையும் தெரியாது எனக்கு. இன்று நிறைய மனிதர்களைச் சம்பாதித்துள்ளேன்.
என்னால் முடிந்த அளவு இந்த சமூகத்துக்கு திருப்பித் தர நினைக்கிறேன். நல்ல சினிமாக்கள், திறமையான புதிய இயக்குநர்கள் உருவாக என்னால் முடிந்த அளவு உதவத்தான் இந்த தயாரிப்பு வேலையில் இறங்கினேன். ஹாலிவுட்டில் பெரிய நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் நம்முடன் கைகோர்த்துள்ளது. பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள், பெரிய லாபம் என்ற நோக்கம் எனக்கில்லை.
சின்ன பட்ஜெட், புதிய நடிகர்கள், இயக்குநர்களை வைத்து நல்ல சினிமா கொடுத்து குறைந்த லாபம் கிடைத்தால் போதும். அதுதான் இந்த எங்கேயும் எப்போதும் படத்தின் நோக்கம்.
இந்தப் படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அப்படி ஜெயித்தால் இன்னும் நிறைய படங்களை இணைந்து தயாரிப்போம். வருடத்துக்கு இரு இயக்குநர்களாவது அறிமுகமாவார்கள்," என்றார்.
விழாவில் பேசிய சூர்யா, "எங்கேயும் எப்போதும் படம் என் சொந்தப் படம் மாதிரி. இந்தப் படம் ஜெயிக்க வேண்டும். இன்னும் நிறைய ஹாலிவுட் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வரவேண்டும்," என்றார்.
இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் விவேக் உள்பட பலரும் வாழ்த்திப் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக