வெள்ளி, 27 டிசம்பர், 2024

யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளிநொச்சி எம்பி சிறிதரன்!

 தேசம் நெட்  arulmolivarman : நேற்று நடைபெற்ற கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மிகவும் சிக்கலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
 காணிப்பதிவு முறைகேடுகள், போதைப்பொருள் மற்றும் கசிப்பு பாவனை அதிகரிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது.
இரணைமடுக் குளத்தின் தண்ணீரை யாழ் கொண்டு செல்வது தொடர்பான உரையாடலும் முக்கிய இடத்தைப் பெற்றது.
யாழில் ஏற்பட்டுவரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக 1960களில் ஆறுமுகம் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனையே நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசனக் குளமாகிய இந்தக் குளத்தைப் புனரமைத்து, அதன் அணைக்கட்டை உயர்த்தி மேலதிக நீரைச் சேமித்து, யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஏற்கனவே இத்திட்டத்தின்படி தண்ணீர் விநயோகம் செய்யக்கூடியமாதிரி குழாய்கள் பொருத்தப்பட்டு வேலைகள் ஆரம்பித்திருந்த நிலையில் இத்திட்டம் இடை நடுவில் தடைப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை வன்னி விவசாயிகள் எதிர்க்கின்றனர். கிளிநொச்சி ஒரு விவசாய மாவட்டமாக இருக்கும் பட்சத்தில் இரணமடுக்குளத்திலிருந்து ஆயிரக்கான ஏக்கர் வயல்காணிகளுக்கு இன்னும் நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்படவில்லை என கிளிநொச்சி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்க அனுமதிக்கப் போவதில்லை என்று கிளிநொச்சி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார். இவரது வாக்கு வங்கி கிளிநொச்சி என்ற வகையில் சிறிதரன் கிளிநொச்சி விவசாயிகளின் பக்கம் நிற்பதில் ஒரு நியாயமும் உள்ளது. அதேபோல் இராமநாதன் அர்ச்சுனாவின் வாக்கு வங்கி யாழ்ப்பாணத்தில் இருப்பதால் தண்ணியை யாழ் கொண்டு வருவது அவரது வாக்கு வங்கிக்கு முக்கியம்.

ஒருபக்கம் சமமான வளப்பங்கீடு பற்றி பேசினாலும் மறுபக்கம் வளச்சுரண்டல் தொடர்பிலும் விழிப்பாக இருக்க வேண்டும். யாழ் மாவட்டத்தின் நீர்ப்பற்றாக்குறைக்கு அம்மாவட்டத்தின் தவறான மற்றும் பொறுப்பற்ற நீர் மேலாண்மையே காரணம். யாழிலில் காணப்பட்ட பல நீர் நிலைகள் மூடப்பட்டு சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஊதிப் பெருத்த நகரத்தாலும் முறையற்ற கழிவகற்றலாலும் நன்னீர் நிலைகள் பாவனைக்கு ஏற்றதாக இல்லாமல் பழுதடைந்துள்ளன. குறிப்பாக சுண்ணாகம் மின்சார உற்பத்தி மசகு எண்ணெய்க் கழிவுகள் நிலத்திற்கடியில் விடப்பட்டதால் அப்பகுதியின் நிலத்தடிநீர் கெட்டுப் போனமையும் குறிப்பிடத்தக்கது. ஏன் யாழ் மாவட்டம் மாற்றுத் திட்டங்களை ஆலோசிக்க கூடாது. கடல் நீரை நன்னீராக சுத்திகரித்தல், மழை நீரை சேகரிக்கலாம், சட்டவிரோத கட்டிடங்களை தகர்த்து நீர்நிலைகளை மீட்டு புனரமைக்கலாம் என கிளிநொச்சியில் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: