தினமலர் : சென்னை: பெண் போலீஸ் குறித்த அவதூறு பேச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தமிழக அரசு , முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, முதல்வர் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு செய்து வந்த சவுக்குசங்கர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சவுக்கு சங்கர் ஒரு வருடம் வெளியே வர முடியாது.
ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனலில் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்துள்ளார் என சேலம் மாநகர போலீசின், சோஷியல் மீடியா பிரிவு எஸ்.ஐ., கீதா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவதுாறு பரப்புதல், பணிபுரிய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி தவறான கருத்துகளை வெளியிடுதல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், சங்கர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பெண் போலீஸ் குறித்த அவதூறு பேச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீ்ப்ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார். குண்டர் சட்ட நடவடிக்கைகான ஆவணங்கள் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சென்னை போலீசார் ஒப்படைத்தனர். சவுக்கு சங்கர் ஒரு வருடம் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கையை ஒடித்தது போலீசாரா ?
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தேனியில் இருந்து கோவைக்கு போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சவுக்கு சங்கருக்கு காயம் ஏற்பட்டதாக முதலில் தகவல் பரவியது. ஆனால் சில நிமிடங்களில் அவர் காயமடையவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வரும்போது வலது கையில் முறிவு ஏற்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. இவரது கையை போலீசார் உடைத்து விட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரது வக்கீல் பேட்டியளித்தார். இந்நிலையில் அவர் வெளியே வரமுடியாத அளவிற்கு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் போலீசார் சவுக்குசங்கரை கட்டம் கட்டி விட்டனர் என்றே பேசப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக