புதன், 10 ஜனவரி, 2024

உதயநிதி.. துணை முதல்வராக அறிவிக்கப்படுகிறார்? வெளிநாடு செல்லும் ஸ்டாலின்..

tamil.oneindia.com  -  Shyamsundar :  சென்னை; முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது.
சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது,
 ''நான் எப்படி அதைச் சொல்ல முடியும் ? முதல்வர்தான் முடிவு எடுப்பார் '' என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இதே போன்ற கேள்வி இதற்கு முன்பும் பல முறை அவரிடம் கேட்கப் பட்டிருக்கிறது.
அப்போதெல்லாம், எனக்கே தெரியாத விசயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. இதையெல்லாம் உங்களுக்கு யார் சொல்கிறார்கள்.. எனக்கு அப்படி எதுவும் தகவல் வரவில்லையே.. உங்களுக்கு யார் இது போன்ற தகவல்கள் வருகின்றன.. எனக்கு அப்படி தெரியவில்லையே ? '' என்கிற ரீதியில் மறுத்தே வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

துணை முதல்வர் : ஆனால், இந்த முறை அப்படி எதுவும் மறுக்காமல், அதை எல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று சொல்லி உள்ளார். அதாவது துணை முதல்வர் பற்றி முதல்வர் முடிவு எடுக்கட்டும் என்று உதயநிதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லியிருப்பதன் மூலம், துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். அதனை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இளைஞரணி மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

முக்கியமாக பிறந்தநாள் விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் கொடுத்த முக்கியத்துவம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. கடந்த பிறந்த நாளை விட இந்த பிறந்த நாளில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பின்பும் உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் பதவி திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பதவி: இதை மனதில் வைத்தே டிசம்பரில் இளைஞர் மாநாடு வைத்தார்கள். ஜனவரியில் அவர் பொறுப்பு ஏற்பதாக இருந்தது. அங்கே அவருக்கு பொறுப்பு அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் இந்த மாநாடு மழையால் தள்ளிப் போய்விட்டது. இதனால் அப்போது அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் இந்த மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜன.28ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயினை தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு செல்கிறார்; 600க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

வெள்ளத்திற்கு பின்: முக்கியமாக சென்னை புயல் வெள்ளத்திற்கு பின் உதயநிதியின் மவுசு கூடி உள்ளது. வெள்ளத்தின் போது முழுக்க முழுக்க உதயநிதிதான் களத்தில் இருந்தார். அதோடு இல்லாமல் வெள்ள முதல்வர் நிவாரண நிதிக்கான பணம் பெரும்பாலும் உதயநிதியிடம்தான் பிரபலங்கள் மூலம் கொடுக்கப்பட்டது.

பிரபலங்கள் நேரடியாக முதல்வரை சந்திக்காமல் பெரும்பாலும் உதயநிதியைத்தான் சந்தித்தார்கள். அதேபோல் பல்வேறு கூட்டங்களை.. முக்கியமாக தலைமை செயலாளர் உடன் நடக்கும் கூட்டங்களை எல்லாம் தலைமை தாங்கியது முதல்வர் அல்ல.. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: இதுகுறித்து மேலும் விசாரித்தபோது,''கடந்த 26-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டம் நடப்பதற்கு முதல்நாள் ஸ்டாலினை சந்தித்தார் துரைமுருகன். அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை பற்றி விசாரிப்பதற்கான சந்திப்பு அது. அமலாக்கத்துறையை பற்றி விவாதித்துவிட்டு இறுதியில் மா.செ.க்கள் கூட்டம் பற்றியும் விவாதித்தனர்.
Is Udhayanidhi Stalin becoming the Deputy CM of Tamil Nadu as Stalin is going to foreign?

அப்போது, தினமும் 17, 18 மணி நேரம் உழைக்கிறீர்கள். தேவையான அளவுக்கு ஓய்வெடுக்காமல் இருப்பது உடலுக்கு நல்லதல்ல தம்பி. கடினமான பொறுப்புகளை உதயாவிடம் பகிர்ந்துகொடுக்கலாம். அவருக்கும் நிர்வாகம் சார்ந்த விவகாரங்களை கையாள தெரிவது அவசியம். கடந்த 6 மாதங்களில் உதயாவின் நடவடிக்கைகளை கவனிக்கிறேன்.

நிறைய மெச்சூரிட்டி தெரிகிறது: நிர்வாகத்தில் நிறைய மெச்சூரிட்டி தெரிகிறது. மிக மிக முக்கிய விசயங்களை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றதை அவர் கவனிக்கிற மாதிரி உயர் பொறுப்பினை கொடுக்கலாம் என்று துரைமுருகன் வலியுறுத்தியதை ஆமோதிக்கிற மாதிரி, எனக்கு அந்த யோசனை இருக்கு அண்ணே. துணை முதல்வராக்கி நிர்வாகத்தை அதிகாரப்பூர்வமாக கவனிக்கச் சொல்லலாமா ன்னு தோணுது என தலைவர் (ஸ்டாலின்) சொல்லியிருக்கிறார்.

தலைவருக்கே அந்த எண்ணம் இருப்பதை உணந்ததினால்தான், மா.செ.க்கள் கூட்டத்,தில் துரைமுருகன் பேசும்போது, கலைஞர் ஸ்டாலினுக்கு காட்டிய தாமதத்தை உதயநிதிக்கு ஸ்டாலின் காட்டக் கூடாது. உதயநிதியின் உழைப்புக்குரிய உயரத்தை தலைவர் (ஸ்டாலின்) கொடுக்க வேண்டும்'' என சுட்டிக்காட்டினார். அதனால், விரைவில் துணை முதல்வர் பொறுப்பு உதயநிதிக்கு கொடுக்கப்படும்'' என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் இளைஞரணியின் முக்கிய நிர்வாகிகள்.

கருத்துகள் இல்லை: