சனி, 5 ஆகஸ்ட், 2023

ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுர சுவர் இடிந்து விழுந்து விபத்து - பக்தர்கள் அதிர்ச்சி

 tamil.oneindia.com  - Noorul Ahamed Jahaber Ali  : திருச்சி: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுர சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.
சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கோயில் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்து உள்ள அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்து உள்ளது.
தமிழ்நாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.


108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என்றும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் இந்த கோயில் ஆசியாவின் மிகப்பெரிய பெருமாள் கோயிலாக உள்ளது.
காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்து உள்ள இக்கோயில் இந்தியாவிலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட கோயிலாக திகழ்கிறது.


சோழர், பாண்டியர், சேரர், விஜயநகர பேரரசர்கள், அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரால் புணரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது இந்த கோயில். இந்த நிலையில், இக்கோயிலின் கோபுரத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. கோயிலுடைய கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை சுவர் தற்போது இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இந்த கோபுரத்தின் முதலாவது மற்றும் 2 ஆம் நிலை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் விரிசல்களை சரி செய்யும் பணிகள் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்தன. இதற்கிடையே விரிசல் ஏற்பட்டு இருந்த ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் முதல் நிலை சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

நள்ளிரவு சுமார் நள்ளிரவு 1.50 மணி அளவில் இந்த சுவர் இடிந்ததால் அங்கு எந்த விதமான உயிர்சேதங்களும் ஏற்படவில்லை. அதே நேரம் ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் முதல் நிலை சுவர் இடிந்து விழுந்து இருப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இடிந்து விழுந்த கோபுரத்தை முழுமையாக சரி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

இந்த கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தரிசனம் செய்யப்பட்டு வரும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதில் உள்ள கிழக்கு வாசல் கோபுரம்தான் தற்போது இடிந்து விழுந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: