செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

பிரான்ஸ் தமிழச்சி தரப்பு வாதங்கள் சமூகவலை லீக்ஸ்

May be an image of 1 person, standing and indoor

ThamizhachiAuthor  :  தமிழச்சி மீது வீசப்படுபவை விமர்சனங்களா?
தமிழச்சி. கடந்த பத்து நாட்களாக தமிழ் இணையப் பரப்பில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர்.
பல ஆண்டுகளாக இணையப்பரப்பில் இயங்கிக் கொண்டிருந்தாலும்,
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக லூலூ குழுவின் பாலியல் சுரண்டல்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போதிலும்,
இப்போது மட்டும் தோழர் தமிழச்சி மீது அதிக வெளிச்சம் விழுந்திருப்பதன் காரணம் என்ன?
இதுவரை அவர் தன்னுடைய நாட்டிலிருந்து, பிரான்சிலிருந்து இவைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார், விவாதித்துக் கொண்டிருந்தார்.
தற்போது அதன் அடுத்த கட்டமாக நேரடியாக தமிழ்நாடு வந்து இதுவரை தான் கூறிவந்ததன் தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகளையும்,


சமூக நடவடிக்கைகளையும் தொடங்கி இருக்கிறார்.
இது தான் தற்போது தமிழச்சி பேசு பொருளாய் மாறியிருப்பதன் காரணம்.
அதேநேரம் பலரும் தோழர் தமிழச்சி மீது பலவிதமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள். விளம்பர விரும்பி, தமிழச்சிக்கு என்ன அக்கரை? கொளத்தூர் மணியை ஏன் குற்றம் சாட்டுகிறார்?
போன்றவை அவைகளில் சில.
இவை விமர்சனங்கள் எனும் எல்லையைக் கடந்து, தமிழச்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போக வைக்கும் முயற்சிகளாக தோன்றுகின்றன.
முதலில் லூலூ குழுவின் பாலியல் சுரண்டல்கள் என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்கலாம்.
கன்யாகுமரி பகுதியைச் சேர்ந்த லூலூ தேவ ஜம்லா என்பவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

இவர் முகநூலில் ஒரு குழுவை உருவாக்குகிறார். WSB (Women Stress Buster) என்பது அந்தக் குழுவின் பெயர். பெண்களைக் கொண்டு பெண்களுக்காக நடத்தப்படும் குழுவாக வெளிக்காட்டிக் கொள்ளப்படும் இந்தக் குழுவில் பல பெண்கள் இணைகின்றனர். பெண்கள் தங்களுக்குள் அடக்கி வைத்திருக்கும் பாலியல் தொடர்பான சிக்கல்களை வெளிப்படையாக குழுவில் பேசலாம் என ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இதற்கு பெரியார் மேற்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பெண் விடுதலை என்பது பாலியல் விடுதலையையும் உள்ளடக்கியது. எனவே, பாலியல் விவகாரங்களை பேச தயங்க வேண்டியது இல்லை. இவ்வாறு வெளிப்படையாக இருப்பதன் மூலம் பெண்களின் மன இறுக்கம் குறைந்து அவர்கள் சிறப்பாக செயல்படலாம் என்பதாக மெல்ல மெல்ல அந்தக் குழுவில் இருக்கும் பெண்கள் நகர்த்தி கொண்டுவரப் படுகிறார்கள்.
‘டாஸ்க்’ எனும் பெயரில் சுய விவரங்களைக் கூறுதல், குறை நிர்வாணமாக புகைப்படம் போடுதல் என்று அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி குழுவிலிருக்கும் பெண்கள் உற்சாகப்படுத்தப் படுகிறார்கள். இவை அனைத்தும் சேமித்து வைக்கப்படுகின்றன. இவைகளின் மூலம் தகுந்த பெண்கள் இனம் காணப்பட்டு, அவர்களை லூலூவுக்கு நெருக்கமாக இருக்கும் பெண்கள் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு பாலியல் போதமையோடு நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியம் என்ன?
திருமண உறவு என்பது பெண்களை பூட்டி வைத்திருக்கும் கால்விலங்கு, அதை உடைத்தெறிந்து கமுக்கமாய் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். இதன் பிறகு ஆண் நண்பர்கள் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள்.

இதன் பிறகு, உங்கள் நண்பர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் சிக்கலில் இருக்கிறார்கள். உங்களுக்கு நல்ல சம்பளம் வருகிறது தானே, ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் கொடுக்க முடியுமா? என்பதில் தொடங்கி, முரண்படும் பெண்களை, அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறிப்பது வரை செல்கிறது.
இது தான் லூலூ குழு குறித்த சுருக்கமான வரைபடம்.

இவ்வாறு லூலூ குழுவால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் தோழர் தமிழச்சியை தொடர்பு கொள்கிறார்கள். இதன் மூலம் தான் இந்தக் குழு பற்றிய செய்திகளும், பாலியல் விவகாரங்களும் வெளிவருகின்றன.
அன்றிலிருந்து தமிழச்சி இந்த பாலியல் கொடுமைகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார். இதன் அடுத்த கட்டமாக இந்தச் சிக்கலை முற்போக்கு, பெரியாரிய, இடதுசாரி இயக்கங்களிடம் கொண்டு செல்லும் போது தான் மேற்கண்ட கேள்விகள் எழுகின்றன.
விளம்பரம் கிடைக்கும், முகநூலில் கொண்டாடப்படும் ஆளாவோம் என்பன போன்ற விளம்பர மோகம் கொண்டு தான் தமிழச்சி இந்தப் பாலியல் பிரச்சனையை எடுத்துக் கொண்டாரா?
முகநூலைப் பொருத்தவரை தோழர் தமிழச்சி ஏற்கனவே அறியப்பட்ட முகம் தான். லூலூ பிரச்சனைக்கு முன்பே லட்சக் கணக்கான பின்பற்றுவோரைக் கொண்டிருந்தது அவருடைய முகநூல் பக்கம். முகநூலுக்கு முன்பே ஓர் இணைய தளத்தை நடத்திக் கொண்டிருந்தார். பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் துடிப்பான செயல்பாட்டாளர். மனித உரிமை அமைப்புகளில் உறுப்பினராக இருப்பவர். இதற்கு மேல் தனியாக தமிழச்சிக்கு விளம்பரம் தேவைப்பட்டது என்பதை இந்தக் கேள்வியை எழுப்புவோர்கள் எப்படி கண்டுணர்ந்தார்கள் என்பது தெரியவில்லை.

இதற்கு முன்னதாக, ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்தும், சுவாதி படுகொலை வழக்கு குறித்தும் தமிழச்சி நிறைய எழுதி, முகநூல் நேரலைகளில் பேசி இருக்கிறார். சமூக ஊடகங்கள் பரவலாக புழக்கத்துக்கு வந்த பிறகு பலரும் பலவிதங்களில் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது போன்றே தோழர் தமிழச்சியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கூடுதலாக, தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அதே விசயங்களுக்காக போராடுவோருக்கு தேவை கருதி சில உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறார். இதில் தனிப்பட்டு விவாதிக்கும் அளவுக்கு என்ன விளம்பர மோகம் இருக்கிறது?

இணையத்தில் செயல்படும் அனைவருமே விளம்பர மோகம் கொண்டவர்கள் என வரையறை செய்தால் அதில் தமிழச்சியும் அடங்குவார். அவ்வாறின்றி, தமிழச்சி மட்டும் தனியாக விளம்பர மோகம் கொண்டு செயல்படுகிறார் என்று கூறுவதற்கு இவைகளில் என்ன இருக்கிறது?
தன்னிச்சையாக செயல்படுகிறார், தமிழ்நாட்டில் இருக்கும் இயக்கங்களோடு கலந்து பேசி, அவர்களோடு இணைந்து இந்தப் பிரச்சனையை எடுத்துச் சென்றிருக்கலாமே.
இவ்வாறு கேள்வி எழுப்புவோர்கள் இது குறித்து அறியாமல் இருப்பவர்களே. பல அமைப்புகளிடம் பேசப்பட்டிருக்கிறது. இடதுசாரி அமைப்புகள் தொடங்கி பெண்ணிய அமைப்புகள் வரை பல அமைப்புகளிடம் இந்தப் பிரச்சனை எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
எந்த அமைப்பிலிருந்தும் இதற்கு முறையான பதில் இல்லை. இதன் பின்னர் பெண்ணியம் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இரு பெண்களுடன் சேர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் மூலம் தான் தொடக்கத்தில் இந்தப் பிரச்சனை முன்னெடுக்கப்பட்டது. பின்னர் அவர்களும் விலகிக் கொள்ள தமிழச்சி மட்டும் தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறார்.
தற்போது தனியாக இதை முன்னெடுக்கிறார் என்பதால் மட்டுமே அவர் எந்த அமைப்புகளையும் அணுகவில்லை என்று முடிவு செய்துவிட முடியுமா?

சரி இப்படி கேள்வி எழுப்புவோரை நோக்கி எதிர்க் கேள்வி ஒன்றையும் எழுப்பலாம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு பாலியல் முறைகேடு இணையத்தின் வழியாக, பெரியாரின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி நடந்து கொண்டிருக்கிறது எனும் செய்தி வெளிவந்த பிறகிலிருந்து இன்று வரை, தமிழ்நாட்டில் இருக்கும் இடதுசாரி, பெரியாரிய, முற்போக்கு அமைப்புகள் இந்த விதயத்தில் செய்தது என்ன? எதையாவது கூற முடியுமா? எனும் போது தோழர் தமிழச்சியை நோக்கி இப்படி ஒரு கேள்வியை எழுப்புவது எந்த விதத்தில் சரி?
எங்கோ பிரான்சின் இருக்கும் தமிழச்சிக்கு தமிழ்நாட்டில் நடக்கும் இந்தப் பிரச்சனையில் அப்படி என்ன அக்கரை?
இரண்டு தலைமுறைக்கு முன்னரே பிரான்சில் குறியேறி விட்டாலும், பிறந்தது, வளர்ந்தது பிரான்சாக இருந்தாலும் அடிப்படையில் அவரும் ஒரு தமிழர் தான். தவிரவும் உலகின் எந்த மூலையில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் செயல்படுவதற்கும் கம்யூனிஸ்டுகளுக்கு எல்லைப் பிரச்சனை ஒன்றும் இல்லை.

ஏனென்றால் கம்யூனிஸ்டுகள் சர்வதேசவாதிகள்.
தவிரவும் இந்தப் பிரச்சனையில், பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் தமிழச்சியிடம் இதை கொண்டு சென்றிருக்கிறார்கள் உதவி கோரியிருக்கிறார்கள். தமிழச்சியிடம் இதை கொண்டு செல்வதற்கு முன்னால் அந்தப் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ள யாரிடமெல்லாம் இந்தப் பிரச்சனையை கொண்டு சென்றார்கள், அவர்கள் அந்தப் பெண்களுக்கு என்ன பதில் கூறினார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. தன்னிடம் ஒரு பாலியல் பிரச்சனை கொண்டுவரப்பட்டிருக்கிறது எனும் அடிப்படையில் இதில் அக்கரைப்பட்டிருக்கிறார்.
இதில் யாருக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்? இதில் தமிழச்சிக்கு என்ன அக்கரை என கேள்வி எழுப்புவோர்கள் முடிவாக என்ன சொல்ல விரும்புகிறார்கள்? இது தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனை, இதை தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பிரான்சில் இருந்து வந்து தமிழச்சி தலையிட வேண்டிய தேவை இல்லை என்றா கூற விரும்புகிறார்கள். இது எவ்வளவு அபத்தமானது.
தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு பிரச்சனையில், தமிழ்நாட்டின் களப் போராளிகளை குற்றம்சாட்டும் தமிழச்சிக்கு என்ன தகுதி இருக்கிறது? அவரது கள அனுபவம் என்ன?

பிரான்சிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருக்கும் தமிழச்சி, பிரான்சில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எப்போதாவது தான் தேவை கருதி அவர் தமிழ்நாட்டுக்கு வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் நீண்ட இடைவெளி கடந்தே தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவ்வாறு வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் பெரியாரிய, கம்யூனிச இயக்கங்களோடு தொடர்பு கொண்டு அதன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார். இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஒருவேளை, இவ்வளவு களப்பணி ஆற்றி இருந்தால் தான் தமிழ்நாட்டின் பிரச்சனைகளில் தலையிட முடியும் என்று அளவுகோல் எதுவும் இருக்கிறதா?
தமிழச்சி ஆர்.எஸ்.எஸ் க்கு ஆதரவாக செயல்படுகிறார். பார்ப்பனியம் அதிகாரத்தில் இருந்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பார்ப்பனியத்துக்கு எதிராக தொடர்ச்சியாக களத்தில் நிற்கும் பெரியாரிய அமைப்புகள் மீது குற்றம்சாட்டுவது ஏன்? இது பார்ப்பனியத்துக்கு உதவி செய்வதாக ஆகாதா?

ஆம். அப்படி ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், இப்படிப் பார்த்து ஒரு பிரச்சனையை தள்ளிப் போட முடியுமா? எந்த ஒரு வலதுசாரி இயக்கமும் நடப்பதை திரித்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே முயலும்.
பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டங்களையே அவதூறுகள் மூலமும், பொய் செய்திகள் மூலமும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.
இதற்காக பார்ப்பனியத்துக்கான எதிர்வினைகளை தள்ளிப்போட முடியுமா? எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சனையின் கனம் என்ன? பெரியாரின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி, பெரியார் அமைக்க விரும்பிய சமூகம் நாங்கள் கூறுவது போல் கட்டற்ற பாலியல் உறவை உள்ளடக்கியது தான் என்று பெரியாரைப் கொச்சைப்படுத்தி பாலியல் முறைகேடுகள் செய்யப்படும் போது, அதை எதிர்க்காமல் கடந்து போவது பார்ப்பனியத்துக்கு உதவி செய்வதாக ஆகாதா?

ஒரு கும்பல் இணையத்தை பயன்படுத்தி, கமுக்கமாக பாலியல் சீரழிவை விரிவாக எடுத்துச் செல்வதை எதிர்க்காமல் மௌனம் காப்பது எந்த விதத்தில் பெரியாரியத்துக்கு உதவும்? பெரியாரிய இயக்கங்களில் இருப்பவர்கள் சிலரே, பெரியாரை அடைமொழியாக கொண்டிருப்பவர்களே இந்த பாலியல் விவகாரங்களில் சிக்கி இருக்கும் போது, அதன் உண்மைத் தன்மையை கண்டறிவதும், அவர்களை களையெடுப்பதும் பெரியாரியத்துக்கு உதவுமா? அல்லது, அவர்களை அந்தப் போக்கிலே தொடரவிட்டுக் கொண்டே பெரியாரிய செயல்பாடுகளிலும் இருப்பதற்கு அவர்களை அனுமதிப்பது பார்ப்பனியத்துக்கு உதவுமா?
ஒரு பிரச்சனை என்று வந்தால் அதை முழுமையாக ஆராய்ந்து, தாம் சார்ந்து நிற்கும் தத்துவம், கொள்கை, கோட்பாடுகளுக்கு ஏற்ப எது சரி எது தவறு என கண்டறிந்து, தவறு செய்தவர்களை விமர்சனத்துக்கு ஆட்படுத்தி கண்டிப்பதும், தண்டிப்பதும் தான் சரியான வழிமுறை. சமூகத்தில் எந்தப் பிரச்சனையும் ஒன்றன் பின் ஒன்றாக வருவதில்லை.

ஒரே நேரத்தில் பல சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. அந்த நேரங்களில் அனைத்துக்கும் நேரம் ஒதுக்கி சரி தவறுகளை ஆய்வு செய்வது சரியா? அல்லது சூழல் சரியில்லை எனவே, இப்போது இந்தப் பிரச்சனையை எழுப்ப வேண்டாம் என்று முடிவெடுப்பது சரியா? ஒரு வேளை இப்போது எழுப்ப வேண்டாம் என நீங்கள் அமைதியாக இருக்கும் ஒரு பிரச்சனையில், வேறு யாராவது அந்தப் பிரச்சனையை எழுப்பினால், அதற்கு எதிராக களமாடுவதற்கு ஆயத்தமாக இருக்கும் இயக்கம், குறித்த அந்த பிரச்சனைக்கு எதிராக களமாடுவது மட்டும் பார்ப்பனியத்துக்கு ஆதரவாக ஆகி விடும் என்று கூறுவது ஏற்புடையதாக இருக்க முடியுமா?
உங்கள் குற்றச்சாட்டு யார் மீது? இதை கொளத்தூர் மணிக்கு எதிராக திருப்புவது ஏன்?
தோழர் தமிழச்சி இந்த பாலியல் விவகாரத்தில் முதன்மையாக குற்றம்சாட்டுவது பெரியார் சரவணன் (இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள்) என்பவர் மீது தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பாலியல் விவகாரத்தில் நேரடியாக கொளத்தூர் மணி அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. கொளத்தூர் மணி அவர்கள் மீது பாலியல் குற்றவாளிகளை மறைக்கிறார் அல்லது காப்பாற்ற முயல்கிறார் என்பது மட்டும் தான். இதை நேரடியாக கொளத்தூர் மணி அவர்களிடமே நேரடியாக தொலைபேசி உரையாடலில் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலில்லாததோடு வாட்ஸ் ஆப் உரையாடலும் முடக்கப்படுகிறது. பின்னர் முகநூல் நேரலையில் கேட்கிறார். எந்த பதிலும் இல்லாமல் அமைதி நிலவுகிறது. பின்னர் தமிழச்சி தமிழ்நாடு வந்திருப்பதனால் நேரடியாக அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுக்கப் போகிறார். அவரின் இயக்கத் தொண்டர்களால் வழி மறிக்கப்பட்டு, தகராறு செய்து, இழி சொற்களால் திட்டி மனு கொடுக்க முடியாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்.

மட்டுமல்லாமல், தமிழ் மீது ஆர்வம் கொண்டு ஒரு ஆசிரியரின் உதவியோடு தமிழ் கற்று, தமிழ்நாட்டில் வந்து தமிழ் பேசிய தமிழச்சி மீது சம்பவம் என்று அவர் பயன்படுத்திய ஒற்றை சொல்லைக் கொண்டு காவல் துறையில் முறையீடு கொடுத்து விசாரிக்க வைக்கப் படுகிறார் என்பது எவ்வளவு கொடூரமானது. இவ்வாறு செய்வது பெரியாரியத்துக்கு ஏற்புடையதா? அல்லது பார்ப்பனியத்துக்கு ஆதரவானதா?
கொளத்தூர் மணி அவர்கள் மீதான குற்றச்சாட்டின் அழுத்தம் இன்னும் அதிகம். ஒரு இன்றியமையாத மைய அச்சாணியில் நின்றிருக்கும் ஒருவர் திசை மாறுவது என்பது அதன் இலக்கை நோக்கிய அதன் பயணத்தில் எவ்வளவு திசைவிலகலை ஏற்படுத்தும் என்பதை சிந்திப்பவர்களால் உணர முடியும்.

ஒரு பாலியல் குற்றச் செயலில் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக வருவதற்கு தமிழக சூழல் அவ்வளவு எளிதில் இடம் கொடுக்காது என்பது எவரும் புரியக் கூடியதே. அவ்வாறான சூழலில், ஒரு பெண் தன்னையே ஆயுதமாக பயன்படுத்தி சான்றுகளை திரட்டுவதற்காக குற்றவாளியோடு தொலைபேசியில் உரையாடுகிறார். ஒவ்வொரு நாளும் தான் என்ன உரையாடுகிறேன், எந்த எல்லைக்கு நகர்த்திக் கொண்டு செல்கிறேன். அந்தக் குற்றவாளி என்னவெல்லாம் சொல்கிறான், செய்கிறான் என்பதையெல்லாம் இருவரையும் தெரிந்த ஒருவரிடம் பதிவுகளாக் கொடுத்து வந்திருக்கும் நிலையில். அந்த மதிப்புக்குறிய ஒருவர் தடம் மாறி அவ்வாறான ஆதாரங்கள் எதுவும் தன்னிடம் இல்லை. முன்னுக்குப் பின் முரணாக தெரிகிறது. எனவே நான் இதிலிருந்து விலகுகிறேன் என்று பலவற்றை மறைத்து, மேலோட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு கள்ள அமைதி காப்பது என்பது எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது? எவ்வளவு வலியை உருவாக்கக் கூடியது? நம்பிக்கைத் துரோகம் அல்லவா இது?
இன்று பெரியார் இருந்திருந்தால் இது போன்ற நடவடிக்கைகளை அனுமதித்திருப்பாரா?
பெரியார் சரவணன் சட்ட அடிப்படையில் எப்படி முதன்மையாக குற்றவாளியாக கருதப்படுவானோ, அதற்கு இணையாக தார்மீக அடிப்படையில் கொளத்தூர் மணி அவர்கள் முதன்மையாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமாதா என்ன?

இன்றைய ஆணாதிக்க சூழலில், பாலியல் சுரண்டல் தொடர்பான அதிகாரமும், ஆதிக்கமும் கொண்ட ஒரு வலைப்பின்னலை எதிர்த்துப் போராடுவது என்பது எவ்வளவு கடினமானது. இதை உணரும் எவருக்கும் அவ்வாறு எதிர்த்துப் போராடுபவருக்கு ஆதரவாகவும், உதவியாகவும் இருப்பது என்பது அவ்வளவு தேவையாக இருக்கிறது என்பது புரிய வேண்டும். அவ்வாறான புரிதலைத் தான் தோழர் தமிழ்ச்சி உங்களிடம் கோருகிறார். பரிசீலியுங்கள் நண்பர்களே .. .. தோழர்களே .. ..
பின் குறிப்பு: தமிழச்சி என்றவுடன் என்னிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்த தோழர்கள் சிலரின் கேள்விகளிலிருந்தே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. தொடர்புடையவர்களுக்கு தொலைபேசியிலேயே விளக்கமளித்திருக்கலாம் என்றாலும், இதை கட்டுரையாக வெளியிடுவது இது போன்ற கேள்வியை வைத்திருக்கும் பலருக்கும் விளக்களிக்கும் என்பதால் தான் இதை பதிவாக இடுகிறேன். தொடர்புடைய தோழர்கள் மேலும் கேள்விகளை எழுப்பினாலும் நலமே.
நன்றி தோழர் செங்கொடி
https://senkodi dot wordpress dot com/2022/02/14/lulu-tamizhachi-feminism/

கருத்துகள் இல்லை: