சனி, 18 செப்டம்பர், 2021

Breaking News ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்! US, Britain, Australia form Indo-Pacific 'AUKUS' security alliance

BBC  : முக்கியமான ஆசியா பசிபிக் வணிக உடன்படிக்கையில் சேர விண்ணப்பித்துள்ளது சீனா.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான மறு நாள் இந்த விண்ணப்பத்தை செய்துள்ளது சீனா.
Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் 'பசிபிக் அளாவிய விரிவான, முற்போக்கான கூட்டாண்மை ஒப்பந்தம்' அமெரிக்காவால் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2017ல் வெளியேறியது அமெரிக்கா. அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதற்கான முடிவை எடுத்தார்.
இந்த தாராள வணிக ஒப்பந்தத்தில் சேர்வதற்கு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் விண்ணப்பித்துள்ளது என்று சீன வணிகத்துறை அமைச்சர் வாங் வென்டாவ் தெரிவித்தார். இதற்கான கடிதம் நியூசிலாந்து வணிக அமைச்சர் டேமியன் ஓ கொன்னோருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்துக்கான நிர்வாக மையமாக நியூசிலாந்து செயல்படுகிறது.
விண்ணப்பம் அனுப்பப்பட்டதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிப்பதற்காக சீன அமைச்சர் வாங் - ஓ கொன்னோர் இருவரும் தொலைபேசி வழியில் உரையாடினர் என்று சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல் முதலில் 'பசிபிக் அளாவிய கூட்டாண்மை' என்ற பெயரில் இந்த ஒப்பந்தம் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவினால் முன்னெடுக்கப்பட்டது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Imagesஅமெரிக்கா இதில் இருந்து வெளியேறுவது என்று டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்த பிறகு, ஜப்பான் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, இதன் பெயர் விரிவான, முற்போக்கான பசிபிக் அளாவிய கூட்டாண்மை ஒப்பந்தம் என்று மாற்றப்பட்டது. 2018ல் இந்த ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், நியூசிலாந்து உள்பட 11 நாடுகள் கையெழுத்திட்டிருந்தன.வட்டார வணிக ஒப்பந்தம்

இந்த CPTPP ஒப்பந்தத்தில் சேர்வதற்கு கடந்த ஜூன் மாதம் முறைப்படி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது பிரிட்டன். தாய்லாந்து தங்களுக்கும் ஆர்வம் இருப்பதாக சமிக்ஞை தந்தது.

14 நாடுகள் இடம் பெற்றுள்ள Regional Comprehensive Economic Partnership (RCEP) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் வட்டார அளவிலான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கடந்த நவம்பர் மாதம் சேர்ந்த சீனாவுக்கு, இப்போது சிபிடிபிபி ஒப்பந்தத்தில் சேர்வது மிகப்பெரிய ஆதாயமாக இருக்கும்.

ஆர்.சி.இ.பி. ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரக் கூட்டணி. இதில் தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான அடுத்த நாள் சீனா சிபிடிபிபி ஒப்பந்தத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளது.
சீன பொருளாதாரம்

ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை கட்டுவதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள ஆக்கஸ் ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. அது மட்டுமில்லாமல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான ஷரத்துகளும் இந்த ஆக்கஸ் ஒப்பந்தத்தில் வருகின்றன. பல பதிற்றாண்டுகளில் ஆஸ்திரேலியா எட்டிய மிகப்பெரிய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் இது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆக்கஸ் ஒப்பந்தம் பொறுப்பற்றது, குறுகிய மனப்பான்மை கொண்டது என்று சீனா விமர்சித்துள்ளது.

 

கருத்துகள் இல்லை: