புதன், 15 செப்டம்பர், 2021

உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டி! அதிமுக - பாமக இடையே வார்த்தைப் போர் துவங்கியுள்ளது

தொடங்கியது அதிமுக - பாமக மோதல்!
ZEE தமிழ்  : தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடைபெறாமலே இருந்து வந்தது. பின்பு முதற்கட்டமாக பாதி மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இந்தச் சூழலில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்துள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் வளர்ச்சி கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்து.

pmk

பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. கடந்த தேர்தல்களில் அதிமுகவில் சீட்டு கிடைக்காதவர்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்த்து போட்டியிட்டனர். இதுகுறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட்ட போதும் அவரால் சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைத்தால் நம்மால் வெல்ல முடியுமா? உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பல தொகுதிகளில் வென்று பாமகவின் வாக்கு சதவீதத்தை பலப்படுத்துவோம். பாமகவால் கூட்டணிக் கட்சிகள் பலனடைந்தன, ஆனால் கூட்டணியால் பாமகவுக்கு எந்த பலனும் இல்லை என ராமதாஸ் கூறினார்.

கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி துண்டு, தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்ளலாம் கூட்டணியை நம்பி இருந்ததில்லை என அதிமுகவின் செல்லூராஜூ அதிரடியாக கூறியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுவதால், அவர்களுக்கு தான் இழப்பு. எங்கள் வாக்கு வங்கியில் எந்த பாதிப்பும் இல்லை. Gentlemanஆக இருந்தால் பா.ம.க-வுக்கு நல்லது. எங்கள் உட்கட்சி விவகாரங்களை ராமதாஸ் விமர்சித்தால் நாங்களும் விமர்சிப்போம் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுகவினர் இவ்வாறு கூறி வரும் நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் தொடர்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்துப் போட்டி என பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தற்போது கூறியுள்ளார்.   பாமாகவின் தனித்து போட்டிக்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகிறது.  அதிமுகவுடன் கடந்த சில வாரங்களாக பாமக இணக்கமாக இல்லாத நிலையில் தற்போது கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் திமுகவின் அறிவிப்புகளை பாராட்டி, முதல்வர் ஸ்டாலினை பாராட்டி திமுகவிற்கு நட்பு அழைப்பு விடுத்துக் கொண்டு இருந்த பாமக தற்போது முத்தாய்ப்பாக அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டு உள்ளது.

பாமகவின் வன்னியர் ஆதரவு லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு பலன் அளிக்கவில்லை என்றாலும் அதிமுக பாமக மீதான நம்பிக்கையை இழக்கவில்லை.  பாமகவின் வேண்டுகோள் மற்றும் தூண்டுதலால் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்தது. தேர்தலில் இது வன்னியர் வாக்குகளை தங்கள் கூட்டணி பக்கம் கொண்டு வரும் என்று அதிமுக நம்பியது. ஆனால் வன்னியர் வாக்குகள் எதிர்பார்த்தபடி அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. இது தேர்தல் ஜிம்மிக்ஸ், உண்மையில் தர மாட்டார்கள் என்று நினைத்து வன்னியர்களும் அதிமுகவிற்கு ஓட்டு போடவில்லை என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: