திங்கள், 13 செப்டம்பர், 2021

நடிகர் வடிவேலுவின் பிரச்சினையை தீர்த்து வைத்த லைகா CEO தமிழ் குமரன்! பாமக ஜி கே மணியின் மகன்!

Lyca Productions and Vadivelu - All You Need to Know!

Rayar A -   Oneindia Tamil :  சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஒதுங்கி இருந்த நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் என்னும் புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனது புதிய படம் குறித்து நடிகர் வடிவேலு சென்னை தியாகராயநகரில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களின் ஆசிர்வாதம், வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்துள்ளது. திரையுலகத்தில் இருந்தும் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த அளவுக்கு இந்த பிரச்சினையை முடித்து வைத்தது தமிழ் குமரன்தான். பாமக ஜி.கே.மணியின் தவப்புதல்வன்தான் இவர்.


தமிழ் குமரன் லைக்காவில் சி.இ.ஓ ஆக இருக்கிறார். இந்த பிரச்சினையை சரி செய்து கொடுத்தவர் இவர்தான். சுபாஷ்கரன் சார், நான் மற்றும் தமிழ் குமரன் சேர்ந்து பிரச்னையை தீர்த்து, இயக்குனர் சுராஜிடம் புதிய படம் குறித்து பேசினோம். ''வடிவேலு நீங்கள் நல்லா வரணும். மேலும் பல படங்கள் செய்ய வேண்டும்'' என்று சுபாஷ்கரன் சார் என்னை வாழ்த்தினார்.
அவர் வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்தினார். ஏற்கனவே பல படங்களில் பாடி இருக்கிறேன். அதேபோல் இந்த படத்திலும் ஒரு பாடல் பாடுகிறேன்.
சந்தோஷ் நாராயணன் புதிய படத்தில் இசையமைக்கிறார். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வேண்டும் என்று முதலிலேயே ஆசை இருந்தது. இது தொடர்பாக லைக்கா சி.இ.ஓ தமிழ் குமரனிடமும், இயக்குனரிடமும் பேசினேன். சந்தோஷ் நாராயணன் தற்போது முன்னணி மியூசிக் டைரக்டர். அவர் நமது படத்தில் வேலை பார்ப்பாரா? என்ற சந்தேகம் நிறைய இருந்தது.
நான் கூறியவுடன் இயக்குனரும், தமிழ் குமரனும் சேர்ந்து சந்தோஷ் நாராயணனிடம் போனில் பேசினார்கள். அப்போது சந்தோஷ் நாராயணண் கூறிய முதல் வார்த்தை '' தலைவன் வடிவேலு எங்கே.. அவர் படத்துக்கு மியூசிக் போடாம இருப்பேனா. அவரிடம் போனை கொடுங்கள்'' என்பதுதான்.

'என்னிடம் போனில் பேசிய சந்தோஷ் நாராயணண், '' நான் உங்கள் தீவிர ரசிகன்'' என்று கூறினார். ஒரு பிஸியான மியூசிக் டைரக்டர் கேட்ட உடனேயே எனது படத்தில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இந்த படத்தில் நீங்கள் கண்டிப்பாக ஒரு பாடல் பாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இவ்வாறுன் நடிகர் வடிவேலு கூறினார்

கருத்துகள் இல்லை: