திங்கள், 13 செப்டம்பர், 2021

நீட் விலக்கு தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்த முதல்வர் மு . க.ஸ்டாலின்

 மின்னம்பலம் : ‘பிளஸ் டூ அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெறும்’ என்று நீட் தேர்வுக்கு எதிராக இன்று (செப்டம்பர் 13) சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவராக வேண்டுமென்ற கனவு நிறைவேறுவதில்லை. இதனால் கடந்த காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் தற்கொலை செய்து தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர். நேற்றும் கூட சேலத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்தார். ஒன்றிய அரசு நமது குரலுக்கு செவி சாய்க்க வில்லை எனில், அனைத்து மாநில முதல்வர்களின் ஆதரவை திரட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று (செப்டம்பர் 13) சட்டப்பேரவை கூடியது. அப்போது, நீட் தேர்வு தொடர்பாக விவாதம் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வு விவகாரத்திலிருந்த குழப்பத்துக்குத் தெளிவான முடிவை இந்த அரசு அளிக்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மாணவர்கள் நம்பிக்கையிலிருந்தனர். நீட் தேர்வு குழப்பத்தால் மாணவர்கள் தங்களை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதனால் தான், நேற்று சேலத்தில் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். மாணவரின் தற்கொலைக்கு முழுப்பொறுப்பு திமுகதான் என்று அவையில் தெரிவித்தேன். இதற்குப் பதில் அளிக்காததால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்.

கடந்த ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். இதனிடையே உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி நடக்க முடியுமா. மற்ற மாநிலங்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் நீட் தேர்வை நடத்துகின்றன” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் தீர்மானம் கொண்டு வந்த போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா எம்.பி. ஒரு கருத்தைத் தெரிவித்தார் என்று கூறி ஒரு வீடியோ ஒன்றைக் காண்பித்தார். அது நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சித்து ஆ. ராசா பேசிய வீடியோ ஆகும்.

இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி நாங்கள் தீர்மானம் கொண்டு வந்த போது அயோக்கியத்தனம் என்று கூறிய ஆ.ராசாவின் கருத்துகள் தற்போது திமுகவுக்குப் பொருந்துமா என்று கேள்வி எழுப்பினார். 2010 டிசம்பர் மாதம் காங்கிரஸ் - திமுக கூட்டணி தான் நீட் தேர்வை கொண்டு வந்தது என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்து பேசினார் முதல்வர் ஸ்டாலின். அவர் பேசுகையில்,

நீட் நடுநிலையான தேர்வு முறை அல்ல என்பது நீதிபதி ராஜன் குழு அறிக்கையின் மூலம் தெளிவாகிறது. நீட் தேர்வு மூலம் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கனவுகள் தகர்ந்து உள்ளன.

சிறப்புப் பயிற்சி பெறக்கூடிய பொருளாதார வலுப்பெற்ற வகுப்பினருக்கு ஆதரவாகத் தான் நீட் உள்ளது. சமூக நீதியை உறுதிசெய்யவும் சமத்துவம் மற்றும் சம வாய்ப்பை நிலைநிறுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நீட் தேர்வு மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்று பரிந்துரைப்பது போலியானது. கல்வியின் தரம் என்பது மாணவர் சேர்க்கையின் மூலம் பேணப்படுவதில்லை.

திமுகவைப் பொருத்தவரை ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நுழைவுத் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்ததும் திமுக தான். தற்போது ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த நுழைவுத் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு பெறும் வகையில் சட்ட மசோதா இருக்கும்.

மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவ படிப்பிற்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஏதுவாக, வலிமையான சட்டமுன் வடிவை முன்மொழிகிறேன். எனவே இந்த மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்று தெரிவித்தார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: