வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

காலம் தாழ்த்தும் திமுக., தந்திரம்; காலை வார தயாராகும் காங்.,

DMK, Congress, TN election, காங்கிரஸ், திமுக
dhinalaral : எந்த நேரத்திலும் கூட்டணியில் இருந்து, தி.மு.க., கழற்றி விடக்கூடும் என்ற பதற்றம் தெரிகிறது, காங்., தலைவர்களிடம். 'லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு நாம், 10 தொகுதிகளை கொடுத்தது தப்பு. காங்கிரசை கழற்றி விட்டிருந்தாலும், தி.மு.க., அமோகமாக ஜெயித்திருக்கும்' என, கட்சிக்காரர்களுடன் உதயநிதி பகிர்ந்து கொண்ட தகவல், தமிழக காங்., தலைவர்களை சூடாக்கி விட்டது. சட்டசபை தேர்தல் அறிவிப்பு நெருங்கி வரும் சூழலில், கூட்டணி தொடர்பாக, இதுவரை காங்கிரசில் யாரையும், தி.மு.க., தரப்பு அழைத்து பேசவில்லை. இதனால் அவர்களுக்கு, தி.மு.க., தலைமை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 'சும்மா சந்தேகம் வரலைங்க. காரணம் இருக்கு' என்றார், ஒரு மேலிட நிர்வாகி. 'புதுச்சேரியில், தி.மு.க, ஆதரவுடன், காங்., ஆட்சி நடக்கிறது. தேவையே இல்லாமல், அங்கே ஜெகத்ரட்சகன் எம்.பி.,யை, தி.மு.க., வின் முதல்வர் வேட்பாளராக சித்தரித்தனர்.

அவரும் பந்தாவாக, புதுச்சேரி, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார். 'பிரமாண்டமாக ஏற்பாடு செய்த, அந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும், ஜெகத்ரட்சகனை முன்னிறுத்தி, புதுச்சேரியில், தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும் என, பேசினர். 'அவர்களுக்கு உற்சாகம் அளித்தார் ஜெகத்ரட்சகன். பிரச்னை பெரிதாகி, சோனியா டில்லியில் இருந்து ஸ்டாலினிடம் விசாரித்த பிறகு தான், அதை கைவிட்டனர்' என, சமீபத்திய சம்பவத்தை நினைவுபடுத்தினார் அவர். உடன் இருந்த மற்றொரு தலைவர் தொடர்ந்தார்...

'அன்னைக்கு விழுந்த கீறல் அப்படியே இருக்குங்க... பீஹார் சட்டசபை தேர்தல், 'ரிசல்ட்' வந்தப்பவே, காங்கிரஸ் இனிமே கதைக்கு ஆகாதுன்னு, தி.மு.க., மேலிடத்துல பேசினதா எங்களுக்கு தகவல் வந்துச்சு. போன தடவை கொடுத்த, 41 இப்பவும் கேப்பாங்க; ஆனா, 15க்கு மேல கொடுக்கக் கூடாதுன்னு பேசிகிட்டாங்களாம். அதைத்தான் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். 'குறைவான, 'சீட்'களை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு நாங்கள் வர வேண்டும் என்பது தான், அவர்கள் நோக்கம். இதை, எங்கள் கட்சி மேலிடத்துக்கு தெரிவித்து விட்டோம்' என்றார்.

பத்து ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத, தி.மு.க.,வுக்கு தான், இந்த தேர்தல் வாழ்வா... சாவா போராட்டம். எனவே, கூட்டணி கட்சிகளை அது தான் அரவணைத்து செல்ல வேண்டும். காங்கிரசை பொறுத்தவரை, எத்தனை சீட்களில் போட்டியிட்டாலும், எத்தனை இடங்களில் தோல்வி அடைந்தாலும் பிரச்னை இல்லை. ஏனென்றால், இழப்பதற்கு ஒன்றும் இல்லை என, பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் கருதுகின்றனர்.

எனவே, தி.மு.க., கழற்றி விட்டால், தனியாகவோ அல்லது கமல் போன்ற யாருடனோ சேர்ந்து தேர்தலை சந்திக்க, காங்கிரஸ் தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒருவேளை கூட்டணி பங்கீடெல்லாம் சுமுகமாக முடிந்தாலும், இந்த அதிருப்தி சீக்கிரம் விலகாது. ஒருவரை ஒருவர் காலை வாரும் சம்பவங்கள் நடக்கலாம்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: