புதன், 10 பிப்ரவரி, 2021

குட்கா கொண்டுவந்த வழக்கு- உரிமை குழுவின் நோட்டீசை ரத்து செய்தது ஐகோர்ட்

malaimalar : சென்னை: தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. என்றாலும் தடையை மீறி பல்வேறு இடங்களில் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபையின் கூட்டத்தொடரில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தமிழகத்தில தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டி அவற்றை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபைக்குள் கொண்டு சென்றனர். அவர்களது செயல் உரிமை மீறல் என்று கூறி பேரவை உரிமை மீறல் குழு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் விதிமுறைகளைப் பின்பற்றி புதிய நோட்டீசை அனுப்ப விரும்பினால், அனுப்பலாம் என்று உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு புதிய நோட்டீசை உரிமை மீறல் குழு அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்து வந்தார்.

நேற்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் தலைமை வக்கீல் விஜய் நாராயணன், தமிழக அரசின் சிறப்பு வக்கீல் ஏ.எல். சோமயாஜி ஆகிய இருவரும் ஆஜராகி வாதாடினார்கள்.

மனுதாரர்களின் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ மற்றும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணா புதன்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி இன்று (புதன்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மற்றும் கு.க.செல்வம் எம்.எல்.ஏ. ஆகிய 19 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் குழுவின் நோட்டீசை ரத்து செய்வதாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தீர்ப்பு அளித்தார்.

தி.மு.க. தரப்பில், ‘‘உரிய காரணங்கள் இன்றி சபாநாயகர் பரிந்துரை செய்ததை அடிப்படையாகக் கொண்டு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதை நீதிபதி ஏற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்கி உள்ளார்.

கருத்துகள் இல்லை: