ஞாயிறு, 20 அக்டோபர், 2019

ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமித் ஷாவை தெரியுமா?: சரத் பவார்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமித் ஷாவை தெரியுமா?: சரத் பவார்மின்னம்பலம் : மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் (அக்டோபர் 19) முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று, அனைத்து உயர்மட்ட தலைவர்களும் நட்சத்திரப் பிரச்சாரகர்களும் வாக்காளர்களைச் சென்றடைய சூறாவளி சுற்றுப்பயணங்கள், பேரணிகள் மேற்கொண்டனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 21ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காணும் நிலையில், பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் கைகோத்து தேர்தலைச் சந்திக்கின்றன.

இதேபோல் 90 தொகுதிகளைக்கொண்ட ஹரியானாவிலும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆளும்கட்சியான பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஹரியானா மாநிலம் சிர்சா, ரேவாரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை அடுத்து, பாரமதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை (அக்டோபர் 21) நடைபெற இருக்கிறது. தேர்தலை அடுத்து அங்கு பிரதமர் உட்பட பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரமதி தொகுதியில், அஜித் பவாருக்கு வாக்கு சேகரித்த சரத் பவார், “நான் உங்களிடம் கேட்கிறேன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அமித் ஷா என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மக்களுக்கு பெயரே தெரியாத ஒருவர், அவரது பங்களிப்பு இந்த நாட்டுக்குத் தெரியாத நிலையில், நான் மகாராஷ்டிராவுக்கு என்ன செய்தேன் என்று கேட்கிறார் அவர்.
முன்னால் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அரசின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்ததற்காக அவர் மீது சில வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல்தான் என் பெயரையும் நான் உறுப்பினராக இல்லாத ஒரு வங்கியை வைத்து என்னையும் வழக்கில் இழுக்கப் பார்க்கின்றனர்” எனக் கூறினார்.
மகாராஷ்டிர கூட்டுறவு சங்கத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகவும் அதில் முன்னாள் முதல்வர் சரத் பவார், அவரது மைத்துனர் அஜித் பவார் மற்றும் முன்னாள் கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் சிலர் மீது கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைக் குறிப்பிட்டுதான் சரத் பவார் மத்திய அரசை சாடியிருக்கிறார்.
சரத் பவார் மேலும் கூறுகையில், “நான் இம்மாதிரி மலினங்களுக்கெல்லாம் அஞ்சுபவனல்ல, என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள். இதை எதிர்கொள்ள எங்களிடமும் சக்தி உள்ளது. இவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் நேரம்தான் இந்தத் தேர்தல். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்” எனக் கூறினார் சரத் பவார்.
தவறான வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தேன்
மழையில் முற்றிலுமாக நனைந்தபடி சரத் பவார், மக்களவையில் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்ததாக சதாராவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேற்கு மகாராஷ்டிராவின் சதாராவில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழையில், பிரச்சார பேரணியில் சரத் பவார் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மழைக் கடவுள் தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) அக்டோபர் 21ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்காக ஆசீர்வதித்திருக்கிறது. மேலும் மழைக் கடவுளின் ஆசீர்வாதத்துடன், மகாராஷ்டிராவில் சதாரா மாவட்டம் ஓர் அதிசயத்தை உருவாக்கும். அந்த அதிசயம் அக்டோபர் 21 முதல் தொடங்கும்.
ஒருவர் தவறு செய்யும்போது, அதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்போது நான் தவறு செய்தேன். இதை நான் பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தவற்றைச் சரி செய்ய, சதாராவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் முதியவரும் அக்டோபர் 21ஆம் தேதிக்குக் காத்திருக்கிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறினார்.
மக்களவைத் தேர்தலில், சிவாஜி மகாராஜாவின் வழித்தோன்றலான உதயன்ராஜே போசலேவை சதாரா நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து என்சிபி நிறுத்தியது. தேர்தலில் சீட்டை வென்ற உதயன்ராஜ் போசலே, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை விட்டு வெளியேறி, பாஜகவில் சேர்ந்தார். இதைக் குறிப்பிட்டு, கொட்டும் மழையிலும் நனைந்தபடி சரத் பவார் செய்த பிரச்சாரம் இந்திய ஊடகங்களில் செய்தியானது.

கருத்துகள் இல்லை: