ஞாயிறு, 27 நவம்பர், 2016

வருமானவரி அறவிட தேவையே இல்லை .. காபரெட் வரிகளை சரியாக வசூலித்தாலே போதும் ! வி.பி.சிங் அன்று கூறியது !



இந்தியாவில் உள்ள பெரிய வணிக நிறுவனங்களிடமிருந்து கார்ப்பரேட் வரியை முறையாக வசூலித்தாலே போதும். வருமான வரித்துறை என்ற துறையே தேவையில்லை என்பது வி.பி.சிங்கின் எண்ணம். அப்போது அவர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்தார். வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்யும் கறுப்புப் பண முதலைகளின் பட்டியலைத் தயாரித்தார். நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்ததுடன், அதைத் தீர்ப்பதற்கான அறுவை சிகிச்சையையும் வி.பி.சிங் மேற்கொண்டார். வரி ஏய்ப்புக்காரர்களுக்கு சொந்தமான இடங்களை சோதனையிடுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். அதன் தலைவராக இருந்த பூரேலால் என்ற நேர்மையான அதிகாரி, நிதியமைச்சர் வி.பி.சிங்கின் நடவடிக்கைகளுக்குத் துணை நின்றார். வரி ஏய்ப்பவர்களில் முதலிடத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தது. அதுபோலவே இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பெயரும் வரி ஏய்ப்புப் பட்டியலில் முன்னணியில் இருந்தது. அமிதாப் அப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருந்தார்.

ராஜீவ் காந்தியின் குடும்ப நண்பர். இந்த செல்வாக்கு பற்றியெல்லாம் கவலைப்படாமல் அம்பானிக்கு சொந்தமான இடங்களிலும் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

கிர்லோஸ்கர் என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கு கைவிலங்கும் போடப்பட்டது. இந்தியாவின் எளிய மக்கள் தங்களுக்கு சொந்தமாக ஒரு குடிசையில் வாழ்ந்தாலும் கட்டாயமாக சொத்து வரி வசூலிக்கப்படும் நிலையில், கறுப்புப் பண முதலைகளை ஏன் விட்டு வைக்க வேண்டும் என நடவடிக்கை எடுத்த வி.பி.சிங்குக்கு கிடைத்த உடனடிப் பரிசு, இலாகா மாற்றம். அவரை நிதியமைச்சர் பதவியிலிருந்து பாதுகாப்புத்துறைக்கு மாற்றினார் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி. பாதுகாப்புத் துறைக்கு வி.பி.சிங் பொறுப்பேற்ற பிறகுதான் போஃபர்ஸ் பீரங்கி ஊழல், நீர்மூழ்கி கப்பல் ஊழல் போன்றவற்றை வெளியே கொண்டு வந்தார்.

1989ல் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, 11 மாதங்கள் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். தன் அரசியல் வாழ்வில் கிடைத்த பதவிகள் மூலம் எளிய மக்களுக்குத் தோழனாகவும், அரசாங்கத்தை ஏய்ப்போருக்கு சவாலாகவும் விளங்கிய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாள் (நவ.27). சென்னை ஆவடியில் உண்மை வாசகர் வட்டம் நிகழ்வில் வி.பி.சிங் பற்றி நிகழ்த்திய உரையின் காணொளி இணைப்பு முகநூல் பதிவு  கோவி லெனின்

கருத்துகள் இல்லை: