வெள்ளி, 3 ஏப்ரல், 2015

பாஜக பெண் கவுன்சிலர்: சும்மா அடிச்சோம்ல செத்துட்டாரு..கோவையில் வத்சலாக்காவா கொக்கா!

கோவை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவை, துடியலூர் கவுன்சிலர் வத்சலா, தனது வாக்குமூலத்தில் ‘தொழில் ரீதியாக நடந்த கொடுக்கல், வாங்கல் காரணமாகவே ஜிம் ஆறுமுகத்தைத் தாக்கியதாகவும், ஆனால் அவர் உயிரிழப்பார் என எதிர்பார்க்கவில்லை' எனவும் தெரிவித்ததாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள செங்காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற ஜிம் ஆறுமுகம் (51). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏற்கனவே இவர் மீது நிலம் அபகரிப்பு, அரிசி ஆலை உரிமையாளரிடம் மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு கிரிமினல் வழக்குகள் அவினாசி, திருப்பூர், கோவை போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. எனவே, ஜிம் ஆறுமுகத்தின் பெயரைப் போலீசார் ரவுடிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் ஆறுமுகத்தை கோவை மாநகராட்சி துடியலுார் 1வது வார்டு பாஜக கவுன்சிலர் வத்சலா, அவரது கணவர் மேலும் சிலரோடு சேர்ந்து தனது இல்லத்தில் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தார்.
சம்பவத்தன்று ஆறுமுகத்தோடு பசுபதி என்பவரும் வத்சலா வீட்டிற்குச் சென்றுள்ளார். பசுபதி காரிலேயே அமர்ந்திருக்க ஆறுமுகம் மட்டும் வத்சலாவைக் காண உள்ளே சென்றுள்ளார். பசுபதி அளித்த புகாரின் பேரில் கவுன்சிலர் வத்சலா, அவரது கணவர் வரதராஜ், உதவியாளர் இளங்கோவன் உட்பட பி.ஜே.பி நிர்வாகிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கவுன்சிலர் வத்சலா, இளங்கோவன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆறுமுகம் அடித்துக் கொல்லப்பட்டபோது நடந்த சம்பவங்கள் குறித்து பசுபதி கூறுகையில், ‘26-ம் தேதி நானும் மாமாவும் வத்சலா வீட்டுக்குப் போனோம். நான் கார்லயே இருந்தேன். மாமா மட்டும் அவங்க வீட்டுக்குள்ள போனார். கொஞ்சநேரத்துல மாமா அலர்ற சத்தம் கேட்க, கார்ல இருந்து இறங்கிப் போய் பார்த்தேன். அப்போ மாமா அலறிகிட்டே ஓடிவந்தார். அவரை கவுன்சிலர் வத்சலா, அவரோட கணவர் வரதராஜன் உள்ளிட்ட சிலர் இரும்புக் கம்பியோட துரத்திட்டு வந்தாங்க. அப்போ என் மாமாவைப் பார்த்து, 'இவன் கதையை முடிச்சுடுங்க'னு கவுன்சிலர் சத்தம் போட்டார். அதுக்குள்ள சிலர் என் மாமாவை இரும்புக் கம்பியாலும் கையாலும் அடிச்சாங்க. நான் வர்றதைப் பார்த்துட்டு எல்லோரும் ஓடிட்டாங்க. உடனே ஆட்டோவுல மாமாவை பக்கத்துல இருக்குற ஆஸ்பிட்டலுக்குக் கொண்டு போனேன். ஆனா, ஏற்கெனவே மாமா இறந்துட்டதா டாக்டர் சொன்னாங்க. மேலே என்ன நடந்துச்சு? எவ்வளவு பணம் கொடுக்கணும்னு எல்லாம் எனக்குத் தெரியலை. ஆனா அவங்க அடிச்சது எனக்குத் தெரியும்' எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட வத்சலா, ''தொழில் ரீதியா கொடுக்கல், வாங்கல் சம்பந்தமா சிலர் என்னைப் பார்க்க வர்றாங்க. அப்படி வந்தவர்தான் ஆறுமுகம். அவருக்கும் எனக்கும் கொடுக்கல், வாங்கல் இருந்தது. நான் அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. பணம் கொடுக்க முடியாம போக என்னை மிரட்டினார். ரொம்ப மோசமா என்னை மிரட்டினதால அவரை வரவழைச்சு, அடிச்சு உதைச்சு மிரட்டி அனுப்பலாம்னு முடிவு பண்ணினேன். அதற்குத்தான் 26-ம் தேதி வீட்டுக்கு வரச்சொன்னேன். அப்பவும் பணம் கேட்டு என்னை மிரட்டினார். அதுல ஏற்பட்ட தகராறுலதான், நான், என் கணவர், இளங்கோவன் எல்லோரும் சேர்ந்து இரும்புக் கம்பியால அடிச்சோம். அவரு சாவாருன்னு நாங்க எதிர்பார்க்கலை!'' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆறுமுகம் மீதான இந்தத் தாக்குதல் எதிர்பாராமல் நடந்ததல்ல முன்கூட்டியே திட்டமிடப்பட்டது தான் என்றும், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இக்கொலையை வத்சலா செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஆறுமுகம் கொல்லப்பட்டதற்கு பின்னணியில் கொடுக்கல், வாங்கலையும் தாண்டி வேறு காரணம் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக துடியலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் கூறுகையில், ''பாஜக மாவட்ட பிரமுகர் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் அங்கிருந்தனர்னு சொல்றாங்க. ஆனா அதை உறுதிப்படுத்த முடியலை. ஆதாரத்துடன் அவங்க இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுச்சுனா அவங்க மேலயும் நடவடிக்கை எடுப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.  Read more a/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: