ஞாயிறு, 20 ஜூலை, 2014

சதுரங்க வேட்டை ! தமிழ் ரசிகர்களுக்கு சலஞ்சிங்கான வேட்டைதான்

வித்தியாசமான முயற்சிகள் எப்போதும் தோற்பதில்லை. சமீபமாக பல திரைப்படங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அப்படி எதிர்பார்க்காமல் ஆச்சரியப்படுத்தும் படமாகவே இருக்கிறது சதுரங்க வேட்டை. பெரிய ஸ்டார்களை நம்பாமல் திரைக்கதையின் வேகத்தை மட்டுமே நம்பி உள்ளார் அறிமுக இயக்குனர் ஹெச்.வினோத். என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பை படத்தின் இறுதிக் காட்சி வரையில் தக்க வைத்திருப்பது இயக்குனரின் அபாரத் திறமையைக் காட்டுகிறது. வாழ்க்கையில் பணம் மட்டும் போதும் என்று நினைக்கிற மனிதன். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய நினைக்கும் ஒருவன். பல பித்தலாட்டங்களை செய்து மக்களை ஏமாற்றுகிறான்.
மிகவும் அறிவுப் பூர்வமாக செயல்படும் அவன், மக்களிடம் பல பொய்களை சொல்லி பல வியாபாரங்களை செய்கிறான். ஏமாற்றுவது அவன் தவறா? ஏமாறுவது நம் தவறா? என்ற நியாமனா கேள்வியை படம் முழுக்க பரவவிட்டிருக்கிறார் இயக்குனர். ‘நான் ஏமாற்றவில்லை, மக்கள் ஏமாறுவதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறேன், இது என் தவறு அல்ல’, ‘நல்லவனா இருந்தா செத்த பிறகு சொர்கத்துக்கு போகலாம், பணம் இருந்தா வாழும்போதே சொர்க்கத்தைப் பார்க்கலாம்’ என்ற வசனங்கள் ரசிக்க வைப்பதைவிட சிந்திக்க வைக்கிறது. ஒருவன் இவ்வளவு கெட்டவனாக இருக்க முடியுமா என்ற ஆச்சரியத்தையும் கொடுக்கிறது.

பணம் என்றாலோ இலவசம் என்றாலோ வாயைப்பிளக்கும் மக்கள் இருக்கும் வரை இப்படியான மனிதர்கள் இருப்பார்கள் என்பது தானே நிஜம்! பாத்ரூமில் பிடித்த தண்ணீரை பாடில்களில் நிரப்பி இது அமெரிக்காவின் ஏரியில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் என்றும் இதன் ஒரு துளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் கேன்சர் தீரும், உடல் நடுக்கம் வராது, நரம்புத் தளர்ச்சி குணமாகும் என்று ஏகத்துக்கும் ரீல் விட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அடுத்து ஈமு கோழி பிஸ்னஸ், எம்.எல்.எம் கம்பேனி, பெரிய மண்புழுவை பாம்பு என்று சொல்லி பல லட்சங்களுக்கு விற்பது என ஃப்ராடு வேலைகள் தொடர்கிறது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று சொல்வதற்கு ஏற்ப போலிசில் சிக்குகிறார் ஹீரோ நட்டி.
ஒரு அக்யூஸ்ட் தப்பிக்க வழிகளா இல்லை. கொடுக்க வேண்டிய இடத்தில் வேண்டியதைக் கொடுத்து பல கவனிப்புகளை மேற்கொள்கிறார்கள் நட்டியின் ஆட்கள். சின்சியர் ஆஃபீசர்கள் சிலர் இருந்தாலும் அதையும் மீறி அரசியல் செல்வாக்கு தானே பல இடங்களிலும் பலவற்றையும் பேசும். நட்டி வெளியே வருகிறார்.
ஏமாற்றப் பட்டவன் ஒருவனால் துறத்தப்படுகிறார். கொள்ளையடித்த பணத்தை எல்லாம் கூட்டாளிகள் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். மீண்டும் பணத்திற்காக புதுப் புது ஐடியாக்களை அப்ளைப் பண்ணும் நட்டி எப்படி சுத்தமான மனிதராக மாறினார் என்பது படத்தின் முடிவு. சதுரங்க வேட்டையில் திரைக்கதை குதிரை வேகத்தில் பறக்கிறது. நட்ராஜ் தன் நடிப்பால் ஒவ்வொரு காட்சியையும் விறுவிறுப்பாக்குகிறார். கலசத்தைப் பற்றி அந்த குவாரி ஓனரிடம் கதை விடுகிறாரே... அப்பா! மனிதருக்கு அபாரத் திறமை இருப்பது அந்தக் காட்சியில் தான் தெரிகிறது. பணத்தையெல்லாம் விட்டுவிட்டு,
வெறும்கையோடு தன் ஆசை மனைவியை பார்க்க வரும் க்ளைமாக்ஸ் காட்சி கவிதையாகவே இருக்கிறது. ஹீரோயின் இஷா நாயரின் பிரசவக் காட்சியில் ஒரு அண்ணனாக அவரைத் தூக்கி சுமக்கும் வில்லன் இதயத்தை உருக வைக்கிறார். பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. நட்டியின் ஃப்ளாஷ்-பேக் காட்சி இயல்பாக போகிற போக்கில் சொல்வது வித்யாச அனுபவம். இப்படத்தை வாங்கி வெளியிட்ட ’திருப்பதி பிரதர்ஸ்’ லிங்குசாமிக்கும், தயாரித்த இயக்குனர் மனோபாலாவுக்கும் பாராட்டுகள். சதுரங்க வேட்டையின் வெற்றி அவர்களுக்கு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. சதுரங்க வேட்டை - சாகசத் திரைக்கதை!

கருத்துகள் இல்லை: