புதன், 18 செப்டம்பர், 2013

மிஸ் அமெரிக்காவாக தேர்வான இந்திய வம்சாவளி பெண் நீனா !

நியூ ஜெர்சி::அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி
பெண் நீனா, அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பார்ப்பதற்கு தீவிரவாதி போல இருப்பதாகவும், அமெரிக்காவை விட்டு வெளியேறும்படியும் டுவிட்டரில் சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதனால் பரபரபரப்பு ஏற்பட்டுள்ளது.மிஸ் அமெரிக்கா 2014 அழகி போட்டி நியூ ஜெர்சி மாநிலத்தின் அட்லான்டிக் நகரில் நேற்று நடந்தது. இதில் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களை சேர்ந்த 53 அழகிகள் கலந்து கொண்டனர். மிஸ் நியூயார்க் அழகியான நீனா தவுலூரியும் கலந்து கொண்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரது தந்தை அமெரிக்காவில் டாக்டராக உள்ளார். போட்டியின் முடிவில் மிஸ் அமெரிக்காவாக நீனா தேர்ந்தெடுக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டார். இந்நிலையில், டுவிட்டரில் நீனா குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை சிலர் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பெண்ணை எப்படி மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுத்தார்கள் என்று ஒருவரும், நீனா ஒரு வழிப்போக்கர், அவரது முகத்தை பார்ப்பதற்கு தீவிரவாதி போல அச்சுறுத்தலாக உள்ளது என்று மற்றொருவரும் கூறியுள்ளனர். பயங்கரவாதி போல உள்ள நீனா, அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று இன்னொருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீனா கூறுகையில், என்னை பற்றி சமூக இணையதளத்தில் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்பி உள்ளனர். மிஸ் நியூயார்க் அழகியாகவும், மிஸ் அமெரிக்கா அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை: