வியாழன், 19 செப்டம்பர், 2013

Muzaffarpur Riots பாஜக மற்றும் மாயாவதி கட்சியினருக்கு பிடிவாரன்ட்


உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில்
அண்மையில் நடந்த கலவரம் தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 16 பேரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
முசாஃபர்நகர் மாவட்டத்திலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் ஏற்பட்ட வகுப்புக் கலவரத்தில் 47 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் இப்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. காதிர் ராணா, அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நூர் சலீம், மெüலானா ஜமீல், பாஜக எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், பர்தேந்து சிங், காங்கிரஸ் தலைவர் சயீத் உஸ்மான் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்பட 16 பேரை கைது செய்ய முசாஃபர்நகர் நீதிமன்றம் புதன்கிழமை வாரண்ட் பிறப்பித்தது.

கலவரத்தின்போது முசாஃபர் நகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதற்காகவும், மாவட்டத்தில் நடந்த பல்வேறு கூட்டங்களில் (மகா பஞ்சாயத்து) வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காகவும் இவர்கள் தேடப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். எனினும் இதுவரை இவர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் இன்னும் 2 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் கூறினர். மேற்கண்ட 16 பேரையும் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மூத்த காவல்துறை எஸ்.பி. பிரவீண்குமார் கூறுகையில், ""கலவரம் தொடர்பாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்துள்ளோம். சில சாட்சியங்கள் கிடைத்துள்ளன. மேலும் பல சாட்சியங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். தவறு செய்தவர்கள் இன்னும் 2 நாள்களில் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.
அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மாநில சட்டப்பேரவையில் பேசுகையில், ""இந்தக் கலவரமானது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும். நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஓரு கட்சி அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இக்கலவரம் நிகழ்த்தப்பட்டது'' என்று குற்றம்சாட்டினார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, மாநிலத்தின் சூழலைக் கெடுக்க பாஜக முயற்சிப்பதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக எம்.எல்.ஏ. விளக்கம்
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கூறுகையில், ""என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. உண்மைக்கு அப்பாற்பட்டவை. சமூகத்தின் ஒரு பிரிவினரைத் திருப்திப்படுத்தவே என் மீது அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. நடந்த கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். நானும், மற்ற எம்எல்ஏக்களும் கைதாகத் தயாராக இருக்கிறோம்.
ஆனால், அரசு சரியான முறையில் செயல்பட்டு, உண்மையை நிலைநாட்ட வேண்டும். வன்முறையைத் தூண்டும் வகையில் நான் பேசியதாக என் மீது குற்றம் சாட்டியுள்ளார்கள். அப்படியானால் அதற்கான சி.டி. ஆதாரத்தை அவர்கள் (அரசு) வெளியிட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
ஜும்மா மசூதி இமாம் கைது
கலவரப் பகுதிகளைப் பார்வையிட முசாஃபர்நகர் மாவட்டத்துக்குள் நுழைய முயன்ற தில்லி ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் சயீத் அகமது புகாரியை காஸியாபாதில் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது, கலவரம் தொடர்பாக மாநில அமைச்சர் அசம் கானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சயீத் அகமது புகாரி கோரிக்கை விடுத்தார். செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
முஸ்லிம் சமுதாயத்துக்காக ஆஸம் கான் எதுவும் செய்துவிடவில்லை. வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார். அவர் நடந்துகொண்ட விதம் காரணமாகத்தான் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டது. எனவே, கட்சித் தலைவர் முலாயம் சிங் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் சயீத் அகமது புகாரி.
தவறு இருந்தால் தண்டனை கொடுங்கள்
மாநில அமைச்சர் அசம் கான், செய்தியாளர்களிடம் கூறுகையில், ""முசாஃபர்நகரில் கலவரத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு அரசியல் நெருக்கடிதான் காரணம் என்று 2 போலீஸ் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். ஆனால், இந்த விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எனவே நான் எந்த விளக்கமும் அளிக்கத் தேவையில்லை. என் மீது தவறு இருந்தது நிரூபணமானால், எந்தவித தண்டனையையும் ஏற்க நான் தயார்'' என்றார்.
உமாபாரதி சவால்
சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக மூத்த தலைவர் உமாபாரதி தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் தொண்டர்களும் பெருமளவில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்களை முடிந்தால் கைது செய்யுமாறு சமாஜவாதி அரசுக்கு உமாபாரதி சவால் விட்டார். ""இந்த விஷயத்தில் கைது நடவடிக்கையை காவல்துறை முன்னெடுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும். உரிய புலன்விசாரணை நடத்தப்படாமல் யாரும் கைது செய்யப்படக் கூடாது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய குற்றச்சாட்டின் கீழ் கைது நடவடிக்கை எடுப்பதானால், உத்தரப் பிரதேச அமைச்சர் ஆஸம் கானையும் கைது செய்ய வேண்டும்'' என்று உமாபாரதி ஆவேசத்துடன் கூறினார். தினமணி.com

கருத்துகள் இல்லை: