சனி, 3 டிசம்பர், 2011

நெரிசல் பலிகளை நிறுத்த முடியாத கடவுள்! பக்தர்கள் சிந்திப்பார்களா?

நவம்பர் 9-ம் தேதி உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்வாரில், ஆசிரமம் ஒன்றில் நடந்த யாக பூஜையில் கலந்து கொள்ளச் சென்ற பக்தர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 16 பேர் பலி..!
  • 2008-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ராஜஸ்தானின் சாமுண்டா தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் 250 பக்தர்கள் பலி..!
  •  ஆகஸ்டு 2008-ல் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள நைனா தேவி கோயில் ஏற்பட்ட நெரிசலில் 160க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலி..!
  • ஜனவரி 2005-ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் நடந்த வோய்த் திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் 350 பக்தர்கள் பலி…!
  • கடந்த ஜனவரியில் சபரிமலையில் ஏற்பட்ட நெரிசலில் 104 பேர் பலி..!
கடந்த பத்தாண்டுகளில் நடந்த பல்வேறு கோயில் திருவிழாக்களில் ஏற்பட்ட நெரிசல்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலிருக்கும் என்கின்றன பத்திரிகைச் செய்திகள். இங்கே மட்டுமல்லாமல் உலகெங்கும் மக்கள் கூடும் பல்வேறு மதத் திருவிழாக்களில் ஏற்பட்ட நெருக்கடிகளில் சிக்கிச் செத்துப்போனவர்கள் பற்றிய செய்திகளை நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள்.
ஒவ்வொரு முறை இவ்வாறான ‘விபத்துகள்’ நடந்த பின்னும் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்காத அரசை உண்டு இல்லை என்று கிழித்துத் தொங்கப் போடும் ஊடகங்கள், தன்னை நம்பி வந்த பக்தர்களை அம்போவென்று கைவிட்ட கடவுளைக் கேள்வி கேட்டதில்லை. அரசு மருத்துவமனைகளைத் தீராத நோயில் வீழ்த்தி அப்பாவி மக்கள் பலரின் உயிரைக் காவு வாங்கிய அரசிடம், மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை சீர்படுத்த வேண்டுமென்று இது வரை கேட்டேயிராத வாய்கள் தான் ‘சபரிமலைக்குச் செல்லும் சாலைகள் சரியில்லை’ என்று காரணங்களைப் பீராய்கின்றன.
லேசாகப் பெய்த தூரல் மழைக்குக் கூட தாக்குப் பிடிக்காத சாலைகளை அமைத்து மக்களை பாள்ளத்தாக்குகளுக்குள் பயணிக்க விட்டிருக்கும் அரசு கோயில்களுக்கு ஒழுங்கான சாலைகள் அமைக்க வேண்டுமென்று கேட்கின்றன ஊடகங்கள். மக்களின் வாழ்வியல் அழுத்தங்களையும் துன்ப துயரங்களையும் மக்களை ஆளும் இந்த அரசமைப்பு முறையால் தீர்க்கவியலாத கையாலாகாத்தனம் தானே அவர்களை கோயில் குளங்களை நோக்கி விரட்டியடிக்கின்றன? அவ்வாறிருக்க, தன்னைத் தேடி வரும் பக்தர்களின் தேவைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பிரதான கடமை கடவுளுக்கல்லவா இருக்கிறது? கேள்வி கேட்பதானால் முதலில் கடவுளையல்லவா கேட்டிருக்க வேண்டும்.
நாங்கள் ஒன்றும் கடவுளின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடவில்லை. பையனுக்கு என்ஜினியரிங் சீட்டு வேண்டும், பொண்ணுக்கு நல்ல வரன் வேண்டும், ஊருக்குப் போக ட்ரெயின் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்பதில் தொடங்கி வைகுண்டத்திலோ கைலாயத்திலோ பரலோகத்திலோ துண்டு போட்டு சீட்டுப் பிடித்துக் கொடுக்கும் வல்லமையும் ஆற்றலும் கொண்டவர் தான் கடவுள் என்பதை பக்தர்களைப் போலவே நாங்களும் நம்பத் தடையாய் இருப்பது ஒன்று தான். இத்தனை வல்லமையும் ஆற்றலும் சக்தியும் கொண்ட அய்யப்பன் தன்னை நாடி வரும் அப்பாவி பக்தர்களின் உயிர்களைக் ஏன் காப்பாற்ற வரவில்லை? பக்தர்களுக்காவது கல்லும் முள்ளும் கொண்ட நடை பயணம் – அய்யப்பனுக்கோ புலியின் மீதல்லவா பயணம்?
சென்றமுறை சபரி மலை நெருக்கடியில் தனது நெருங்கிய உறவினரை பலி கொடுத்த நண்பர் ஒருவர், செத்துப் போனவருக்கு கட்டாயம் மோட்சத்தில் இடம் கிடைத்திருக்கும் என்று புல்லரிப்போடு பேசிக் கொண்டிருந்தார் – இத்தனைக்கும் இறந்தவர் ஏரியாவில் ஒன்னாம் நெம்பர் பொறுக்கி. பொறுக்கியாய் இருந்தாலும் சரி நல்லவனாய் இருந்தாலும் சரி – மலையில் செத்துப் போனால் அவர்களும் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்பதை நாங்கள் மனதார நம்பவே விரும்புகிறோம்.
ஆனால், லோக்கல் பாமரனுக்கு கூட வாய்க்கும் இந்த பாக்கியம்  மன்மோகனுக்கோ சிதம்பரத்துக்கோ அம்பானிக்கோ வாய்க்காமலிருக்கிறதே என்பது தான் எமது ஆச்சரியம். மகாமகக் குளத்தில் உடன்பிறவா சகோதரிகள் தண்ணீரில் குளிக்க, குளத்தின் கரையில் சாமானிய பக்தர்கள் ரத்தத்தில் குளிக்க நேர்ந்த அவலத்தின் காரணம் யாதோ? ஆன்மீக அன்பர்கள் யாரேனும் இதற்கு பதிலளித்தால் நாங்களும் தெளிவு பெற்றுக் கொள்வோம்.
தேர்தலுக்கு முன் நூற்றுக்கணக்கான யாகங்கள் மூலம் முப்பத்து முக்கோடி தேவர்களையும் முற்றுகையிட்டுத் தாக்குதல் தொடுத்த ஜெயாவின் வேண்டுதல்களுக்கு செவி சாய்த்து வெற்றியைப் பரிசளிக்கும் கடவுள் தேர்தல் வெற்றிக்குப் பின் அப்பாவி பக்தனிடம் அம்மா அடிக்கும் பிக்பாக்கெட்டைத் தடுத்து நிறுத்த முடியாததன் மர்மம் என்னவோ யாமரியோம் பராபரமே!
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நீக்கமற நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல இறைவன் விவசாயம் பொய்த்து கடன் கழுத்தை நெறிக்க மனம் நொந்து பூச்சிக் கொல்லி மருந்து புட்டியைத் திறக்கும் விவசாயி வீட்டுக்குள்ளும் ‘நிறைந்திருப்பான்’ என்று ஆன்மீக அன்பர்களைப் போலவே நாமும் நம்பத் தயார் தான் – ஆனால், அங்கே அவர் அந்தச் சாவுகளைத் தடுக்காமல் எதைக் கழட்டிக் கொண்டிருந்தார் என்பதைத் தெரிவித்தார்களென்றால் நம்புவதற்கு வசதியாய் இருக்கும்.
மனம் கல்லாய்ப் போன மனிதர்களால் கடவுள் கல்லானாரா அல்லது கடவுளே வெறும் கல்லென்பது தெரிந்திருப்பதால் தான் ‘பெரிய’ மனிதர்களின் மனங்கள் கல்லாய்ப் போனதா? கருவறைக்குள்ளேயே கள்ளக்காதலிகளோடு கூத்தடித்த தேவநாதனும் கருவறை முன்னேயே சங்கரராமனைப் போட்டுத் தள்ளிய காஞ்சி சுப்புணியும் பின்னது தான் உண்மையாயிருக்க வேண்டுமென்பதை மெய்ப்பித்திருக்கிறார்கள். நெரிசல்களில் செத்துப் போனது பக்தர்கள் மட்டுமல்ல – கடவுளும் தானென்பதை யாக பலத்தோடு அதிகாரத்தைப் பிடித்து மக்களின் தாலியறுக்கத் துணிந்த ஜெயாவின் நடவடிக்கை காட்டுகிறது.
மதம் மக்களுக்கு அபினி என்ற மார்க்ஸ் அதைத் தொடர்ந்து அதுவே இதயமற்ற உலகின் இதயமாக உள்ளது என்கிறார். தம்மை நாளும் நாளும் வாட்டி வதைக்கும் இகலோகத் துன்பங்களினின்றும் தப்பி ஆறுதல் தேட பரலோகத்தின் அருளை வேண்டிக் கூடும் அப்பாவி பக்தர்களின் ஆன்மீக அவலம் புரிந்து கொள்ளக் கூடியதே. இருளில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடும் அந்தப் பாமரத்தனம் ஒரு கையறு நிலை. ஆனால், அந்த இருளின் சொந்தக்காரர்களாயும் தூதர்களாயும் விளங்கும் இந்த அமைப்பு முறையையும் ஆளும் கும்பலையும் எதிர்த்துப் போராடி முறியடிப்பதே இந்தத் துன்ப துயரங்களினின்றும்  இறுதி விடுதலையைப் பெற்றுத் தருமென்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் நாளில் சபரி மலையை மொத்தமாக இழுத்து மூடச் சொல்லி விட்டு ஊருக்குள் போட்ட ரோடு ஏன் ஒரு மழையில் காணாமல் போகிறது என்கிற குரலை எழுப்புவார்கள்.
இதுகாறும், இனியும் நெரிசலில் சிக்கி இறந்து போகும் பக்தர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் நாம் கடவுளுக்கு கல்லறையை கட்டி விட்டு, கடவுளை விட அதிகாரமுடைய இந்த ஆட்சிமுறையை எதிர்த்துப் போராட வேண்டும். புண்ணியத் தலங்களுக்கு போகும் யாத்திரை மறைந்து போராட்டக் களத்துக்கு வரும் பயணம்தான் நமது இகலோக துன்பங்களுக்கு நிவாரணம் தரும். பக்தர்கள் சிந்திப்பார்களா?

கருத்துகள் இல்லை: