வியாழன், 15 பிப்ரவரி, 2024

இலங்கையில் காதலர் தினத்தில் இரண்டு மில்லியன் ரோஜாக்கள் விற்பனை!

 தமிழ் மிரர் : இலங்கையில் காதலர் தினத்தில் இரண்டு மில்லியன் ரோஜாக்கள் விற்பனை!
காதலர் தினமான நேற்று (14ம் திகதி) இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக ரோஜாக்கள் விற்பனை செய்யப்பட்டதாக மலர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டை விட (2023) இந்த ஆண்டு ரோஜாக்களின் விற்பனை 100 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
நேற்றையதினம் பூ விற்பனை நிலையங்களில் சிவப்பு ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை வாங்குவதற்கு அதிகமானோர் வருகை தந்ததாக மலர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூக்கடைகளில் ஒரு ரோஜா ரூ.300 முதல் ரூ.1,000 வரை விற்கப்பட்டது. மேலும், ஒரு கொத்து ரோஜா 3,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டன .


நேற்று மட்டும் ரோஜா விற்பனை மூலம் பூ வியாபாரிகளுக்கு ரூ.1,200 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

ரோஜாக்கள், கொத்து மலர்கள் தவிர, பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ‘டெடி பியர்’களை வாங்க அதிக கிராக்கி இருந்ததாக, அலங்கார டிசைன்கள் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ‘டெடி பியர்’ ஒன்று, 500 முதல் 1,500 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, காதலர் தினத்தன்று, நட்சத்திர வகுப்பு மற்றும் நாட்டில் உள்ள மற்ற ஹோட்டல்களில் பல அறைகளை காதலர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இந்த காதலர்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணிகளும் அடங்குவர் .

இலங்கையில் 15,000 நட்சத்திர வகுப்பு ஹோட்டல் அறைகள் மற்றும் 40,000 மற்ற ஹோட்டல் அறைகள் உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காதலர்களின் தினத்திற்காக சுற்றுலா மற்றும் பிற ஹோட்டல்களில் கூட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. காதலர்களுக்கு விதவிதமான பேக்கேஜ்கள் கூட ஹோட்டல்களால் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: