செவ்வாய், 20 ஜூன், 2023

செந்தில் பாலாஜி: “நாளை அறுவை சிகிச்சைக்குப்பின் அமலாக்கத்துறை என்ன செய்யுமோ...” - மா.சுப்பிரமணியன்

 puthiyathalaimurai.com : கடந்த ஆண்டு மட்டும் 200 கிலோமீட்டர் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய மழை வந்த போதிலும் சென்னையில் உள்ள சுரங்கங்களில் மழைநீர் தேங்காமல் உள்ளது. 26 இடங்களில் மட்டுமே மரங்கள் சாய்ந்துள்ளன. அதுவும், சில மணி நேரத்தில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 90 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கலைஞர் கூடம், திறப்பு விழா நிகழ்ச்சிகள் ஆகியவை இன்று நடைபெற உள்ளன. ஆனால், நீங்கள் சென்னைக்குச் சென்று மழை பாதிப்பை பார்வையிட வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் இன்று ஆய்வு செய்து வருகிறேன். ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை வந்தாலும் அதை தாங்கக் கூடிய அளவில் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். 200 கோடி ரூபாயில் 700 இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.



தொடர்ந்து அவரிடம், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கேட்டகப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
“அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரத்த நாளங்களில் உள்ள அழுத்தங்களில் இருந்து அவரை காப்பதற்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் பிளட் தின்னர் என்கின்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த சிகிச்சைக்கான மருந்தை எடுத்துக்கொண்டு, 4 அல்லது 5 நாட்கள் இடைவெளி விடவேண்டும். பின்னர் தான் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். அதனால் நாளை அதிகாலை அறுவை சிகிச்சை செய்யப்படும்.

காவேரி மருத்துவமனையுடன் நாங்கள் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறோம். நாளை காலை அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை (Open Heart சர்ஜரி) மேற்கொள்ளப்படுகிறது.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியதற்கான உடல் தகுதியுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தப்போக்கு சிக்கல் இருக்காது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் நாளை அதிகாலை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. அறுவை சிகிச்சைக்கும் அமலாக்கத்துறை விசாரணைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

பொதுவாகவே இது (அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை) மனிதாபிமான முறையோடு அணுக வேண்டிய ஒரு செயல். தனக்கு ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளது என்பதை பற்றி தெரியாமலே அமைச்சர் இவ்வளவு காலம் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறார்.

அப்பல்லோ மருத்துவமனையில் பிரபல மருத்துவர்கள் செங்கோட்டுவேல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என உறுதிப்படுத்தி உள்ளார். ஒன்றிய அரசின் இஎஸ்ஐ மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என உறுதி செய்துள்ளனர். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அமைச்சர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் 20,000 அரசு மருத்துவர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான இயற்கை மருத்துவர்கள் உள்ளனர். அமலாக்கத்துறையினர், ஒட்டுமொத்த மருத்துவர்களையும் அவர்களின் நேர்மை தன்மையும் மருத்துவ குணத்தையும் சந்தேகப்படுகிறார்கள். நாளை அறுவை சிகிச்சை செய்த பின் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

ஒருவர் தனக்கு என்ன பாதிப்பு இருந்தாலும் இது போன்றுதான் திறந்தவெளி இதய அறுவை சிகிச்சை செய்து கொள்வாரா என்று அமலாக்கத்துறை தான் விளக்க வேண்டும்” என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: