வியாழன், 4 மே, 2023

ஐடி சோதனையில் ரூ.3.50 கோடி பறிமுதலா?: ஜி ஸ்கொயர் விளக்கம்!

மின்னம்பலம் - Kavi  :  ஜி ஸ்கொயருக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தின் முன்னணி ரியஸ் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயரின் சொத்து மதிப்பு 38 ஆயிரம் கோடி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிறுவனத்துக்காக நில அப்ரூவலுக்கான விதிகள் திருத்தப்படுவதாகவும்,
ஜி ஸ்கொயர் பெயர் வெளியே வந்ததால் புதிதாக 6 நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும், அதன் இயக்குநராக முதல்வரின் மகள், மருமகன் உள்ளனர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஜி ஸ்கொயருக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில், 6 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


எனினும் 3.5 கோடி ரூபாய் ஜி ஸ்கொயர் நிறுவனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “நாடு முழுவதும் சமீபத்தில் ஜி ஸ்கொயருக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து விளக்கமளிக்க விரும்புகிறோம்.
இதுபோன்ற சோதனைகள் எல்லாம் வழக்கமாக நடைபெறுவதுதான். ஜி ஸ்கொயரில் ஒரு வாரமாக நடந்த சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். தொழில் தொடர்பான தேவையான ஆவணங்களையும் சோதனைக்குக் கொடுத்தோம்.
எந்தவொரு அரசியல் கட்சியுடனும், அத்தகைய கட்சியின் குடும்ப உறுப்பினர்களுடனும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை வருமான வரித்துறை சோதனையின் மூலம் உறுதியாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் உறுதி செய்திருப்பதால், நடத்தப்பட்ட விரிவான சோதனைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்கள் நிகர மதிப்பு ரூ.38,000 கோடி என்ற தவறான தகவல்கள் உட்பட அனைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறோம். அதுபோன்று சோதனையின் போது 3.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுவதை முற்றிலும் மறுக்கிறோம்.
எங்கள் நிறுவனம் மீது களங்கம் விளைவிக்க இதுபோன்று பரப்பப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
 

கருத்துகள் இல்லை: